கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நிமிடம் வரை, உலகம் முழுவதும் 18 லட்சத்து 50,220 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 14,215 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை மொத்தம் 9,152 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

308 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை எடுத்துக்கொண்டால், 1,075 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் பாதிப்பு 100-ஐ தாண்டிவிட்டது. இப்படி கொரோனா பதைபதைப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இதன் காரணமாக மாஸ்க், சானிடைஸர், வென்டிலேட்டர் போன்றவற்றின் தேவையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. முக்கியமாக, கொரோனா தொற்று இருப்பவர்களுக்கு மூச்சுத் திணறல் பிரச்னை இருக்குமென்பதால் வென்டிலேட்டர்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. சீனாவில் பலி எண்ணிக்கை அதிகமானதற்கு வென்டிலேட்டர் பற்றாக்குறையும் ஒரு காரணம் என்பது தெரியவந்துள்ளது.

இதனால், கொரோனாவிலிருந்து மீண்டு வரும் சீனா, வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறது. இந்த அசாதாரண சூழ்நிலையை சமாளிக்கும்விதமாக, கோவை ரத்தினம் கல்லூரி மாணவர்கள், குறைந்த விலையிலான வென்டிலேட்டர் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த வென்டிலேட்டரைத் தயாரித்தவர்களில் ஒருவரான எபின், “கொரோனா வைரஸ் காரணமாக வென்டிலேட்டர்களின் தேவை 1,000 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில்கொண்டு அனைத்து மின்னணு அம்சங்களுடன் நாங்கள் ஒரு வென்டிலேட்டரை உருவாக்கியுள்ளோம். இதன் மதிப்பு ரூ.25,000 -க்கும் குறைவுதான். இது, சர்வதேச வென்டிலேட்டர் திட்டத்தின் மறு வடிவமைப்பால் தயாரிக்கப்பட்டுள்ளது. நுரையீரல் அலை அளவைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துதல், ரத்த அழுத்தம், ரத்த ஓட்டம், ஆக்ஸிஜன் கண்காணிப்பு போன்றவற்றுடன் மேம்படுத்தியுள்ளோம்.
இந்தக் காலகட்டத்தில், இது நிச்சயம் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறோம். தற்போது, அரசாங்கத்தின் உரிமத்துக்காகக் காத்திருக்கிறோம்” என்றார்.
“இந்த அசாதாரண காலகட்டத்தில், மாணவர்கள் கண்டுபிடித்துள்ள வென்டிலேட்டரை ஆராய்ந்து, அதை மேம்படுத்தி, பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்” என்கின்றனர் மருத்துவர்கள்.