ஐ.நா. சபையை உருவாக்குவதற்காக 1945ஆம் ஆண்டு ஏப்ரலில், சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற மாநாட்டின் மூலம் உலக சுகாதார அமைப்பு தொடங்கப்பட்டது. அதன் விதிகள் 1948ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி நடைமுறைக்கு வந்தன. அந்த தினம்தான் ஒவ்வோர் ஆண்டும் உலக சுகாதார விழிப்புணர்வு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
தொடக்கத்தில் உலக சுகாதார அமைப்புடன் 26 நாடுகள் இருந்த நிலையில், தற்போது 194ஆக இருக்கிறது. அந்த அமைப்பின் தலைமை அலுவலகம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்திருக்கிறது. உலகிலிருந்து பல்வேறு நோய்களை ஒழிப்பதில் உலக சுகாதார அமைப்பு சிறப்பாக பங்காற்றியுள்ளது. குறிப்பிட்ட சில நோய்களைத் தடுப்பது, கட்டுப்படுத்துவது, ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளை உருவாக்குவது, குடும்ப நலம், சுற்றுச்சூழல் நலம், சுகாதாரப் புள்ளிவிவரங்கள், மருத்துவ ஆராய்ச்சி, இதழ்கள், தகவல்கள் வெளியிடுதல் முதலான பல பணிகளை உலக சுகாதார அமைப்பு செய்து வருகிறது.
உலக சுகாதார அமைப்புக்கு நிதியளிக்க நான்கு வகையான பங்களிப்புகள் உள்ளன. இவை மதிப்பிடப்பட்ட பங்களிப்புகள், குறிப்பிட்ட தன்னார்வ பங்களிப்புகள், முக்கிய தன்னார்வ பங்களிப்புகள் மற்றும் பெருந்தொற்று மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்கான பங்களிப்புகள். 2019ஆம் ஆண்டின் கணக்கின்படி உலக சுகாதார அமைப்பின் மிகப்பெரிய நிதி வழங்கும் நாடாக அமெரிக்கா இருக்கிறது.
553.1 மில்லியன் டாலர்களை வழங்குவதன் மூலம் மொத்த நிதியில் 14.67 சதவிகிதமாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து, பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை 9.67 சதவிகிதம் நிதியை வழங்குகிறது. அதாவது 367.7 மில்லியன் டாலர். மூன்றாவது பெரிய பங்களிப்பாளராக, 8.39 சதவிகிதத்துடன் GAVI தடுப்பூசி அலையன்ஸ் உள்ளது.
இங்கிலாந்து 7.79 சதவிகித நிதியையும், ஜெர்மனி 5.68 சதவிகித நிதியுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மொத்த பங்களிப்புகளில் இந்தியா, 0.48 சதவிகிதமும், சீனா 0.21 சதவிகித நிதியும் வழங்குகின்றன. உலக சுகாதார அமைப்புக்கு வரும் நிதிகளில், போலியோ ஒழிப்புக்குதான் அதிகபட்சமாக 26.51 சதவிகிதி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அத்தியாவசிய சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து சேவைகளுக்காக 12.04 சதவிகிதம் வழங்கப்பட்டுள்ளது.