தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தீவிரமான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும்போதிலும், கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது என்கின்ற தகவல் திருப்பூர் வாசிகளின் தூக்கத்தைக் கலைத்திருக்கிறது.
இந்த 35 பேரும் டெல்லிக்குச் சென்று வந்தவர்களின் தொடர்பில் இருந்தவர்கள் என்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, பல மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் அதிகமாக வசிக்கும் பகுதியாகத் திருப்பூர் இருக்கிறது. இங்குள்ள பனியன் மற்றும் ஆயத்த ஆடைத் தொழிலை நம்பி லட்சக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். ஊரடங்கால் வேலையில்லையே என்கின்ற கவலை ஒருபுறமிருக்க, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் எண்ணிக்கை திருப்பூர் மக்களை கவலையடையச் செய்திருக்கிறது. 11-ம் தேதி வரை திருப்பூரில் 25 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், 12-ம் மாலை வெளியான அறிவிப்பில் அதிர்ச்சியூட்டும் விதமாகத் திருப்பூரில் புதிதாக 35 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து திருப்பூரில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 என்றானது. ஒரே நாளில் உயர்ந்த இந்த எண்ணிக்கை திருப்பூர் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
திருப்பூர் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள் 11 பேர், அவினாசியில் 15 பேர், தாராபுரத்தில் 7 பேர், மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் 2 பேர் என மொத்தம் 35 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காகக் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட இருக்கின்றனர்.

இந்த 35 பேரும் டெல்லிக்குச் சென்று வந்தவர்களின் தொடர்பில் இருந்தவர்கள் என்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர். மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கையாக ஏற்கெனவே 881 பேர் வீடுகளில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களோடு சேர்ந்த புதிதாக பாசிட்டிவ் ரிசல்ட் வந்திருக்கும் 35 பேர் வசித்த பகுதிகள் சீல் வைத்து தனிமைப்படுத்தப்பட்டு, தீவிரமாகக் கண்காணிக்கப்பட இருக்கின்றன.