பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
மாமரத்தின் வாசனையை மோந்து உணர்ந்திருக்கிறீர்களா? அதனுள் ஒரு தனித்துவமான வாசனை ஒளிந்திருக்கும்.
சிறுவயதில் எங்கள் வீட்டைச் சுற்றிலும் மாமரங்கள் நிறைந்திருக்கும்.
அதிகாலையில் துயில் எழும்போதும் சரி, இரவில் உறங்கச் செல்லும்போதும் சரி, அம்மரங்களின் வாசனை என் அருகிலேயே நின்றிருக்கும்.
சில வருடங்களுக்கு முன்பு, வீடு புதுப்பித்தபோது அம்மரங்களோடு சேர்ந்து அந்த வாசனையும் வெட்டி வீசப்பட்டது. இன்றும் மாம்பழங்களை உண்ணுவதற்கு முன்பு ஒருமுறை அதை மோந்துப் பார்த்துக்கொள்வேன். என் பழைய வீட்டின் நினைவுகளை அது மீட்டுத்தரும்.

கலையும் மேகங்களைப் போல நம்மை விட்டுச் சென்ற மனிதர்கள் சிலரை, நம்மிடம் அழைத்துவரும் சக்தி வாசனைகளிடம் உண்டு.
எனக்கு ஐந்தாம் வகுப்பெடுத்த கணக்கு டீச்சர் பள்ளி அறையினுள் நுழையும்போதே, `கோகுல் சான்டல்’ பவுடரின் வாசனை அறை முழுக்கப் பரவியிருக்கும்.
அவர் சொல்லிக்கொடுத்த வாய்ப்பாடுகளையும் மீறி, அந்த வாசம் மனதில் பதியும். இன்றும் கோகுல் சான்டல் பவுடரின் வாசனை, அந்தக் கணக்கு டீச்சரை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.
பணி நிமித்தமாக ஒருமுறை சீனாவை ஒட்டியிருக்கும் சிக்கிம் வரை சென்றிருந்தேன். தொடர்ந்து இரண்டு வாரங்கள் அங்குதான் வேலை. கடுங்குளிரில் சூடாகக் கிடைக்கும் உணவுகளை எல்லாம் வயிற்றில் போட்டுக்கொண்டேன். எரியும் நெருப்பில் முன்னும் பின்னும் காட்டப்பட்டு முறுமுறுவென கிடைக்கும் ரொட்டிகளே அங்கு அன்றாட உணவு. ஆனால், இரண்டே நாள்களில் அது சலித்துப்போனது.
வெறுப்போடு அமர்ந்திருந்த எனக்கு காற்றோடு கலந்துவந்த அந்த வாசனை மிகவும் பரிச்சயம். ஆமாம். அது அம்மா செய்யும் மிளகுக்குழம்பின் வாசனை. எப்படி இங்கே வந்தது? உண்மையில் அது வெறிச்சோடிக்கிடக்கும் என் அடி வயிற்றின் ஆசை. ஆசையே வாசனையாக உருமாறி வந்திருக்கிறது.
எத்தனை தூரங்கள் சென்றால்தான் என்ன? அம்மாவின் வாசனையும், அவள் வைக்கும் குழம்பின் வாசனையும் நம் நெஞ்சில் புதைந்தவைகள்தானே.

வியர்வையின் வாசம் அப்பாவின் உழைப்பை நினைவுபடுத்தும்.
மல்லிகைப்பூவின் வாசம் மனைவியின் அன்பை நினைவு படுத்தும்.
பீடிச்சுருட்டின் வாசம் மறைந்த தாத்தாவின் முகத்தை நினைவுபடுத்தும்.
மாத்திரைகளின் வாசம் பாட்டியின் கேன்சரை நினைவுபடுத்தும்.
என் நண்பர்கள் சிலர் என்னிடம் ஹாஸ்பிட்டல் வாசனை வருவதாகச் சொல்வார்கள். அது என் பணியின் அடையாள வாசனை. பெருமையுடன் ஒருமுறை மோந்துகொள்வேன்.
இப்படி நம்மைச் சுற்றி பல வாசனைகள்.
வாசனைகளுக்கு இன்னொரு முகமும் உண்டு.

எனக்குத் தெரிந்த உறவினர் ஒருவருக்கு ரூபாய் நோட்டுகளின் வாசம் என்றால் கொள்ளைப் பிரியம். கொள்ளையும் போனது. விளைவு? இப்போது ஜெயில் கம்பிகளின் வாசனைகளைப் பிடித்துக்கொண்டிருக்கிறார்.
கூலியின் சாக்கடை வாசத்தோடுதான் இங்கு பல உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
ஒவ்வொரு வாசனையிலும் ஒவ்வொரு கதை உள்ளது. நாம்தான் அவற்றை ஏனோ கவனிக்க மறந்துவிடுகிறோம்.
–சரத்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.