நேற்று காலை 6 மணியளவில் பஞ்சாப்பின் பட்டியாலா மாவட்டத்தில் உள்ள சனெளர் காய்கறிச் சந்தை அருகே, போலீஸார் ஊரடங்கு கண்காணிப்பில் இருந்தனர். அப்போது கத்தி, வாள் போன்ற ஆயுதங்களுடன் வண்டியில் வந்த நிகாங் எனப்படும் மதக்குழுவினரை விசாரிக்க முயன்றபோது, வாக்குவாதமாகி கலவரம் வெடித்தது. இதில், உதவி துணை ஆய்வாளர் ஹர்ஜித் சிங்கின் கையைக் கலவரக்காரர்கள் துண்டித்தனர். மேலும், இரு காவலர்களுக்கு காயம் ஏற்பட்டது. தேசிய அளவில் இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து காயமடைந்த காவலர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். கை துண்டிக்கப்பட்ட நிலையில், காவலர் ஹர்ஜித் சிங்கிற்கு நிபுணர்கள் மூலம் அறுவைசிகிச்சை நடைபெற்றது. ஏழு மணி நேரத்துக்கு மேலாக நடந்த அறுவைசிகிச்சையில், மருத்துவர்கள் வெற்றிகரமாக காவலர் ஹர்ஜித் சிங்கின் கையை மீண்டும் இணைத்துள்ளனர்.
Also Read: `கத்தி, வாள்களுடன் ஜீப்பில் ஊர்வலம்!’ – தட்டிக்கேட்ட பஞ்சாப் போலீஸுக்கு நேர்ந்த துயரம்
இத குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், ஏழரை மணி நேர தொடர் அறுவைசிகிச்சைக்குப் பிறகு ஹர்ஜித் சிங்கின் கை வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவிற்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ள அவர் ஹர்ஜித் சிங் விரைவில் நலம் பெற தான் விரும்புவதாகவும் பதிவிட்டுள்ளார். தாக்குதல் சம்பவம் தொடர்பாக 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கை மீற முயற்சி செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் எனவும் பஞ்சாப் முதல்வர் எச்சரித்திருக்கிறார்.
I am happy to share that a 7 1/2 hour long surgery has been successfully completed in PGI to repair the severed wrist of ASI Harjeet Singh. I thank the entire team of doctors and support staff for their painstaking effort. Wishing ASI Harjeet Singh a speedy recovery.
— Capt.Amarinder Singh (@capt_amarinder) April 12, 2020
பஞ்சாப் டி.ஜி.பி தின்கர் குப்தா, மருத்துவர்களிடமும் ஹர்ஜித் சிங்கிடமும் தான் பேசியதாகவும், ஹர்ஜித் சிங் மிகுந்த மன தைரியத்துடன் இருப்பதாகவும் ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். இதுபோன்ற கலவரங்ளைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், போலீஸாரைத் தாக்குபவர்கள், அதற்கான கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த வெளிநாட்டுவாழ் மக்கள் நிறைய பேர் தங்களுடைய சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ள நிலையில், அங்கு மே மாதம் 1-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.