வீட்டிலிருந்து வெளியே செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 1173 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலேயே சென்னைதான் கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ளது. சென்னையில் 205 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சி பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்நிலையில், புதிய உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளது. அதன்படி, சென்னையில் வீட்டிலிருந்து வெளியே செல்லும் ஒவ்வொரு நபரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தொற்று நோய் தடுப்பு சட்டம் மற்றும் பொது சுகாதார சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி முகக்கவசம் இன்றி வருவோருக்கு, வெளியே செல்லும் அனுமதி உரிமம் பறிக்கப்படும் என்றும், அத்துடன் 3 மாதங்களுக்கு அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.