கொரோனா நோய்த்தொற்று காரணமாக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 126 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 3 பேர் கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், மற்றவர்களான 123 பேர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்களில் 43 பேருக்கு மட்டும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. மற்றவர்கள் அனைவரும் திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் அருகேயுள்ள ஜமால் முகமது கல்லூரியில் அரசு அமைத்துள்ள தனிமை மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அடுத்தடுத்த மருத்துவப் பரிசோதனைகளில் அவர்களில் 3 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது தெரியவர, அவர்கள் மீண்டும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து, நோய்த் தொற்று இல்லாத 30 பேர் நேற்று அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது அவர்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் வாழ்விடங்களைச் சுற்றியுள்ள பகுதிகள் உயர் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான சிறப்பு வார்டில் சிகிச்சைப் பெற்று வந்த 43 பேரில், ஈரோட்டைச் சேர்ந்த இளைஞர் பூரண குணமடைந்து கடந்த 10-ம் தேதி வீடு திரும்பினார். இந்த நிலையில் இன்று, 32 பேர் பூரண குணமடைந்து அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
குணமடைந்தவர்களுக்கு மாவட்ட கலெக்டர் சிவராசு மற்றும் திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், மருத்துவக்கல்லூரி முதல்வர் வனிதா உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் மற்றும் செவிலியர்கள் கையெடுத்துக் கும்பிட்டதுடன் கைதட்டி அவர்களை உற்சாகப்படுத்தி வழியனுப்பி வைத்தனர். தொடர்ந்து தூய்மைப் பணியாளர்களும் வரிசையில் நிற்க அவர்களைப் பார்த்து கலங்கியவர்கள், கலெக்டர் வழங்கிய பழங்களை அப்படியே தூய்மைப் பணியாளர்களிடம் கொடுத்தவர்கள், “நாங்கள் குணமடைய கடுமையாக உழைத்தது நீங்கள்தான், நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்” எனக் கலங்கியபடி கிளம்பினர்.

Also Read: பூரண குணமடைந்த 9 கொரோனா நோயாளிகள்.. நேரில் வந்து வழியனுப்பி வைத்த கரூர் ஆட்சியர்!
தொடர்ந்து பேசிய திருச்சி கலெக்டர் சிவராசு, “திருச்சி மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவந்த 43 பேரில், தற்போது திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 29 பேரும், கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவர் என 32 பேர் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர். அதில் 67 வயது முதியவர் ஒருவர் உள்ளார். தீவிர சிகிச்சையின் காரணமாக இவர்கள் குணமடைந்துள்ளார்கள்.
மேலும், இவர்கள் வீட்டில் இன்னும் 14 நாள்களுக்கு தனிமையில் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர்கள் வீட்டில் தனிமையில் இருக்காவிட்டால் மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் மருத்துவக்குழு அறிவுரைப்படி நடக்க வேண்டும்” என்றவர்

“திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வயதுக் குழந்தை உள்ளிட்ட 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வளவு பேர் குணமடைய இரவு பகல் பாராமல் தொடர் சிகிச்சை அளித்துவரும் மருத்துவக் குழுவினர் மற்றும் செவிலியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பிலும், அரசு சார்பிலும் பாராட்டுகள்” என்றார். ஒரே நாளில் 32 பேர் கொரோனா சிகிச்சையின் காரணமாக குணமடைந்த மகிழ்ச்சியில் மருத்துவர்களும் மாவட்ட நிர்வாகமும் உள்ளனர்.