தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நேற்று ஒரே நாளில், தமிழகத்தில் 106 பேருக்குக் கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,075 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக, தலைநகர் சென்னையில் 199 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 119 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முக்கியமாக, கடந்த 24 மணி நேரத்தில் கோவையில் 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த மூன்று நாள்களில் மட்டும் கோவையில் 59 பேருக்குக் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கோவை மிகவும் பதற்றத்துடன் காணப்படுகிறது.
நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 13 பேர் போத்தனூர், 4 பேர் ஆர்.எஸ்.புரம், 2 பேர் ஜமீன் ஊத்துக்குளி மற்றும் 2 பேர் ஆனைமலைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். மாநகராட்சி பகுதியில் மட்டும் நேற்று ஒரே நாளில் 17 பேருக்குக் கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. மொத்தமாக, இதுவரை அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 40 பேரும், போத்தனூரில் 37 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வாகனங்கள் பலத்த சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. அத்தியாவசிய மற்றும் அவசரத் தேவைக்காக அல்லாமல் வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. நேற்று ஒரு நாள் மட்டும் 144 தடை உத்தரவை மீறியதாக, 557 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 604 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 533 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,“சாலைக்கு வரும் அனைத்து மக்களிடமும் போலீஸார் கேள்வி கேட்பார்கள். மருத்துவர்கள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவ சிகிச்சைக்குச் செல்வோர் மற்றும் ஊடகங்களை மட்டும் உடனடியாக அனுப்பி வருகிறோம். ஆனால், பலரும் அத்தியாவசியப் பொருள்களை வாங்குகிறோம் என்ற பெயரில் அடிக்கடி வெளியில் வருகின்றனர்.

அப்படி வருபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாநகரில் மட்டும் நேற்று 33 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது. வருகின்ற நாள்களில் இது மேலும் தீவிரப்படுத்தப்படும்” என்றனர் உறுதியான குரலில்.
#GameCorner
கொரோனா அச்சம், லாக்-டவுண் பரபரப்பு, வொர்க் ஃப்ரம் ஹோம் அலப்பறைகள் அத்தனைக்கும் மத்தியில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இதோ ஒரு குட்டி கேம்.