கேரளாவில் வீட்டு வாடகை கொடுக்க முடியாத 48 தமிழ் குடும்பங்களை வீட்டு உரிமையாளர் வெளியே துரத்திய சம்பவம் பலரையும் வேதனை அடையச் செய்துள்ளது.
ஊரடங்கு உத்தரவால் நாடே நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. மக்கள் வெளியேற முடியாமல் வீட்டிற்குள்ளாகவே முடங்கிப்போய் உட்கார்ந்துள்ளனர். போக்குவரத்துகள் மே 3 ஆம் தேதிவரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கூலித் தொழிலாளர்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். வேலைகள் இல்லாததால் பிழைக்கப் போன இடத்தை விட்டு சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டுள்ளனர்.

இந்தியாவில் இதுவரை கொரோனா நோய்த் தொற்றுக்கு மொத்தம் 10, 815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,190 இந்த நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை பலியானோர் எண்ணிக்கை 353 ஆக உள்ளது. கேரளாவைப் பொறுத்தவரை 178 பேருக்கு கொரோனா நோய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 198 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்த நோய்த் தொற்றுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கேரளாவில் வீட்டு வாடகை கொடுக்க முடியாத 48 தமிழ்க் குடும்பங்களை வீட்டு உரிமையாளர் வெளியே துரத்திய சம்பவம் நடந்துள்ளது. கேரளாவில் கொள்வாயலல் கிராமத்தில் தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் 48 தமிழ் குடும்பங்கள் வசித்து வந்தன. மரம் வெட்டும் தொழிலில் இவர்கள் ஈடுபட்டு வந்த நிலையில் ஊரடங்கால் வருமானம் இன்றி உள்ளனர்.

இச்சூழலில் வீட்டு உரிமையாளர், வாடகை தருமாறு நிர்பந்தம் செய்ததோடு, சில வீடுகளிலிருந்த பொருட்களை வெளியே வீசியும் உள்ளார். கையில் பணம் இல்லாத நிலையில், சில குடும்பங்கள் தற்போது நடுவீதிக்கு வந்துள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM