‘தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத நிலை விரைவில் உருவாகும்’ என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார். தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் குறித்தும் அரசு தரப்பில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.
முதலமைச்சர் பேசியதிலிருந்து, “இன்றைய காலகட்டத்தில், கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள்தான் முக்கியம். அனைத்து மாநில முதலமைச்சர்களுடனான ஆலோசனையின் போதுகூட இந்த கருத்தைத்தான் பிரதமர் மோடி முன்வைத்தார்.

தமிழக அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக, கொரோனா வைரஸ் தாக்கத்தின் வீரியம் குறைந்துள்ளது. நோய்த் தடுப்பு உபகரணங்கள் வாங்குவதற்காக 31-01-2020-ல் ஆணை வழங்கப்பட்டது. இதற்கான மருந்துகள் வாங்குவதற்கு பிப்ரவரி மாதம் முதல்வாரத்தில் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இதற்காக ரூ.146 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஜனவரி 23-ம் தேதியிலிருந்தே விமான நிலையத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளும் பணிகள் தொடங்கப்பட்டன. மார்ச் மாதம் 7-ம் தேதிதான் தமிழகத்தில் முதன்முதலாக கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. மார்ச் 16-ம் தேதியிலிருந்தே மாநில எல்லைகளில் பரிசோதனைகள் தொடங்கப்பட்டன. மார்ச் 23-ம் தேதி, தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மாநில அரசுஅறிவித்தது.
Also Read: `தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாறும் விடுதிகள்!’ -மாநகராட்சிக் கட்டுப்பாட்டில் ஐஐடி மெட்ராஸ்
மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அறிவிப்பதற்கு முன்பாகவே மாநில அரசால் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு மார்ச் 24-ம் தேதி, மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. அதை நாம் அமல்படுத்தினோம்.

நோய்த் தடுப்புப் பணிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, என்னுடைய தலைமையில் 12 முறை ஆய்வுக்கூட்டங்கள் நடைபெற்றன. மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலம் 3 முறை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்றும் அரசு தரப்பில் கூறப்படும் தகவல்களைக் கேட்டு நோய்த் தடுப்புப் பணிகளில் கவனம்செலுத்த வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்களுடன் இரண்டு முறை காணொலிக் காட்சி மூலம் பேசியுள்ளார்.
தடுப்புப் பணிகள் துரிதமாக நடைபெற வேண்டும் என்பதற்காக 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 12 குழுக்களுக்கும் தனித்தனி பணிகள் ஒதுக்கப்பட்டது. துறைச் செயலாளர் அந்தஸ்தில் இந்த 12 குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பணிக்குழுவிலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர். இரண்டு முறை இந்தக் குழுவினருடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். துணை முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றனர். தலைமைச்செயலாளர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் நான்கு முறை ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார்.

அனைத்து மதத்தினருடன் தலைமைச்செயலகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் . மத்திய, மாநில அரசுகளால் போடப்படும் உத்தரவைப் பின்பற்ற அனைத்து மதத்தலைவர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. தலைமைச்செயலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு தலைமைச்செயலாளர் தலைமை தாங்கினார். அனைத்து மதத்தலைவர்களும் அரசுக்கு ஒத்துழைப்பு நல்குவதாக ஆதரவு தெரிவித்தனர்.
Also Read: `வுகான் ஆய்வகத்திலிருந்து வெளியானதா கொரோனா?’ – பத்திரிகையாளர்களின் கேள்வியும் ட்ரம்பின் பதிலும்
நோய்த் தடுப்புப் பணிகளுக்காக 19 பேர் கொண்ட மருத்துவக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த நோய்த் தடுப்புப் பணிகள் முழுக்க முழுக்க மருத்துவத் துறையைச் சேர்ந்தது. மருத்துவ ஆலோசனை பெற்றுதான் இந்த தடுப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதால், ஏற்கெனவே ஒரு தனிக்குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் 11 பேர் இடம்பெற்றனர். அவர்களிடம் தேவையான ஆலோசனைகளை அரசு பெற்றுக்கொண்டது.

இந்த நோய் எளிதாகப் பரவக்கூடியது. இந்த நோயை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 3,371 வென்டிலேட்டர்கள் உள்ளன. 2,501 வென்டிலேட்டர்கள் அரசின் சார்பில் கையிறுப்பில் உள்ளன. தனியார் மருத்துவமனையில் 870 வென்டிலேட்டர்கள் உள்ளன. 1 லட்சத்து 95 ஆயிரம் பிசிஆர் கிட்டுகள் நம்மிடம் இருக்கின்றன. இவற்றில் 68,000 பிசிஆர் கிட்ஸ் அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனைக்காக வழங்கப்பட்டிருக்கின்றன. நம்மிடம் தேவையான மருத்துவ உபகரணங்கள் இருக்கின்றன; எந்தப் பிரச்னையும் இல்லை. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், அதற்குத் தேவையான உபகரணங்கள் தேவை.
அதைக் கருத்தில் கொண்டுதான் 2,571 வென்டிலேட்டர்கள் புதிதாக வாங்குவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. புதிதாக 35,000 பிசிஆர் கருவிகள், 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் அறிகுறிகள் கண்டறிப்பட்டபோதே, நமக்குத் தேவையான மருத்துவக் கருவிகள் ஏற்கெனவே வாங்கப்பட்டன.

தமிழகத்தில், அரசு சார்பில் 17 ஆய்வகப் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனியார் ஆய்வகங்கள் 10 அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 27 ஆய்வகப் பரிசோனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு, இந்த 27 பரிசோதனை மையங்கள் மூலமாக 5,590 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளலாம்.
தமிழகத்தில் இதுவரை 1,267 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் சீரான முயற்சியின் காரணமாக, இதுவரை 180 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில், இதுவரை 15 பேர் மரணமடைந்துள்ளனர். அரசின் நடவடிக்கைகளால் இன்னும் சில நாள்களில் பாதிப்பு பூஜ்ஜியம் ஆகும். இன்னும் 15 நாள்களில் பாசிட்டிவ் அனைத்தும் நெகட்டிவ் ஆகிவிடும். தமிழக அரசின் முயற்சிகளால் கொரோனா தொற்று இல்லாத நிலை விரைவில் உருவாகும்’ என நம்பிக்கைதெரிவித்தார்.