சென்னை கே.கே.நகர் 14-வது செக்டார், கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (20). இவர், மதுரவாயலில் உள்ள பல்கலைக்கழகத்தில் பி.ஏ ஆங்கிலம் இலக்கியம் 2-வது ஆண்டு படித்து வருகிறார். இவர், 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக்கில் பந்தாவாக வலம் வந்தார். இவரின் பைக், கடந்த பிப்ரவரி மாதம் திருட்டுப்போனது. இதுகுறித்து ராமச்சந்திரன், கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதோடு தன்னுடைய பைக்கின் போட்டோவை நண்பர்களுக்கு வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் ஆகியவை மூலம் அனுப்பி வைத்து திருட்டுப்போன பைக்கைக் கண்டுபிடிக்க உதவுமாறு கூறியிருந்தார்.
Also Read: `மதுபோதையில் மனைவி, மகனை வெட்டிய தந்தை; கொலை செய்த மகன்!’ -சென்னையில் நடந்த கொடூரம் #Lockdown

இந்தநிலையில் ராமச்சந்திரனின் நண்பன் ஒருவன், திருட்டுப் போன பைக்கோடு இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுத்த போட்டோவை வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்திருந்தார். அடுத்து அந்தப் போட்டோவை இன்ஸ்டாகிராமிலும் ராமச்சந்திரன் பார்த்தார். போட்டோவை பதிவு செய்தது யாரென்று ராமச்சந்திரனும் அவரின் நண்பர்களும் விசாரித்தனர். விசாரணையில் திருட்டு பைக்கில் அமர்ந்து செல்ஃபி எடுத்தது சென்னை காட்டுப்பாக்கம், அருள் அவென்யூவைச் சேர்ந்த ஆகாஷ் எனத் தெரிந்தது.
இதையடுத்து ராமசந்திரன் மற்றும் அவரின் நண்பர்கள் சந்தோஷ், தீனா, அபிஷேக் ஆகியோர் ஆகாஷ் வீட்டுக்குச் சென்றனர். அங்கு ஆகாஷிடம், பைக் குறித்து விசாரித்தனர். பின்னர் ஆகாஷை ராமச்சந்திரன் மற்றும் அவரின் நண்பர்கள் கே.கே.நகர், கன்னிகாபுரத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
Also Read: `தடம் மாறிய அம்மாவின் வாழ்க்கை; தட்டிக்கேட்ட மகள் கொலை!’- 6 ஆண்டுகளுக்குப் பிறகு துப்பு துலங்கியது

சென்னை கே.கே.நகரில் உள்ள ராமச்சந்திரன் வீட்டிற்குள் அடைத்து வைத்து விசாரித்தனர். அப்போது ஆகாஷை அரைநிர்வாணமாக்கிய ராமச்சந்திரன் மற்றும் அவரின் நண்பர்கள் அடித்து உதைத்தனர். இதில் ஆகாஷ், சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்த தகவல் ஆகாஷின் அம்மா கன்னியம்மாள் என்கிற மலருக்குத் தெரிந்தது. அதனால் அவர் மகனைப் பார்க்க கே.கே.நகருக்கு வந்தார். அப்போது ஆகாஷ் இறந்ததைப் பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் கன்னியம்மாள் புகாரளித்தார். அதில், என்னுடைய மகன் ஆகாஷ். பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளான். அவனுக்குத் திருமணமாகவில்லை. ஆகாஷின் நண்பர்களான தமிழ்ச்செல்வன், மண்டை என்கிற ஜோசப் ஆகியோருடன் ஊர் சுற்றிவந்தான். 13.4.2020 மாலை 5 மணியளவில் ராமச்சந்திரன் மற்றும் அவரின் நண்பர்கள் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் ஆகாஷ், பைக்கை திருடிவிட்டதாகக் கூறினர். அதனால் ஆகாஷை விசாரிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். ஆகாஷை அழைத்துச் செல்வதாகக் கூறினர். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன்.

இரவு 11 மணிக்கு மேலாகியும் ஆகாஷ் வீட்டுக்கு வரவில்லை. அதனால் ஆகாஷ் குறித்து அவனின் நண்பன் தமிழ்ச்செல்வனிடம் விசாரித்தேன். அப்போது தமிழ்ச்செல்வன், சென்னை கே.கே.நகர், கன்னிகாபுரத்துக்கு உடனடியாக வரும்படி கூறினான். நான் எதற்கு என்று அவனிடம் கேட்டதற்கு நேரில் வாருங்கள் என்று கூறினான். அங்கு சென்றபோது சட்டை இல்லாமல் ஆகாஷ், பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தான். உடனே அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஆகாஷ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். என் மகனை அடித்துச் சித்ரவதை செய்து கொலை செய்த ராமச்சந்திரன் மற்றும் அவனின் நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் 302, 342 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து விசாரித்தார். ஆகாஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். அவரைக் கொலை செய்த குற்றத்துக்காக ராமச்சந்திரன், அவரின் நண்பர்கள் அபிஷேக் (20), சந்தோஷ்குமார், தீனா ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “ராமசந்திரன், ஆசை ஆசையாக வாங்கிய 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக்கைத் திருடியவர்களை நண்பர்கள் மூலம் தேடிவந்தார். இந்தச் சமயத்தில்தான் பைக் குறித்த விவரம் கிடைத்ததும் ஆகாஷின் நண்பன் தமிழ்ச்செல்வனிடம் முதலில் விசாரித்தனர். தமிழ்ச்செல்வன் அளித்த தகவலின்படி ஆகாஷிடம் அடித்து விசாரித்தனர். அப்போது ராமசந்திரனின் பைக்கைத் திருடியது ஆகாஷின் நண்பன் விக்கி எனத் தெரிந்தது.
பைக்கைத் திருடிய விக்கி, அதை ஆகாஷிடம் கொடுத்துள்ளார். அந்தப் பைக்கின் பாகங்களைத் தனித்தனியாக நண்பர்கள் மூலம் ஆகாஷ் விற்றுள்ளார். இந்த வழக்கில் ஆகாஷைக் கொலை செய்த குற்றத்துக்காக ராமச்சந்திரன் மற்றும் அவரின் நண்பர்களைக் கைது செய்துள்ளோம். ராமச்சந்திரனின் பைக்கைத் திருடிய குற்றத்துக்காக விக்கியைத் தேடிவருகிறோம். கொலை வழக்கில் கைதான அபிஷேக் ஏசி மெக்கானிக்காகவும் சந்தோஷ்குமார் எலெக்ட்ரீசியனாகவும் பணியாற்றி வருகின்றனர்” என்றனர்.