கோடம்பாக்கத்தில் எனது வீடு இருக்கும் தெருவில் ராஜசேகர் சாரை அடிக்கடி பார்ப்பேன்!

‘நிழல்கள்’ படத்தில் ‘இது ஒரு பொன் மாலைப் பொழுது’ என பீச் காற்றில் தலை கலைய ஏகாந்தமாய் வானம் பார்த்துப் பாடும் அதே ராஜசேகர் சார். உச்சி வெயிலில் கிறுகிறுத்து பழைய ஸ்கூட்டரில் அவர் தெருவில் போகும் இன்றைய காட்சி, வாழ்வின் நகைமுரண்களில் ஒன்று.

அவ்வப்போது கடக்கும்போது,கோடம் பாக்கத்து ரீ-சார்ஜ் கடைகளில் டாப் – அப் பண்ணிக்கொண்டு இருக்கிறார் ’16 வயதினிலே’ டாக்டர். நேற்றுகூட நான் விகடன் ஆபீஸ் வந்தது, ஒரு காலத்தில் ரஜினிகாந்த்துக்குப் போட்டி என வர்ணிக்கப்பட்ட நளினிகாந்த்தின் ஆட்டோவில்தான்!

‘பத்திரிகை பெரியப்பா’ சின்னக் குத்தூசி அய்யாவை, குண்டு பல்பு எரியும் பத்துக்கு எட்டு திருவல்லிக்கேணி மேன்ஷனில் பார்த்த நாளில், ‘ஊருக்கே ஓடிர்றா முருகா!’ என அலறியது மனசு. 27சி-யில் அவித்த கடலை கொறித்தபடி எதிர்ப்பட்ட முத்துலிங்கம் அய்யா, பவர் ஹவுஸ் டீக்கடையில் தனித்து நின்ற நா.காமராசன் அய்யா, பழைய உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்கு எப்போது போனாலும் சட்டைப் பை நிறையப் பேனாக்களோடு ‘படை இல்லாத மன்னவனாய்’ உட்கார்ந்திருக்கும் பி.பி. ஸ்ரீனிவாஸ் என நான் ஏற்றி வந்த ஏராள மான பிம்பங்களைப் போட்டு உடைத்த புண்ணியஸ்தலம்… சென்னை!

உண்மையில் என்போன்று ஏராளமான கனவுகளுடன் வரும் முதல் தலைமுறை இளைஞர்களுக்கு, சென்னை… ஒரு மாய மான். நான் விகடன் நிருபன். பிறகு, லிங்குசாமி சாரிடம் உதவி இயக்குநராக சினிமா கற்று, என் முதல் படத்தை இயக்கிக்கொண்டு இருக்கிறேன். கனவுக்கும் யதார்த்தத்துக்கும் நடுவில் அனுதினம் அலைந்து திரியும் ஆயிரமாயிரம் நண்பர்களில் நானும் ஒருவன். எங்கெங்கோ கிராமங்களில் இருந்து, சினிமா, மீடியா, இலக்கியம், அரசியல் என லட்சியங்களோடு சென்னைக்குக் கிளம்பி வரும் முதல் தலைமுறை இளைஞர்கள் முட்டி முளைத்து எழுவதற்குள்… ஒவ்வொரு தினமும் ஒரு யுகம்!

காலையில் எழுந்து தெருவில் கால் வைக்கும் போதே, யாராவது இந்தக் கேள்வியோடு வந்துவிடுவார்கள், ”அப்புறம் பாஸ்… என்ன போயிட்டிருக்கு?”

கோடம்பாக்கத்தின் மிகப் பெரிய கெட்ட வார்த்தை இதுதான். ”ம்… ஜூலியா ராபர்ட்ஸுக்கு லூஸ்மோஷன் போயிட்டிருக்கு…’ என்பது என் மைண்ட் வாய்ஸ்.

”அது… முயற்சிகள்தான் பாஸ். ‘மங்காத்தா’ மாஸ் ஹிட்டாம்ல!” என நழுவுவது நிதர்சனம். தினம் தினம் இப்படி எதிர்ப்படுபவர்களிடமும், குடும்பத்தாரிடமும், உறவுகளிடமும் பதில் சொல்ல முடியாத கேள்விகள் துளைத்தெடுக்க, தவித்து அலைகிறவர்கள் எத்தனையோ பேர்.

நேற்று காலை… எழுந்து வெளியே போனால், எதிர் டீக்கடையில் என்னை வரவேற்கும் முதல் நண்பன், ‘உலக சினிமா’ சீனு. ‘ஸாரி ஐ யம் அவுட் ஆஃப் சர்வீஸ் ஆஃப்டர் 5 பி.எம்.’ என்ற டி- ஷர்ட் வாசகங்களுடன் நிற்கும் சீனுவின் உறக்கம் இல்லாத விழிகளில் நள்ளிரவில் பார்த்த உலக சினிமா வழிகிறது. ‘தெய்வத் திருமகள்’ படம் ‘ஐ யம் சாம்’ படத்தின் தழுவல் என்பது நமக்குத் தெரியும். ஆனால், ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ ஒரு ஃப்ரெஞ்ச் படத்தின் தழுவல் என்பது சீனுவுக்கு மட்டுமே தெரியும். ஆஸ்கர் வாங்கிய பிறகு ஆற்ற வேண்டிய உரையை இப்போதே தயாரித்துவிட்ட தாராளன்.

”புதுசா ஒரு ஸ்கீம் போட்ருக்கேன். ஒரு படம் எடுத்தா… ஒரு படம் ஃப்ரீ. தமிழ் வித் தெலுங்கு. புரொடியூஸர் இருந்தா சொல்லு!”

”மொதல்ல ஒரு டீ சொல்லு சீனு!”

பிரசாத் ஸ்டுடியோ எதிரே இருக்கும் ஹோட்டலுக்கு டிபன் சாப்பிடப் போனால், எல்லா டேபிள்களிலும் நடிகர்களின் கூட்டம். ‘அழகர்சாமியின் குதிரை’ அப்புக்குட்டி சிரிக்கிறார்.

”நல்ல கதைன்னா, ஹீரோவாப் பண்ணலாம். மத்தபடி கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டா மெயின்டெய்ன் ஆவறதுல நமக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நாம நடிகன் தலைவா!”- தொப்பை குலுங்க ஷைனிங் ஏறிய அப்புக்குட்டி.

” ‘பரிமளா தியேட்டர்’ ஷூட்டிங் கூப்பிட்டாங்க. 30 ரூபா கிடைச்சா, வீட்டுக்கு அனுப்பிட்டு, நிம்மதியா இருக்க லாம் சார்!” என வெண்பொங்கல் சொல்கிறான் ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ சங்கர். சூரி, ‘ஜெமினி’ பாலாஜி, மிமிக்ரி செந்தில் என ஏரியா எங்கும் வளரும் கலைஞர்கள்.

பிரசாத் ஸ்டுடியோவுக்குள் நுழைந்தால், ”வணக்கம் பாஸ்’ என வாசமாக வருகிறார் அஜயன் பாலா.

”நீங்கதான் தலைவா ஆல்வேஸ் யூத்து!’ என்றால் சிரிக்கிறார் அஜயன்.

”டைரக்டர் விஜய்கூட அடுத்த பட டிஸ்கஷன் ஆரம்பிச்சுருச்சு. நம்ம கதை ‘காதல் கதையின் ஏழாம் அத்தியாயம்’ ஸ்க்ரிப்ட் பக்காவா ரெடி. இமயமலை போயிட்டு வந்து பிக்கப் பண்ண வேண்டி யதுதான் பாஸ்.’

”இமயமலையா?’

”பாஸு… நாங்களும் ரஜினிதான்.  ஈஷா குரூப்போட சேர்ந்து டூ வீக்ஸ் ரிஷிகேஷ் போறேன். இப்போ அனுராக் காஷ்யப்போட ‘தட் கேர்ள் இன் எல்லோ பூட்ஸ்’ போறேன். பின்றோம் பாஸ்!’

பிரசாத்தில் இருந்து வெளியே வரும் போது உரசிக்கொண்டு வந்து நிற்கிற காரில் யுகபாரதி அண்ணன்.

”ஏர்றா தம்பி…’

ஃபுல் ஏ.சி-யில் சென்னைக் காந்தலுக்கு கொஞ்சம் ரிலீஃப். யுகபாரதி அண்ணன் தான் சென்னைக்கு வந்ததும் எனக்குத் தங்க அறையும் அடைக்கலமும் தந்தவர். டிரஸ்ட்புரம் ஏரியாவில் நள்ளிரவு வரை அவரோடு தினம் தினம் கனவுகளும் கவிதைகளும் இலக்குகளும் பேசித் திரிந்த கணங்களுக்கு இன்னும் ஈரம் சேர்க்கிறது இந்த ஏ.சி.

”இமான் ஸ்டுடியோல இருந்து வர்றேன்… ‘கும்கி’ டியூன்ஸ் பிரமாதமா வந்திருக்குடா!”

‘கும்ஸிக்… கும்ஸிக்’ என கார் அதிர்கிறது.  

”ஈவினிங் ‘ஒஸ்தி’ ரெக்கார்டிங்குக்கு ஹைதராபாத் போறேன்டா… தஞ்சாவூர்ல இருந்து கிளம்பி வந்து, நாமளும் பல ஃப்ளைட்கள்ல பறந்துட்டோமேடா.’

சாலிகிராமம் விஷால் ஆபீஸுக்கு எதிரே ‘உதயன்’ பட இயக்குநர் சாப்ளின் வருகிறார். ”நண்பா… ரெண்டு ஸ்க்ரிப்ட் இருக்கு. க்யூட்டா ஃபேமிலி சப்ஜெக்ட் ஒண்ணு. ஹாட்டா மாஸ் ஃபீல்ல ஒண்ணு. தீவிரமா டிஸ்கஷன் போயிட்டு இருக்கு நண்பா!”

மதியம் மொபைலில் மை.பா. அண்ணன் வருகிறார். விகடனில் எனக்கு சீனியர். ஆழ்வாரடியன். அரசியல் குரு. அமைச்சர் களில் இருந்து அ.தி.மு.க. ஆபீஸ் வாட்ச்மேன் வரை அண்ணனுக்குப் பழக்கம். அந்தப் பக்கம் வைகோவுக்கு மிஸ்டு கால், இந்தப் பக்கம் விஜயகாந்த்துடன் ஆலோசனை, நடுவில் செங்கோட்டையனுடன் லஞ்ச் என ஆல்ரவுண்டர்.

”டேய்… இப்போதான் கேப்டனைப் பார்த்துட்டு வர்றேன். தமிழக அரசியல்ல நாமளும் ஒரு சொழட்டு சொழட்டிரு வோம்றா…’

”அண்ணே… அடுத்த எலெக்‌ஷன்ல ஒரு எம்.பி-யாவோ, எம்.எல்.ஏ-வாவோ உங்களைப் பார்த்துரணும்ணே…”

”சொழட்டுவோம்றா… சொழட்டு வோம்றா…’

மாலை வீட்டுக்கு வந்து டி.வி-யைப் போட்டால், ‘அண்ணா ஹஜாரே உண்ணா விரதம் முடிவுக்கு வந்த பின்னாடியும் அதோட அனல் இன்னும் அரசியல் அரங்குல போகலைங்கிறதைத்தான் ராகுல் காந்தியோட இந்தப் பேச்சு சொல்லுது. ‘புதிய தலைமுறை’க்காக டெல்லியில் இருந்து கனகராஜ்…’ எனக் கையில் மைக்குடன் தம்பி கனகராஜ் பொளக்கிறான். ‘கலைஞர்’ டி.வி-க்கு மாற்றினால், டைரக்டராகிவிட்ட நண்பன் ஸ்ரீராம் பேசிக்கொண்டு இருக்கிறான், ”ஆக்சுவலா ‘டூ’ பார்த்தீங்கன்னா… ஃபுல்லி ஒரு காமெடி பேக்கேஜாதான் எடுத்திருக்கேன்!”

இரவு ஃப்ரான்ஸிஸ் கிருபாவைச் சந்திப்பதோடு இந்த நாள் முடியக்கூடும். கல்வாரி மலையில் இருந்து இயேசுவே இறங்கிவந்துவிட்டதைப்போல, வானம்போல் கைகள் விரித்து என்னை நோக்கி வருகிறார் ஃப்ரான்ஸிஸ். ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ – இது பூங்குன்றன் சொன்னது. ‘யாதும் ஊரே, யாதும் கேளீர்’- இது ஃப்ரான்ஸிஸ் கிருபா சொன்னது. மனிதர்களை மட்டும் அல்ல… மரம், செடி, கொடி, புல், பூண்டு, பறவைகள் யாவும் நம் உறவினர்கள்தான் எனச் சொன்ன அன்பன். நண்பன். அற்புதமான எழுத்தாளன்!

”ராஜு… உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்றா… இது ரெண்டு பெருங்கலைஞர் களோட சந்திப்பு. ஏன்டா, இதுக்கெல்லாம் கவர்மென்ட்ல ஹாலிடே அறிவிக்க மாட்டா னுங்களா?”

”அதானே!’

”ஆனா, நீ பெரிய ஆளா வருவடா… நான் என்னாவேன்னு கேக்குறியா? நான் ஏற்கெனவே பெரிய ஆளுதான்!”

அறைக்கு நடக்கும்போது தோன்றுகிறது. இந்தப் பெருநகரத்தின் மீது ஒவ்வொரு நாளும் எத்தனைக் கனவுகள் பொழிகின்றன.

என்னோடு முதல் தலைமுறை இளைஞர் களாக வந்த இளைஞர்கள் அவ்வளவு பேரும் வாழ்வின் அடுத்தடுத்த படிக்கட்டு களில் ஏறி நிற்கிறார்கள். பத்திரிகைதான் உலகம் என வந்தவன் சினிமாவுக்கு ஓடி விட்டான்; சினிமாதான் இலக்கு என வந்தவன் ஃபாஸ்ட் ஃபுட் வைத்துவிட்டான்; புரட்சி செய்ய வந்தவன் ஐ.ஏ.எஸ். படிக்கிறான்; பாடலாசிரியன் ஆக வந்தவன் பி.ஆர்.ஓ. ஆகிவிட்டான்; பிடிவாதமாக உழைத்து டைரக்டர், நடிகன், டி.சி.எஸ். சவுத் சோனல் மேனேஜர், பரபரப்பான வசனகர்த்தா, பின்னியெடுக்கிற ஜர்னலிஸ்ட் எனத் தங்கள் நாற்காலியைப் பிடித்துக்கொண்டவர்கள் எத்தனை பேர்?

லிங்குசாமி சார் அடிக்கடி சொல்வார், ”முருகன்… இது நம்ம கையில கிடைச்ச விளக்கு. மழை, புயல், வெள்ளம்னு எது வந்தாலும், இதை அப்பிடியே பொத்திப் பாதுகாத்து அணையாமக் கொண்டுபோய்ச் சேர்த்துரணும்!”

உழைப்பையும் மனசையும் மட்டுமே சுமந்து பெருநகரம் வரும் ஆயிரமாயிரம் இளைஞர்களின் கையில் ஆயிரமாயிரம் விளக்குகள். அணையாமல் உரிய இடத்தில் எரிவது எத்தனை; பாதியில் அணைந்து கருகியது எத்தனை என நினைக்கும்போது மனம் எங்கெங்கோ அலைகிறது!

சமீபத்தில் ஒரு நண்பன், கணவனை இழந்த தனது அக்காவுக்கு மறுமணம் செய்துவைத்தான். மணமகனும் ஒரு ‘தோழர்’ என்பதால், சீர்திருத்தக் கல்யாணமாகவே நடந்தது அது. நண்பனின் ஊர் தஞ்சாவூர்ப் பக்கம் கிராமம். இன்னும் சாதிய மரபுகள் உடைபடாத ஊர். அந்த ஊரிலேயே இள வயதில் கணவனை இழந்த ஐந்தாறு பெண்கள் இருக்கிறார் கள். அதனால், அக்காவுக்கு நடக்கும் கல்யாணத்துக்கு ஊரில் எதிர்ப்பு இருக்கும் எனப் பயந்தான் நண்பன். அதையும் தாண்டி ஊர் உறவுக்காரர்களுக்கு பத்திரிகை அனுப்பி இருக்கிறான். ஆச்சர்யமாக சென்னையில் நடந்த கல்யாணத்துக்கு 30-க்கும் மேற்பட்டவர்கள் ஊரில் இருந்து வந்திருந்தார்கள்.

நண்பனின் பெரியப்பா வீட்டில் போகக் கூடாது என எதிர்ப்பு. அவர் அதிகாலையில் வயலுக்குப் போகிறேன் என, கைலி வெற்றுடம்புடன் பஸ் ஏறி சென்னைக்கு வந்துவிட்டார். மறுமணம், கலப்பு மணம், சீர்திருத்தக் கல்யாணம் என்ற மூன்று முக்கியமான அம்சங்களுடன் நடந்த நல்ல நிகழ்வு. அந்த அக்காவின் முகத்தில் மிளிர்ந்துகிடந்த வார்த்தைகளைக் கடந்த சிறு புன்னகை, ஒரு முதல் தலை முறை இளைஞன் சாதித்தது.

”டேய்! சாதிச்சுட்டடா பாரதி” விடை பெறும் முன் நண்பனிடம் சொன்னேன்.

”நிம்மதியா இருக்குண்ணே!” என நெஞ்சில் கை வைத்தான்.

இப்படித்தான் ஏற்ற வேண்டும்… இன்னும் ஆயிரமாயிரம் விளக்குகளை!

(போட்டு வாங்குவோம்)

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.