என்னை வேலைக்கு வர வேண்டாம் என சார் சொன்னதும், எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர் என்னை வேலையைவிட்டு நிறுத்தியதைவிட, எதற்காக நிறுத்தினார் என்ற குழப்பம்தான் என்னை அதிகம் உறுத்தியது.
அதைப் பற்றி அவர் வேறு யாரிடமும் பேசவில்லை. மற்ற உதவி இயக்குநர்களிடம், ‘வெட்டி இனிமே வேலைக்கு வர மாட்டான். அவன் வேலையை நீங்க ஷேர் பண்ணிக்குங்க’ என்று மட்டும் சொல்லியிருக்கிறார். `எதற்காக என்னை வேலையைவிட்டு நீக்கினார் என்பது தெரியாமல், மன உளைச்சலுக்கு ஆளானேன். அதன் பிறகு, பல முறை முயன்றும் சார் என்னைச் சந்திக்கவே இல்லை. நான் இல்லாமலேயே ‘நிஜத்தைத் தேடி’ கதையின் படப்பிடிப்பு முடிந்து, எடிட்டிங் நடந்துகொண்டிருந்தது.
அப்போது மேனேஜர் சாய், மீண்டும் என்னைப் பார்க்க வந்தார். `அவன் என்னைப் பார்க்க வந்துக்கிட்டே இருக்கான். வேணும்னா இன்னைக்கு எடிட்டிங் வரச்சொல்லு’ என சார் சொல்லி அனுப்பியிருந்தார். நான் எடிட்டிங் அறைக்கு ஓடினேன். வீட்டுக்கு வரச் சொன்னார். அங்கே போனால், ‘`ஆபீஸுக்குப் போ… வர்றேன்’’ என்றார். இப்படியே இரண்டு நாட்கள் சந்திக்காமலேயே தவிக்கவிட்டவர், ஒருநாள் சந்தித்தார்.
“உங்களுக்கு எல்லாம் நீங்க எந்த இடத்துல இருக்கீங்கங்கிறது புரியலைடா. தாய்க்கோழி தன் குஞ்சுகளை றெக்கைக்குள்ளே பொத்திப் பொத்தி வெச்சுக்கிற மாதிரி நான் உங்களைப் பாதுகாக்குறேன்ல. அதனாலதான் உங்களுக்கு என் அருமை தெரியலை. வெளியே போய்ப் பாருங்கடா, சினிமா எவ்ளோ கஷ்டங்கிறது உங்களுக்குப் புரியும்” என்றார்.
எனக்குக் குழப்பம் அதிகம் ஆனது. “எனக்குத் தெரியும் சார். ஆனா, இப்ப எதுக்கு..?” என இழுத்தேன். “நீ தர்மன்கிட்ட சொன்னதை நான் கேட்டேன்” என்றதும் எனக்கு இடி விழுந்ததுபோல் இருந்தது. அன்று தர்மனும் நானும் படிகளின் கீழே நின்று பேசிக்கொண்டிருந்தோம். 52 வாரம் ‘கதை நேரம்’ முடிந்ததும், படம் எடுக்க வாய்ப்பு தேடிச் சென்றுவிட இருப்பதாக தர்மன் சொன்னார்.
`அவ்ளோ நாள் எல்லாம் இந்த ஆள்கிட்ட யார் வொர்க் பண்ணுவா? எவ்ளோ டார்ச்சர்… 20 எபிசோட் வொர்க் பண்ணோமா… வெளியே போய் படம் பண்ணிட்டு போயிட்டே இருக்கணும். வயசான ஆளுங்ககிட்ட எல்லாம் வேலைசெய்ய முடியாது’ என அன்று நான் சொன்னதை, ஆட்டோ வந்துவிட்டதா எனப் பார்ப்பதற்காக பால்கனிக்கு வந்த சார் கேட்டிருக்கிறார். அதைக் கேட்டதும் சாருக்கு பெரும் கோபம் வந்திருக்கிறது. அதை என்னிடம் காட்ட வேண்டாம் என்பதால்தான் அன்று என்னை உடனே அனுப்பியிருக்கிறார். ‘` `ஆமா சார். வெளியே படம் பண்ண முயற்சி பண்ணப்போறேன்’னு சொன்னேன்’’ என்றேன். அவரோ, ‘`அன்னைக்கு என்ன சொன்னேங்கிறதை தெளிவா மறுபடியும் சொல்லு’’ என்றார். நான் மெளனமாக இருந்தேன். “நீ எனக்கு வெறும் அஸிஸ்டென்ட் டைரக்டரா இருந்திருந்தா, உன்னை வேலையைவிட்டு போன்னு சொன்னதுக்கு அப்புறம் கூப்பிட்டு வெச்சுப் பேசிக்கிட்டு இருக்க மாட்டேன்.
உன்னையும் நான் ஷங்கி மாதிரிதான்டா பார்க்கிறேன்.அதனால தான்டா எனக்கு இது ரொம்ப வலிக்குது. இவ்ளோ சொன்ன பிறகும் `ஸாரி… என்னைச் சேர்த்துக் கோங்க’னு சொல்ல மாட்டேங்கிறல நீ’’ என்றார். “எனக்கு ஒரு மாதிரி இருக்கு சார்” என்றேன். சார் எப்போதும் அவருக்கு கம்ஃபர்டபிளான உதவியாளர்களுடன்தான் இயங்குவார். ஒவ்வொரு பேட்ச்சிலும் எவரேனும் ஓர் உதவியாளரைத் தேர்ந்தெடுத்து அவரை அதற்குத் தயார்செய்வார். சாரால் அப்படி உருவாக்கப்பட்ட நான், அவரை தரக்குறைவாகப் பேசியது அவரைக் காயப்படுத்தியிருந்தது எனப் புரிந்தது.

வழக்கமாக, சார் காலை 4:30 மணிக்கு எழுந்து, ஏழு மணிக்கே ஸ்கிரிப்ட் எழுதத் தயாராகிவிடுவார். என்னை ஏழு மணிக்கு வரச் சொன்னால், நான் 7:45 மணிக்குத்தான் வருவேன். ‘`இதுதான்டா எனக்கு வெட்டிகிட்ட பிடிக்காதது. எப்ப வரச் சொன்னா, எப்ப வர்றான் பாரு’’ என்று தர்மனிடம் குறைபட்டுக்கொள்வார். நான் வந்தவுடன் ஐந்து நிமிடங்கள் திட்டிவிட்டு ‘`சாப்ட்டியா?’’ என்பார். நான் சாப்பிடவில்லை எனத் தெரிந்தால், அவரே என்னை டைனிங் டேபிளில் அமரவைத்துப் பரிமாறுவார். சாண்ட்விச் அல்லது தோசை வரும். எல்லாவற்றையும் அவரே செய்வார். சாப்பிட்டப் பின்னர் தட்டையும் அவர்தான் எடுப்பார். ‘`நான் எடுக்கிறேன் சார்’’ என்றால், ‘`இப்ப நீ என் கெஸ்ட்… நான்தான் செய்யணும்’’ – தட்டை பிடிவாதமாக வாங்கி கழுவி வைப்பார். மற்றவர்களுக்காகச் சமைத்து, பரிமாறுவது அவருக்கு அவ்வளவு பிடிக்கும்.
`கதை நேரம்’ சமயத்தில் அவர் சொல்லச் சொல்ல ஸ்கிரிப்டை எழுதும் பணி என்னுடையது. ஆட்கள் மாறினால் அவரால் எழுத முடியாது. எனக்கு அவர் கொடுத்திருந்த பொறுப்பை, அங்கீகாரத்தை நான் உணரவில்லை, மதிக்கவில்லை என நினைத்தார். நான் செய்தது தவறு எனப் புரிந்தது. அதை அவரிடமே சொன்னேன். மீண்டும் என்னை வேலைக்குச் சேர்த்துக்கொள்ளச் சொல்லி கேட்கக்கூட என்னால் முடியவில்லை என்பதையும் அவரிடம் சொன்னேன். இரண்டு நாட்கள் கழித்து வரச் சொன்னார். சரி எனக் கிளம்பினேன்.
பட்டுக்கோட்டை பிரபாகரின் ‘பாதுகாப்பு’ சிறுகதையை அடுத்து படமாக்க, சார் திட்டமிட்டு இருந்தார். அப்போது தங்கவேலவன் தன் சொந்த பட வேலைக்காகப் போயிருந்தார். மீண்டும் அதே டீம். தர்மன், கெளரி மற்றும் நான். உடன் சரவணன் புதிதாக சேர்ந்திருந்தார். சரவணன், ‘குக்கூ’ ராஜுமுருகனின் அண்ணன். இந்த முறை சொதப்பல்கள் குறைவு. காரணம், தங்கவேலவன். அவரோடு இணைந்து பணியாற்றிய பிறகு, உதவி இயக்குநராகப் பணியாற்றுவதின் நுணுக்கங்கள் எனக்கு ஓரளவு புலப்பட்டிருந்தது. எனக்கும் தங்கவேலவனுக்கும் செஸ் மிகவும் பிடிக்கும். இரவு வேலைகளை முடித்துவிட்டு செஸ் விளையாட ஆரம்பித்தால், விடியும் வரை விளையாடுவோம். அப்படியே கிளம்பி வேலைக்கு வந்துவிடுவோம். விளையாட்டுக்கு இடையிலேயே தங்கவேலவன் எனக்கு நிறைய விஷயங்களைச் சொல்லித்தந்திருந்தார்.

அவர் சினிமாவை மட்டும் நேசிக்கும் ஆள் அல்ல; சமூகம், அரசியல், வாழ்க்கை, தத்துவம் என எல்லாவற்றையும் அலசுபவர். ‘அறம்’தான் அவர் வாழ்க்கை. அதைத் தாண்டி அவரால் எதையும் செய்ய முடியாது. சில ஆண்டுகள் கழித்து, நான் படம் பண்ணலாம் என முடிவுசெய்து மருத்துவத்தை மையமாக வைத்து ‘வியூகம்’ என்றொரு ஸ்கிரிப்ட் எழுதியிருந்தேன். அதை தங்கவேலவனிடம் சொல்லவும், அவர் கருத்தைத் தெரிந்துகொள்ளவும் எனக்கு ஆசை. அவரிடம் சொன்னதும் கேட்பதாகச் சொன்னார். அவர் எளிதில் கதை கேட்க மாட்டார். அவரது உண்மையான கமென்ட்ஸ், நட்பைப் பாதிப்பதாகச் சொல்லியிருக்கிறார். என் கதையைக் கேட்டுவிட்டு, ‘`பிரமாதமா பண்ணியிருக்கீங்க வெற்றி.நல்லா இருக்கு’’ என்றதும் அவரை இம்ப்ரஸ் செய்த சந்தோஷம் எனக்குள் இருந்தது.
பின், அவர் கதை ஒன்றைச் சொன்னார். ‘கிழக்கு பார்த்த வீடு’ என்ற அந்தக் கதை, என்னை மிரட்டியது. நான் எழுதிவைத்த கதை அதற்கு முன்னால் ரொம்பவே சுமார் எனத் தோன்ற, ‘கிழக்கு பார்த்த வீடு’ பாதிப்பில் இன்னொரு கதை எழுத முயன்றேன். அதை முடிப்பதற்குள் `ஆயுள்ரேகை’ என்றொரு கதையைச் சொன்னார். அந்தத் தாக்கத்தில் இருந்து மீண்டு வருவதற்குள் ‘வேங்கச்சாமி’ கதையைச் சொன்னார். இன்று வரை அப்படி ஒரு கதை எழுத முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். அவர் கதைகள் எல்லாமே மிகப் பெரிய புரிதலையும் புதுப் பார்வையையும் உருவாக்கும். அதுதான் தங்கவேலவன் ஸ்பெஷல்.
`பொல்லாதவன்’ ரிலீஸ் ஆகி, பல நாட்களாக தங்கவேலவனிடம் இருந்து படத்தை பற்றிய எந்தக் கருத்தும் வரவில்லை. அப்போது அவர் கோயம்புத்தூரில் இருந்தார். 50 நாட்கள் தாண்டிய பிறகு, அவரிடம் இருந்து அழைப்பு வந்தது. “வெற்றி… இது உங்களுக்கு முதல் படம். முதல் படம் பண்றது எவ்ளோ கஷ்டம்கிறது நம்ம எல்லோருக்குமே தெரியும். அதனால, படத்தை நான் விமர்சனம் பண்ணலை. ஆனா், ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்றேன். இந்தப் படத்தால தமிழ்ச் சமூகத்துக்கோ, தமிழ் சினிமாவுக்கோ எந்தப் பயனும் கிடையாது. ஆனா, படத்தோட தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர் மூணு பேருக்கும் பெரிய பலனைக் கொடுக்கும். இது கொடுக்கப்போற அந்த வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கோங்க’’ என்றார். அடுத்து, ‘ஆடுகளம்’ என முடிவானதும் அவரிடம் சொன்னேன். கதையாக இல்லாமல், ஒரு ஐடியாவாகத்தான் சொன்னேன். ‘`இதை நான் ஒரு உருவகமாத்தான் பார்க்கிறேன் வெற்றி. சேவல் சண்டை விடுற ரெண்டு பேரோட பிரச்னை மட்டும் இல்லை. ஒரு டைரக்டருக்கும் அசிஸ்டென்ட் டைரக்டருக்குமானது, ஒரு டீனுக்கும் அவர்கிட்ட வேலைசெய்ற டாக்டருக்குமானது. எங்கே எல்லாம் அதிகாரம் இருக்கோ, அங்கே வர்ற பிரச்னைகளை இது பேசுது’’ என்றார்.
ஒரு லைனைச் சொன்னால், அது என்னவாக உருவாகும் என்பது வரை சரியாகச் சொல்லிவிடுவார் தங்கவேலவன். `ஆடுகளம்’ முடித்த பிறகு ‘சூதாடி’ என்ற படத்தை நான் இயக்குவதாக இருந்தது. அது தள்ளிப்போன போது, குறுகிய காலத்தில் இன்னொரு படம் முடித்துவிடலாம் என நினைத்திருந்தேன். அதற்காக கதை தேடிக்கொண்டிருந்தபோது தங்கவேலவன்தான் சந்திரகுமார் எழுதிய ‘லாக்கப்’ நாவலைத் தந்து வாசிக்கச் சொன்னார். எனக்குப் பிடித்திருந்தது. `அதை நான் படமாக்கப்போகிறேன்’ என்றதும் எடுத்து செய்யச் சொன்னார். பிறகுதான், அது அவர் ஏற்கெனவே ஸ்கிரிப்ட் செய்துவைத்த நாவல் என்பது தெரியவந்தது. எப்போதும் எதையும் பிறருக்காகக் கொடுக்கத் தயாராக இருக்கும் ஒரு மனிதர் அவர். ஒருசிலரிடம்தான் என்னால் என் நெருக்கடிகளை, குழப்பங்களை, விரக்திகளை வெளிப்படுத்த முடியும்.
தங்கவேலவனிடம் அது சாத்தியம். என் வாழ்க்கையில் எப்போதாவது நான் தவறிப்போகிறேன் என்ற சந்தேகம் வரும்போது அவரிடம் பேசுவேன். ஒரு தெளிவு பிறக்கும். எனக்கு ஒரு வழிகாட்டி போன்றவர். எனக்கு அண்ணன் கிடையாது. தங்க வேலவனை நான் அந்த இடத்தில் வைத்திருக்கிறேன். தங்கவேலவனால்தான் ‘விசாரணை’ சாத்தியமானது. சொல்லப்போனால், எனக்குள் இருந்து ‘விசாரணை’ வரவில்லை. என் வழியாக `விசாரணை’யை எடுத்தவர் தங்கவேலவன். என்னை எப்போதும் சார்ஜ் செய்துகொண்டிருக்கும் ஒரு மிகப் பெரிய பலம் அவர். `இன்றைய வெற்றி மாறன் உருவாக மிக முக்கியமான காரணம் தங்கவேலவன்’ எனச் சொல்வேன்.
– பயணிப்பேன்…