பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா. லெக் ஸ்பின்னரான கனேரியாதான் பாகிஸ்தான் அணிக்காக அதிக விக்கெட்களை வீழ்த்திய நான்காவது நபர். 2010-ம் ஆண்டு மேட்ச் பிக்சிங் விவகாரத்தில் சிக்கிய கனேரியாவுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. தன் கரியர் முடிவுக்கு வந்ததற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்தான் காரணம் எனச் சொல்லி வரும் கனேரியா தற்போது மீண்டும் ஒரு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் அக் அளித்த ஒரு பேட்டியில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் லெஜெண்டாகக் கருதப்படும் பிரையன் லாரா 2006-ல் நடந்த ஒரு டெஸ்ட் மேட்ச்சில் கனேரியாவின் பந்துகளை லாவகமாகக் கையாண்டார் என்று குறிப்பிட்டிருந்தார். முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 357 ரன்கள் எடுக்க, அடுத்து களத்தில் இறங்கிய லாரா 216 ரன்கள் குவித்தார். வெஸ்ட் இண்டீஸ் அந்த மேட்சை ஜெயிக்க லாராதான் முக்கிய காரணம்.
லாராவுக்கு கனேரியா பந்து வீசியபோது தொடர்ந்து லாரா பவுண்டரியாக விளாசிக்கொண்டிருந்தார். அப்போது இன்சமாம் கனேரியாவிடம் லாராவை வீழ்த்த ஒரு ஐடியா சொன்னார். இன்னும் மெதுவாகப் பந்து வீசினால் லாரா தானாகவே பவுண்டரி அடிக்க முற்பட்டு அவுட் ஆகிவிடுவார் என இன்சமாம் சொல்ல கனேரியாவும் அப்படியே செய்திருக்கிறார். ஆனால், அப்போதும் லாரா அவுட் ஆகாமல் மேட்சை விளையாடினார். இதுகுறித்து இன்சமாம் பேசியதற்கு கனேரியா எதிர்வினையாற்றியிருக்கிறார்.

“நான் என்னுடைய கரியரில் 5 முறை பிரையன் லாராவின் விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறேன். அவர் ஒரு நல்ல கிரிக்கெட்டர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மட்டும் எனக்கு துணையாக நின்றிருந்தால் என்னால் பல சாதனைகளை நிகழ்த்தியிருக்க முடியும்” என தன் ஆதங்கத்தை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் கனேரியா. கடந்த வருடமும் இதேபோல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது குற்றம்சாட்டினார் கனேரியா. தான் ஒரு இந்து என்பதாலேயே அணியில் பாரபட்சம் காட்டப்படுவதாக அவர் கூறியிருந்தார். இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 261 விக்கெட்களை கனேரியா வீழ்த்தியிருக்கிறார். கனேரியாவின் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பதிலளிக்கவில்லை.
I have taken @BrianLara’s wicket 5 times in my career. He was a good cricketer. If PCB had supported me, I would have broken many big records. @Inzamam08 https://t.co/RJHb3xR1r7
— Danish Kaneria (@DanishKaneria61) April 12, 2020
#GameCorner
கொரோனா அச்சம், லாக்-டவுன் பரபரப்பு, வொர்க் ஃப்ரம் ஹோம் அலப்பறைகள் அத்தனைக்கும் மத்தியில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இதோ ஒரு குட்டி கேம்.