நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் சின்னண்ணன் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் வரதராஜன். வயது 45. எலெக்ட்ரீஷியன் தொழில் செய்து வருகிறார். இவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தான் வசிக்கும் பகுதியில் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் கொரோனா வைரஸ் பரப்புவதாக அவதூறாகப் பதிவிட்டுள்ளார். அதையடுத்து நாமக்கல் காவல்துறையினர் வரதராஜனைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க அரசு கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் யாராவது கொரோனா வைரஸ் பரவுதல் பற்றித் தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியிருக்கின்றன. நாமக்கல் மாவட்டத்தில் 45 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரதராஜன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தான் வசிக்கும், ”நாமக்கல் சந்தைப்பேட்டைப் புதூர்ப் பகுதியில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த நான்கு பேர் டெல்லி மாநாட்டிற்குச் சென்றார்கள். அவர்கள் நான்கு பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் இரண்டு பேர் வீட்டில் இறந்து விட்டார்கள்” என்று பதிவு செய்திருந்தார்.
அப்பதிவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாவட்ட நிர்வாகம் உடனே ஆய்வு மேற்கொண்டது. இது உண்மைக்கு மாறான செய்தி என்பது தெரியவந்ததையடுத்து காவல்துறைக்குப் புகார் கொடுக்கப்பட்டது. அதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவின் பேரில் வரதராஜனிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.