(கோப்பு புகைப்படம்)
சென்னையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் உடல்களைத் தகனம் செய்யத் தனியாக மின் மயானத்தை ஒதுக்க வேண்டும் எனக் காவலர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன் மூலம் தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணியானது 1267 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் உடல்களைத் தகனம் செய்யத் தனியாக மின் மயானத்தை ஒதுக்க வேண்டும் எனக் காவலர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அண்மையில், ஆந்திராவைச் சேர்ந்த மருத்துவர் கொரோனா பாதிப்பு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரது உடலை அம்பத்தூரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்ய முற்படும்போது, மின் மயானத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் உரியப் பாதுகாப்பு பொருட்கள் இன்றி எரிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தனர். மேலும் சுற்றியுள்ள பொதுமக்களும் மருத்துவர் உடலை மின் மயானத்தில் தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுபோன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்தால் அவர்களை மின் மயானங்களில் தகனம் செய்ய பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருப்பதாகக் காவல் துறையினருக்கு பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்தவண்ணம் உள்ளன. இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களை தகனம் செய்வதற்காகத் தனியாக ஒரு மின் மயானத்தை ஒதுக்க வேண்டுமென பல்வேறு காவலர்கள் தரப்பிலிருந்து உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM