கொரோனாவினால் உலக நாடுகளின் பொருளாதாரமும் பெரிய அளவில் சரிவைச் சந்தித்துள்ளது, அந்தப் பாதிப்புக்கு இந்தியாவும் தப்பவில்லை. இந்த நிலையில் உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மிகப்பெரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய எண்ணெய் நுகர்வு நாடான இந்தியா இந்தச் சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மில்லியன் கணக்கிலான எண்ணெய் பீப்பாய்களை இந்தியா வாங்கவுள்ளது. இப்போதுள்ள குறைந்த விலையைச் சாதகமாகப் பயன்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்படுவதாகத் துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். மேலும், கொரோனாவால் ஏற்பட்ட சந்தை பாதிப்பைச் சரிக்கட்டும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் எரிபொருள் சேமிப்புத் திறன் மிகக் குறைவுதான் என்பதால் அவசர இருப்பிற்காக எண்ணெயை மட்டுமே வாங்கவுள்ளது. இதற்கிடையில் உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தி நாடுகளான சவுதி அரேபியாவும் ரஷ்யாவும் எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்குப் பத்து பில்லியன் பீப்பாய்களை எதிர்வரும் நாள்களில் குறைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் 15 மில்லியன் கச்சா எண்ணெய் பீப்பாய்களை, கூடுதலாக வாங்கி மங்களூர், பாடூர், விசாகப்பட்டினம் ஆகிய சுத்திகரிப்பு இடங்களில் போர்க்கால அடிப்படையில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். இதை வாங்குவதற்கான நிதியை, மத்திய நிதித்துறை அமைச்சகம் வழங்குவதாக ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், இந்தியா 5.5 மில்லியன் பீப்பாய்களை ஐக்கிய அரபு நாடுகளிடமிருந்து மங்களூர் சுத்தகரிப்பு நிலையத்தில் சேமித்து வைப்பதற்காக வாங்கவுள்ளது. இதனுடன் சவுதியிடமிருந்து 9.2 மில்லியன் கச்சா எண்ணெய் பீப்பாய்களைப் படூர் நிலையத்தில் சேமித்து வைப்பதற்காக வாங்கவுள்ளது. மேலும் விசாகப்பட்டின நிலையத்திற்கு ஈராக்கிலிருந்து கச்சா எண்ணெயை வாங்கவுள்ளது.
இந்தியாவில் மொத்தம் 39.14 மில்லியன் கச்சா எண்ணெய் பீப்பாய்களைச் சேமித்து வைத்துக்கொள்ளும் வசதிகள் உள்ளன. இவை 9.5 நாள்களின் கச்சா எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்யும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் பிரதான் தெரிவித்தார். இதனுடன் கூடுதலாக இரண்டு இருப்பு நிலையங்களையும் அமைக்கும் திட்டத்தில் இந்தியப் பெட்ரோலியத் துறை அமைச்சகம் உள்ளது. இதன்மூலம் இனி வரும் காலங்களில் 47.7 மில்லியன் பீப்பாய்களை,11.57 நாள்களின் கச்சா எண்ணெய் தேவைக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்தியாவில் 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பெட்ரோலின் பயன்பாடானது 2.4 மில்லியன் டன்களாக இருந்துள்ளது. டீசலின் பயன்பாடு 7.3 மில்லியன் டன்களாகவும், விமான எரிபொருளின் பயன்பாடானது 6,45,000 டன்களாகவும் இருந்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக எரிபொருளின் பயன்பாடு கடந்த பத்தாண்டுகளில் எப்போதும் இல்லாத அளவிற்குக் குறைந்துள்ளது. எரிபொருள் பயன்பாடானது நடப்பு ஏப்ரல் மாதத்தில் 66 சதவிகிதம் குறைந்துள்ளது. விமானங்கள் அனைத்தும் இயக்கப்படாத காரணத்தால் விமான எரிபொருளின் பயன்பாடும் 90 சதவிகிதம் அளவிற்குக் குறைந்துள்ளதாக பெட்ரோலியத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், மார்ச் மாதத்தில் பெட்ரோலியப் பொருள்களின் நுகர்வு 17.79 சதவிகிதம் சரிந்து 16.08 மில்லியன் டன்களாக வீழ்ச்சியடைந்துள்ளது என அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் எப்போதும் இந்தியாவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் டீசலின் நுகர்வு அளவும் 24.23 சதவிகிதம் சரிந்து 5.65 டன்களைத் தொட்டுள்ளது.
Also Read: `பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ரூ.8 வரை உயர்த்த முடியும்!’ -விவாதமின்றித் தாக்கலான மசோதா
ஊரடங்கு காரணமாகப் பெரும்பாலான லாரிகளும் ட்ரக்குகளும் இயக்கப்படாததால் டீசலின் பயன்பாடு அதிகளவில் குறைந்துள்ளது. ஊரடங்கு காரணமாக மக்கள் யாரும் வெளியில் வர இயலாததால் பெட்ரோலின் விற்பனை அளவும் மார்ச் மாதத்தில் 16.37 சதவிகிதம் சரிந்து, 2.15 மில்லியன் டன்னாக குறைந்து காணப்பட்டது. இந்தியாவில் பெரும்பாலான விமானங்கள் இயக்கப்படாததால் மார்ச் மாதத்தில் விமான எரிபொருளின் பயன்பாடானது 32.4 சதவிகிதம் சரிந்து 4,84,000 டன்னாக இருந்தது.

Also Read: கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறைவதில்லையே… ஏன்? #DoubtOfCommonMan
தற்போது ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் விலை குறைப்பைப் பயன்படுத்தி பெட்ரோலியப் பொருள்களின் விலை குறைக்கப்படுமா என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஊரடங்கு காலத்திற்குப் பிறகு இயல்பு வாழ்க்கை திரும்பும் போது பெட்ரோல் பொருள்களின் விலை குறைந்து காணப்பட்டால் மக்களுக்கு அது சற்றே ஆறுதல் அளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கும் எனத் துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.
#GameCorner
கொரோனா அச்சம், லாக்-டவுண் பரபரப்பு, வொர்க் ஃப்ரம் ஹோம் அலப்பறைகள் அத்தனைக்கும் மத்தியில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இதோ ஒரு குட்டி கேம்.