ஊரடங்கு உத்தரவால் வெளியே வர முடியாத மத்திய அமைச்சருக்கு அவரது மகன் ஷேவிங் செய்துவிடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
ஊரடங்கு உத்தரவால் நாடே முடங்கிப் போய் உள்ளது. மேலும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் என்ன மாதிரியான இழப்புகள் ஏற்படும் என்பது யூகிக்க முடியாமல் உள்ளது. ஏனெனில் உலகம் இதுவரை ஒட்டு மொத்தமாக இப்படி முடங்கியதில்லை. கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்குத் தனிமைப்படுத்தப்படுவதே சரியான தீர்வு என உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

தனித்திருப்பது என்பது அவ்வளவு எளிதல்ல; ஒவ்வொரு வேலைக்கும் நாம் பிறருடைய உதவியை எதிர்பார்த்தே வாழ்ந்து வருகிறோம். அந்தளவுக்கு நமக்குப் பிறரின் உதவி தேவைப்படுகிறது. பெரும்பாலான நபர்கள் தினமும் முகச்சவரம் செய்து கொள்வதற்குக் கூட கடைக்குத்தான் செல்ல வேண்டி உள்ளது. அதற்கு என்று தொழில் ரீதியாக உள்ளவர்கள் செய்தால்தான் அதில் ஒரு ஒழுங்கு இருக்கும் என்பது பலரின் நம்பிக்கை. சமூக வலைத்தளங்களில் பலரும் முகச்சவரம் செய்து கொள்ள முடியாமல் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து நிலைமையை உணர்த்தி வருகிறார்கள்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் ஒருவருக்கே இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அது தொடர்பான ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு அவரது மகன் முகச் சவரம் செய்து விடும் வீடியோதான் இப்போது சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆக உள்ளது. பொதுவாக எப்போதும் தாடியுடன் தான் பாஸ்வான் இருப்பார். அது அவரது நெடுநாளைய ஸ்டைல். ஆனால் அவர் எப்போதும் அளவாக தாடி வைத்திருப்பார். இப்போது வெளியே செல்ல முடியாத சூழல் உள்ளதால் அவருக்கு தாடி அதிகமாகிவிட்டது. எனவே அவரது மகனின் உதவியுடன் அவர் சவரம் (ட்ரிம்) செய்து கொள்கிறார்.

இந்த வீடியோவை லோக் ஜான் சக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அவரது தந்தையின் தாடியைக் கத்தரிக்கும் வீடியோவை பார்த்த அவரது கட்சி தொண்டர்கள் அதனைப் பகிர்ந்து வைரலாக்கியுள்ளனர். இது குறித்து சிராக், “கடினமான நேரங்கள், ஆனால் ஊரடங்கில் வேறு பக்கம் வெளிச்சம் பெறுவதைப் பாருங்கள். எனக்குள் இந்த திறமை இருந்ததை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை! கொரோனா உடன் போராடுவோம், அழகான நினைவுகளையும் உருவாக்குவோம்” என்று ட்விட்டரில் எழுதினார்
Tough times but see #lockdown also has a brighter sides. Never knew had these skills too !
Let’s fight #Corona19 and create beautiful memories too ! #StayHomeStaySafe ? pic.twitter.com/j8IPHxB1Sa
— युवा बिहारी चिराग पासवान (@ichiragpaswan) April 12, 2020