பெருக்கமொடு சுருக்கம் பெற்ற பொருட்கு ஏற்ப,
விருப்பமொடு கொடுப்பர் மேலோர்
என்கிறது நன்நெறி. அதாவது செல்வம் இருக்கும் போதும் இல்லாமல் வறுமையில் வாடும் போதும் விருப்பத்தோடு பிறருக்கு உதவி செய்வார்கள் மேலோர். தமிழகத்தில் அகதிகள் முகாமில் ஈழத் தமிழர்கள் வறுமையில் வாழ்கின்றனர். அவர்களுக்குத் தமிழக அரசு உதவ வேண்டிய சூழ்நிலையில் தமிழக அரசுக்கு அவர்கள் உதவி செய்து, கொடுப்பதற்குப் பணம் தேவையில்லை மனமே தேவை என்பதை நிரூபித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அகதிகள் முகாமில் பத்துக்குப் பத்து சதுரப் பெட்டி போல உள்ள வீடுகளில் சுமார் 4,000த்திற்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அந்த முகாமில் உள்ள தன்னார்வலர்கள் இணைந்து முகாமில் உள்ளவர்களிடம் குருவி சேர்ப்பதைப் போல பத்தும், ஐம்பதுமாகச் சேர்த்து தமிழக அரசுக்குக் கொரோனா தடுப்பு நிதியாக 10,000 ரூபாய் அனுப்பி இருக்கிறார்கள். இச்செயலைக் கண்டு நாமக்கல் அதிகாரிகள் நெகிழ்ந்து போயிருக்கிறார்கள்.

இதுபற்றி பரமத்திவேலூர் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள மக்கள் நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் விநோதன், ” நாங்க அனைவரும் இலங்கையில் செழிப்பாக வாழ்ந்து வந்தோம். அசாதாரண சூழ்நிலையின் காரணமாக அகதிகளாகத் தமிழகத்திற்கு வந்து 30 ஆண்டுகள் கடந்துவிட்டது. தற்போது எங்களுடைய தாயகமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. எங்களோட சந்தோஷத்திலும் துயரத்திலும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் முக்கியப் பங்குள்ளது.
கொரோனா வைரஸால் உலக நாடுகள் முழுவதும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழகமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் துயர்துடைக்கப் பலரும் தங்களால் முயன்ற உதவிகளை நேரடியாக மக்களுக்கும் அரசுக்கும் செய்து வருகிறார்கள். எங்களுடைய பரமத்தி வேலூர் இலங்கை அகதிகள் முகாமில் மக்கள் நற்பணி மன்றம் தொடங்கி கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக முகாமில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவிகளைச் செய்து வருகிறோம்.

மக்கள் நற்பணி மன்றத்தில் இருக்கும் நாங்கள் அனைவரும் பெயின்ட் அடிக்கும் தினக் கூலித் தொழிலாளிகளாக இருப்பதால் லாக் டௌனால் நாங்களும் கடுமையாகப் பாதித்திருக்கிறோம். இருந்தபோதும் கடந்த 30 ஆண்டுகளாக எங்களுக்குத் தமிழக அரசு பல உதவிகளைச் செய்து வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழக அரசுக்கு எங்களுடைய பங்களிப்பாக ஏதாவது வழங்க நினைத்தோம்.
அதையடுத்து எங்க முகாமில் உள்ளவர்களிடம் சிறு சிறு தொகைகளாகச் சேர்த்து தமிழக அரசுக்கு ரூ.10,000 காசோலையாக வழங்கினோம். நாமக்கல் மாவட்ட அதிகாரிகள் எங்களை மனதாரப் பாராட்டியது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. தமிழக மக்களைக் கொரோனா வைரசிலிருந்து காப்பாற்றுவதற்கு இரவு பகல் பாராமல் உழைத்து வரும் மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள், காவல்துறையினர், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டுமென எங்க முகாமில் உள்ள அனைவரும் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறோம்

பரமத்திவேலூர் பேரூராட்சி எங்களுக்குப் பெரும் உதவியாக இருப்பதால் நாங்களும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபடுகிறோம். எங்களால் முடிந்த உதவிகளை இல்லாதவர்களுக்குச் செய்து வருகிறோம்” என்றார்.