கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கொண்டோட்டி சட்டமன்றத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், டி.வி.இப்ராஹிம். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்.

இந்த ஊரடங்கு நேரத்தைப் பயனுள்ள வகையில் செயல்படுத்த முடிவெடுத்த டி.வி.இப்ராஹிம், ப்ளஸ் டூ தேர்வை எழுத இருக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்த முடிவெடுத்தார். அதன்படி, மாணவர்களுக்கு பொலிட்டிகல் சயின்ஸ் பாடத்தை நடத்தினார்.
கேரளாவில் செயல்பட்டு வரும் முஸ்லிம் ஸ்டூடன்ட்ஸ் ஃபெடரேஷன் (எம்.எஸ்.எஃப்) அமைப்பின் சார்பாக ஏற்கெனவே எஸ்.எஸ்.எல்.சி மாணவர்களுக்கு ஃபேஸ்புக் மற்றும் யூ டியூப் மூலம் பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக ப்ளஸ் டூ மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தப்பட்டன. தினமும் மாலை 4 மணி முதல் 5 மணிவரை நடக்கும் இந்த ஆன்லைன் வகுப்பை 2 லட்சம் பேர் பார்த்துப் பயனடைந்துள்ளனர். தொடர்ந்து இந்த வகுப்புகள் நடக்க இருப்பதாக எம்.எஸ்.எஃப் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டி.வி.இப்ராஹிம் கூறுகையில், “கொரோனா பாதிப்பு காரணமாகச் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் சூழலில், `வீட்டில் இருப்போம்; வீட்டிலிருந்து பாடம் படிப்போம்’ என்ற திட்டத்தின் கீழ் மாணவர்களுக்குப் பாடம் நடத்தியது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.