புதுச்சேரியில் யூடியூப் பார்த்து ஏடிஎம்-ல் கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரியின் நகர பகுதியான சுய்ப்ரேயின் வீதியில் ஸ்டேட் வங்கியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி வளாகத்திலேயே ஏ.டிஎம். மையமும் உள்ளது. கடந்த 12ம் தேதி இரவு ஏடிஎம் மையத்துக்கு வந்த வாலிபர் ஒருவர், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருடும் முயற்சியில் ஈடுபட்டார். ஏடிஎம்-யை திறந்த அவரால் அதன் உள்ளே இருந்த லாக்கரை திறக்க முடியவில்லை. இதையடுத்து இருசக்கர வாகனத்தின் கிக்கர் மூலமாக ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற போது அலாரம் ஒலித்ததால் அங்கிருந்து தப்பி ஒடிவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக வங்கி அலுவலக மேலாளர் பெரியக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு உள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தபோது, இளைஞர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை போலீஸார் தேடிவந்தது. இந்நிலையில் கொள்ளை அடிக்க முயன்றவரை அடையாளம் கண்ட போலீசார், புதுச்சேரி வம்பாகிரப்பாளையம் பகுதியில் அவரை கைது செய்தனர்.
விசாரணையில் அந்த நபர் விழுப்புரம் மாவட்டம் ஆதிச்சனூர் பகுதியை சேர்ந்த பிரபு என்கிற அப்பு என்பதும், புதுச்சேரி பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டு பழக்கடையில் பணியாற்றுவதும் தெரியவந்தது. பணம் இல்லாத காரணத்தினால் இணையத்தில் யூடியூப் வீடியோ பார்த்து, அதன்மூலம் கொள்ளையடிக்க திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரிடமிருந்த அரிவாள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, பின்னர் சிறையில் அடைத்தனர்.
சென்னைக்கு நடைபயணமாக சென்ற நரிக்குறவர் மக்கள்.. பசியை போக்கி உதவிய போலீசார்..!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM