கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக உலகின் பெரும்பாலான நாடுகள் போராடி வருகின்றன. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசுத்துறைகள் முழு முயற்சியுடன் இயங்கி வருகின்றன.

மருத்துவர் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறை போன்ற துறையினர் இத்தகைய அசாதாரண சூழலில் அசௌகரியங்களை மறந்து இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.
கொரோனாவுக்கு எதிரான இந்தப் போரில் வெற்றி பெற ஒவ்வொரு தனிப்பட்ட மக்களும் தங்களால் இயன்ற பங்களிப்பை அளித்து வருகின்றனர். மேலும், தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் பிரதமரின் நிவாரண நிதிக்கும், முதல்வரின் நிவாரண நிதிக்கும் நிதியை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளர்கள் இரவு, பகலாக தூய்மை சேவையாற்றி வருகின்றனர். இதோடு நில்லாமல் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சத்து 20,000 ரூபாயை வழங்கி பாராட்டைப் பெற்றுள்ளனர்.
இந்த நிவாரண நிதி குறித்து நம்மிடம் பேசிய ஊட்டி நகராட்சி தூய்மைப் பணியாளர் சங்க நிர்வாகி “ஊட்டி நகராட்சியில் பணியாற்றும் நிரந்த மற்றும் தற்காலிகப் பணியில் ஈடுபட்டுவரும் ஊழியர்கள் இணைந்து எங்களால் முடிந்த இந்த தொகையை வழங்கியுள்ளோம்” என்றார்.

அரசும், சமூக ஆர்வலர்களும் தூய்மைப் பணியாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிவரும் வேளையில், தூய்மைப் பணியாளர்கள் முன்வந்து அரசுக்கு தங்களால் இயன்ற தொகையை வழங்கிய சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதேபோல் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தனது ஒரு மாத சம்பளத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.