பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
காதல் – புவியில் உயிரினங்கள் தோன்றிய காலந்தொட்டு நீண்டு வரும் தொப்புள்கொடி உணர்வு. வரலாற்றின் பக்கங்களை வண்ணமயமாக மாற்றியதில் காதலுக்கு கணிசமான பங்குண்டு.
எத்தனையோ தியாகங்களையும், எண்ணற்ற மாயங்களையும் காதலால் மட்டுமே நிகழ்த்த முடிந்திருக்கிறது.
காதலைத் தீண்டாமல் தம் வாழ்வைத் தாண்டியோர் சொற்பமே!
தமிழ் இலக்கியங்கள் அகத்திணை, புறத்திணை எனப் பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் அகத்திணை இலக்கியங்கள் காதலை தலைமேல் வைத்துக் கொண்டாடின.
காதலுக்கான கொண்டாட்டங்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை. இலக்கியங்கள் கொண்டாடிய காதலும், இணையங்கள் கொண்டாடும் காதலும் ஒன்றா… வெவ்வேறா? என்பது அவரவர் சிந்தனைக்கே!

தமிழ் இலக்கியங்களில் ‘திணை’ என்பது ஒழுக்கமாகும். மனம் ஒன்றுபட்ட தலைவனும் தலைவியும் ஒன்றுகூடி தாம் அனுபவித்த இன்பம் இப்படிப்பட்டது என்று பிறருக்குச் சொல்ல முடியாததாய் மனத்தினுள், அதாவது அகத்தினுள் அனுபவிக்கும் உணர்ச்சியே அகத்திணையாகும்!
காதல் குறித்து அகத்திணைப் பாடல்களில் எண்ணற்ற உவமைகள் கொட்டிக்கிடக்கின்றன. சில பாடல்களை எழுதிய புலவர்களின் பெயர்கள் தெரியாவிட்டாலும், அவர்கள் எழுதிய உவமைகளால் பேர் பெற்ற புலவர்களும் சங்க இலக்கியத்தில் இருக்கின்றனர்.
சில அகத்திணை உவமைகள் சங்ககால மக்களின் காதல் வாழ்க்கையை நமக்கு கண்முன் காட்டுவதாக அமையும்.
1)ஐந்திணை ஐம்பதின் ஒரு உவமை, மெய்யான காதல் வாழ்வு வாழும் கணவனும்,மனைவியும் எவ்வாறு விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்று நமக்கு உணர்த்துகிறது.
“சுனைவாய்ச் சிறுநீரை யெய்தாதென் றெண்ணிப்
பிணைமா னினிதுண்ண வேண்டிக் – கலைமாத்தன்
கள்ளத்தி னூச்சுஞ் சுரமென்பர் காதல
ருள்ளம் படர்ந்த நெறி. “
என்கிறார் மாறன் பொறையனார்.
-( ஐந்திணை ஐம்பது)

பாலை நிலத்தில் காதல் மிகுந்த ஆண் மானும்,பெண்மானும் ஓடிக்களைத்து தாகம் தீர்க்க நீர்வேண்டி, அங்குமிங்கும் அலைகின்றன. ஒரு சுனையில் ஒரு மான் அருந்துவதற்கு மட்டுமே சிறிதளவு நீர் உள்ளது. இந்நிலையில், பெண்மான் நீர் அருந்தட்டும் என்ற உயரிய நோக்கோடு ஆண்மான், தான் நீரைப்பருகுவது போல் பாவனை செய்தது. அதே போல் பெண்மானும் நீரைப் பருகாமல் ஆண் மான் அருந்தட்டும் என்று நீர் அருந்துவது போல் பாவனை செய்தது. சுனையின் நீர் தீரவே இல்லை. தங்கள் காதலினை அந்த இரு மான்களும் வெளிப்படுத்திய விதத்தை நமக்கு இவ்வாறு உணர்த்துகிறது ஐந்திணை ஐம்பது.
இதன்மூலம் காதல் வாழ்விலும், இல்லற வாழ்விலும் கணவனும் மனைவியும் எவ்வாறு தாமாக விட்டுக்கொடுத்து காதலுடன் வாழவேண்டும் என்று மனிதனுக்கு அஃறிணை உயிர்கள் மூலம் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
2) காதலனைப் பிரிந்து வருந்தும் காதலியைத் தோழி தேற்றும் முறையை குறுந்தொகை, யானைகளின் காதலோடு ஒப்பிட்டு அழகாக விளக்குகிறது.
“நசைபெரி துடையர் நல்கலு நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழியவர் சென்ற வாறே.”
-குறுந்தொகை

“பயணம் சென்ற எனது காதலர் என்னை மறந்து போய்விட்டால் நான் என்னடி செய்வேன்?” என்கிறாள் தலைவி. அதற்கு தோழி,”வருந்தாதே. அவர் உன்னை ஒருநாளும் மறக்க மாட்டார். அப்படியே மறந்தாலும் அவர் சென்ற வழி இருக்கிறதே, அது அவருக்கு உனது நினைவினை உண்டு பண்ணும்” என்கிறாள்.
“அப்படியா! அது எப்படி ?” என்கிறாள் தலைவி.
“தலைவன் சென்ற அந்த வழியிலே யானைகள் ஆணும் பெண்ணுமாக ஏராளமாகத் திரியும்.வெயில் தாங்க முடியாது நீர் வேட்கை கொண்டு திரியும் பெண் யானையின் தாகம் தீர்க்க வேண்டி, ஆண் யானை மரப் பட்டைகளைப் பிளந்து தன் இணையான பெண் யானைக்கு அன்புடனும் காதலுடனும் ஊட்டி விடும். அதைக் கண்டதும் தலைவனுக்கு உன் நினைவு வந்துவிடும்.
விரைவில் வருவார், வருந்தாதே!
என யானைகளின் காதலுடன் மாந்தரின் காதலையும் இணைத்துப் பாடியுள்ளார் பாலை பாடிய பெருங்கடுங்கோ.
3) காதல் மிகுந்த தலைவன், தலைவியின் பிரிவுத் துன்பத்தை தனது அற்புதமான உவமை மூலமாக நம் கண்முன் நிறுத்துகிறார் சிறைக்குடி ஆந்தையார்.
“பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு
உடனுயிர் போகுக தில்ல கடனறிந்
திருவேம் ஆகிய வுலகத்
தொருவே மாகிய புன்மை நாம் உயற்கே.”
-குறுந்தொகை

தலைவியின் காதலை அவள் பெற்றோர் அறிந்ததால், அவளை வெளியே சென்று தலைவனைச் சந்திக்க விடாமல் காவல் போட்டனர். அந்தக் காவல் மிகுதியில் தலைவனைச் சந்திக்க இயலாத ஆற்றாமையில் வருந்திய தலைவி, தன் துன்பத்தைத் தோழியிடம் இவ்வாறு தெரிவிக்கிறாள்.
நீர்வாழ்ப்பறவை அன்றில். ஆணும் பெண்ணுமாக ஒன்றையொன்று பிரியாமல் வாழ்வன. அவை குளத்தில் இணைந்து செல்லும்போது, அவற்றின் இடையே பூ ஒன்று இடைப்பட்டு தடையை ஏற்படுத்தினாலும் அந்த ஒரு நொடி பிரிவை ஓர் ஆண்டு கால அளவிலான பிரிவாக எண்ணி வருந்துமாம்.
அந்தப் பறவைகள் போல ஓருயிர் ஈருடல்களாக நாங்கள் வாழ்கிறோம்.
தலைவன் பிரிந்தபோது ஓருயிர் ஓருடலில் வாழும் இழிவு ஏற்படும். அதற்கு, தலைவன் பிரிந்தவுடன் என்னுயிரும் போய்விடுவது மேலானது என்கிறாள் தலைவி.
இப்பாடல் வழி அன்றில் என்னும் பறவைகள் தம்முள் அன்பு நிறைந்த வாழ்க்கை வாழ்வன என்றும், அவை தம்முள் பூ இடைப்படினும் அந்தப் பிரிவை ஓர் ஆண்டு காலப் பிரிவாகக் கருதி வருந்தும் என்னும் செய்தியும் குறிப்பிடப்படுகிறது.
அன்றில் பறவைகள் பூ இடைப்படும் ஒரு நொடி பிரிவை ஓராண்டு பிரிவு போன்று வருத்தத்துடன் தாங்கிக்கொள்ளும்.
ஆனால், என்னால் தலைவனின் பிரிவை ஒரு நொடிகூடி தாங்க முடியாது. அதற்கு அவன் பிரிந்தவுடனேயே என் உயிர் போய்விடுவது மேலானது என்கிறாள் தலைவி.
4) தலைவன் தலைவியைக் காண இரவில் வந்து, அவன் வரும்போது அவனுக்கு ஏதாவது நேர்ந்தால் தலைவி தனித்து வாழாமல் தன்னை மாய்த்துக்கொள்வாள்.
எனவே, இரவில் வரவேண்டாம் என்பதை குரங்கின் காதலை உவமையாகக் கூறி விளக்குகிறார் கடுந்தோட் கரவீரன்.
“கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி
ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
சார னாட நடுநாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே.”
-குறுந்தொகை

தோழி தலைவனை இரவில் வர வேண்டாம் என்று தடுப்பதற்காக, அவன் நாட்டுக் குரங்குகளின் இயல்பைக் கூறி நயமாகத் தெரிவிக்கிறாள்.
கரிய கண்ணையும், தாவுதலையும் உடைய ஆண்குரங்கு, தன் மந்தியிடம் தாவும்போது கீழே விழுந்து இறந்துபோனது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த அதன் இணையான பெண் குரங்கிற்கு ஆண்குரங்கு இன்றி தனித்து வாழ விருப்பம் இல்லை. எனவே, மரமேறுதல் முதலிய குரங்குகளின் அடிப்படைத் தொழிலை அறியாத தனது குட்டியை, சுற்றத்தாரிடம் பொறுப்பாக ஒப்படைத்துவிட்டு, உயரமான மலைமேல் ஏறி அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ளுமாம். அதுபோல தலைவன் தலைவியைக் காண இரவில் வந்து அவன் வரும்போது அவனுக்கு ஏதாவது நேர்ந்தால், தலைவி தனித்து வாழாமல் தன்னை மாய்த்துக்கொள்வாள்.
எனவே, இரவில் வரவேண்டாம் என்கிறாள் தோழி.
5) காதலில் தன்னால் எதுவும் செய்ய இயலாத கையறு நிலையில் தலைவன் இருப்பதை குறுந்தொகை உவமை அழகாக எடுத்துரைக்கிறது.
“இடிக்கும் கேளிர்! நும்குறை யாக
நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன்; தில்ல;
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய்;நோன்றுகொளற்
கரிதே!”
– குறுந்தொகை

என்னை இடித்துக் கூறும் நண்பனே! எனது குறையினை உமது குறையாகக் கருதி, அதனை முடிப்பாய் என்று எண்ணி இத்தனை நாளும் எனது உயிரைப் போகாது தடுத்து நிறுத்தினேன்.
எனது இவ்விருப்பத்தை நிறைவேற்றிவைப்பது தவிர எனக்கு நீ செய்யும் நன்மை வேறு ஒன்றும் இல்லை.
கதிரவன் வெயில் நன்றாகக் காய்கின்ற ஒரு பாறை. அதன்மேல் ஓர் இலையில் வெண்ணெய் வைக்கப்பட்டுள்ளது.அந்தப் பாறையின் பக்கத்தில் வெண்ணெய்யைக் காவல் காக்க ஒருவன் அமர்ந்திருக்கிறான்.
அவன் எத்தகையவன் என்று நினைக்கிறாய்? அவனுக்கு இரு கைகளும் இல்லை, ஊமையாதலால் வாயும் பேச முடியாது! தன் கண்களால் மட்டுமே பார்த்துக்கொண்டிருக்க முடியும்! வெயில் ஏற ஏறப் பாறையின் சூடு அதிகமாகியது.
அதன் மேலிருந்த வெண்ணெயும் உருகி ஓடி வழியத் தொடங்கியது! இந்நிலையில் அதைக் காவல் காப்பவன் என்ன பாடுபடுவான் என்பதை எண்ணிப் பார்! அவனால் வெண்ணெய் ஓடுவதைப் பார்த்துக்கொண்டிருக்கத்தான் முடியுமே தவிர, அதனை எடுத்து வேறொரு இடத்தில் வைக்கவோ,யாரையேனும் அழைத்துக் கூறவோ முடியுமா? அவன் நிலையில்தான் நானும் இருக்கிறேன்! என் துயரைச் சொல்லவும் முடியாமல்,செயல்படவும் முடியாமல் தவிக்கிறேன்! என்று காதலில் தனது கையறு நிலையை தலைவன் கூறுவதாக வெள்ளி வீதியார் விளக்குகிறார்!

காதல் உயிரும் உடலும் போன்றது என்பது நிஜமாயினும்,இல்லை இல்லை அது சுரப்பிகளின் விளையாட்டுதான் என்பது உண்மையாயினும், காதலிப்பதும்
காதலிக்கப்படுவதும் பெரும்பான்மை மனிதர்களின் பேரார்வம் நிறைந்த விருப்பமே!
இலக்கியச் சாளரம் கொண்டு காதல் வாழ்வை நோக்கும் போது, மனம் எனும் மாயக்கிடங்கிலிருந்து உற்பத்தியாகும் காதல் எனும் ஊற்று,பேரன்பு எனும் பேராழியாய் மனிதர்களை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதை உணர முடியும்.
காதல் – கற்காலத்திலிருந்தே மனிதனால் கைக்கொள்ளப்பட்டு வரும் ஓர் இனிமையான உணர்வு! கால காலத்திற்கும் மறக்க முடியாதவாறு மனித மரபணுக்களில் ஆழமாய் பொதிந்து கிடக்கும் அழகிய நினைவு!
–அகன் சரவணன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.