சச்சினை 12-13 முறை தான் அவுட் செய்துள்ளேன் என அக்தர் சொன்ன தவறான தகவலை குறிப்பிட்டு நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர், சச்சின் டெண்டுல்கர் உடன் விளையாடிய நினைவுகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் பேசியுள்ள அவர், “சச்சின் டெண்டுல்கருக்கு பந்துவீசிய காலம் என்னுடைய நல்ல காலம். அனைத்து காலங்களிலும் சச்சின் தான் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன். ஆனால் நான் அவரை 12-13 முறை அவுட் செய்திருப்பேன்” எனக் கூறியுள்ளார்.
உண்மையில் அக்தர் சர்வதேச போட்டிகளில் சச்சினை 8 முறை மட்டுமே அவுட் செய்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் 5 முறையும், டெஸ்ட் போட்டிகளில் 3 முறையும் அவுட் செய்திருக்கிறார். இதுதவிர 2008ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஒருமுறை அவுட் செய்துள்ளார். இதனைக் குறிப்பிட்டு நெட்டிசன்கள் அக்தரை கிண்டல் செய்துள்ளனர்.
அத்துடன் 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பையின்போது பாகிஸ்தானுக்கு எதிராக சச்சின் அடித்த சிக்ஸரால் லட்சக்கணக்கான ரசிகர்கள் மகிழ்ந்திருப்பார்கள் என்றும், அன்றைய தினம் சச்சினை சதம் அடிக்கவிடாமல் அவுட் செய்ததாகவும் அக்தர் குறிப்பிட்டுள்ளார். அக்தர் குறிப்பிட்ட அந்த போட்டியில் சச்சின் 75 பந்துகளில் 98 ரன்கள் குவித்து அவுட் ஆகியிருந்தார். அவரது விக்கெட்டை அக்தர் தான் வீழ்த்தினார். இருப்பினும் அந்தப் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
‘எடுத்தேன் பாரு ஓட்டம்.. சிதறிய கூட்டம்..’ – சேலத்திலும் ட்ரோன் காமெடி..!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM