‘சொந்தம் விட்டுப்போனா சொத்து விட்டுப்போகும்’னு சொல்றத வேதவாக்கா வெச்சுக்கிட்டு, ராஜகம்பளத்து நாயக்கருக அவக சொந்தத்துக்குள்ளயே சுத்திச் சுத்தி சம்பந்தம் பண்ணிக்குவாங்க. கூட்டுக் குடும்பமா இருக்கிறதால ஒரு வீட்டுக்குள்ள ஒரு ஊரே இருக்கும். வடவீரநாயக்கன்பட்டி கிராமத்துல ஒரே வீட்டுல கூட்டுக் குடும்பமா எறநூத்தி ஐம்பத்தாறு பேரு இருக்காங்க. இப்பவும் பார்க்கலாம்.

வேத்து சாதி பொம்பளைய யாராவது கல்யாணம் செஞ்சுக்கிட்டா அவங்கள ஜாதிப் பிரஷ்டம் செஞ்சு, இனத்தவிட்டே ஒதுக்கி வெச்சுருவாங்க. அவங்களுக்கு வாரிசுப்படி சொத்து பத்து சேராது. அதோட உறவே அந்து போயிரும்!

கல்யாணங் காட்சினு சொன்னா, ஜமீன் வீட்டுப் பொண்ணுக ஒரு பவுசும் காட்ட முடியாது. அரண்மனைய விட்டு வெளிய வர முடியாது. பெட்டிக்குள்ள பூட்டி வெச்ச பொம்ம மாதிரிதான். அவங்களோட ஆசாபாசம் என்னன்னு கேக்கமாட்டாங்க. கழுத்த நீட்டுன்னா நீட்டணும். கலாசாலைக்குப் போக முடியாது. அறிவ விசாலப்படுத்திக்க முடியாது. கல்யாணத்துக்குப் பெறகும் பேருக்குத்தான் ஜமீன்தாரிணி. அவங்களால ஜமீன் பரிபாலனத்துல கை வைக்க முடியாது. ஜமீன்தாரு களுக்குத்தான் அனுபோகமும் அதிகாரமும்.

ஜமீன்தாரு குடும்பம்னு சொன்னா கேக்கவே வேணாம். சொத்துக்கு மட்டுமில்ல… பொண்ணு குடுக்கறதுலயும் எடுக்கறதுலயும் போட்டி இருக்கும். இதுல ஊடால தலைய நொழச்சு முன்ன நின்னு கல்யாணத்த ஜாம் ஜாம்னு நடத்தித் தர்ற பொறுப்பு ‘மாப்ள நாயக்கர்’ குடும்பத்துக்குத்தான் இருக்கு.

வருச நாட்டு ஜமீன் கதை – 5

ஒவ்வொரு ஜமீன்லயும் ஜமீன்தாருக மது, மங்கைனு போகம் தேடி, மனம் போனபடிக்கு துன்மார்க்க வாழ்க்கை நடத்திக்கிட்டிருப்பாங்க. இப்பிடியே போனா… ஜமீனே சிதறிச் சேதாரமாப் போயிருமில்லையா? அதனால அவங்களோட குடும்பத்த அனுகூலமா நடத்தறதுக்கும் ஜமீன் கணக்கு வழக்க கவனமா பாத்துக்கிறதுக்கும் ஒத்தாச செய்றவங்கதான் இந்த மாப்ள நாயக்கருக. தன் சொந்தக்காரவுகள்ல, தனக்கு வேண்டியவங்களையே மாப்ள நாயக்கரா உருவெடுத்து வெச்சுக்குவாங்க.

இப்பிடித்தான் ஆயக்குடி ஜமீன்தாரு செத்தப்போ மதுரை கலெக்டரு, சென்னப் பட்டண கவர்னருக்கு ஒரு கடுதாசி போட்டாரு. அதுல இருந்த விசயத்தைப் பார்த்தா உடம்பு கூசிப் போயிடும்.

‘ஆயக்குடி ஜமீன்தாரு ஒழுங்கா கப்பம் கட்றாரு. வல்லவருதான். ஆனா, நல்லவரு இல்ல! அவருக்கு வந்த பொம்பள சீக்கு அவரையே கொன்னுருச்சு. பொண்டாட்டிகூட கொழந்த இல்லாம செத்துப் போச்சு. அதுக்குப் பெறகு வாரிசு வேணும்னு சொல்லி ஏககாலத்துல மூணு பொண்டாட்டி கட்னாரு. ஒண்ணுத்துக்கும் வாரிசு இல்லாமப் போச்சு! 1869-ல அவரோட இருவத்தாறே வயசுல ஜமீன்தாரு சாகும்போது மூணு விதவைகளுக்கும் வயசு என்ன தெரியுமா..? ஒண்ணு அஞ்சு வயசு, ஒண்ணு ஏழு வயசு, ஒண்ணு பத்தொன்பது வயசு!’

இந்த மாதிரி குண்டக்க மண்டக்க ஏதாவது விபரீதம் நடக்காம இருக்கத்தான் ஜமீன்தாருகளுக்கு கடிவாளம் மாதிரி மாப்ள நாயக்கருக வேணுங்கிறது!

நம்ம ஜமீன் ஐயா சென்னப் பட்டணத்துலயிருந்து ஜனகத்த தூக்கிட்டு வந்தது, அவளுக்கு வைகை ஆத்துக் கரையில ‘சின்ன அரண்மனை’ கட்ட உத்தரவு போட்டது அம்புட்டு சமாசாரமும் மாப்ள நாயக்கர் கூட்டத்துக்குத் தெரிஞ்சு போச்சு.

அப்புறமென்ன..? ஜனகத்த மறக்கடிக்க ஒரு ரோசனை செஞ்சுதான் அந்த முடிவெடுத்தாங்க. நம்ம ஜமீன்தாருக்கு சடுதியா ஒரு கல்யாணத்தைச் செஞ்சு வெச்சுரலாம்னு நெனச்சு மாம்பாறை போனாங்க.

மாம்பாறை ஜமீன்தாரு குமார கதிரைய நாயக்கரு தம் மகளுக்குத் தோதான மாப்பிள்ள வேணும்னு தேடிக்கிட்டிருந்த சமயம். அவரு மகளுக்கு வயசு பதிமூணுதான்! வேலுத்தாயம்மா அப்பேர்பட்ட அழகி. மாப்ள நாயக்கர் கூட்டத்துக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு.

மாம்பாறை ஜமீன்தாருகிட்ட லௌகீக விஷயமெல்லாம் பேசி முடிச்சுட்டாங்க. நம்ம கண்டமனூர் ஜமீன்தாருக்குத் தன் மகளக் கொடுக்கறதுக்கு பூரணமா சம்மதிச்சாரு. அந்தச் சங்கதிய கலந்து பேசத்தான் கண்டமனூர் அரண்மனைக்கு மாம்பாறை ஜமீன்தாரு வந்திருக்காரு. ஆனா, நம்ம ஜமீன்தாரு என்னடான்னா ஜம்புலிபுத்தூர்ல வந்து படுத்துக் கெடக்காரு.

நம்ம ஜமீன்தாருகிட்ட எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கல்யாணமே வேணாம்னு தலையக் குலுக்குறாரு. ஜனகா சகவாசம் வேணாம்னு எடுத்துச் சொன்னாங்க.

நரச்ச தல மாப்ள நாயக்கரு, மறுபடி இன்னொரு ஜமீன்தார் பத்திச் சொன்னாரு. கன்னிவாடி ஜமீன்தாரு ஒரு வெவரமான தேவதாசி மேல கண்ணு வெச்சுட்டாரு. அவ பேரு சொரூப ரெத்னா. அவளுக்கு பாட்டு, பரதம் நல்லா வரும். செக்கச்செவேர்னு, எது எங்கன இருக்கணுமோ அது அங்கன கச்சிதமா செஞ்சு பிரம்மா பூமிக்கு அனுப்பியிருந்தாரு. ஜமீன்தாரு, சாதி சனங்களை மறந்து போனாரு. அவ மேல மாதம் மும்மாரியாப் பொழிஞ்சு அவள நெரந்தர ஆசநாயகியா வச்சுக்கிட்டாரு

அவளுக்குக் கொழந்த பொறந்ததும் அவங்க பேர்ல ஏகப்பட்ட நஞ்ச புஞ்ச நெலங்களையும் எழுதி வச்சுட்டாரு. ஜமீன் பரிபாலனம் ஒழுங்கா நடக்காததால சனங்களுக்கு ஜமீன் மேல வெறுப்பு வந்துருச்சு.

சொரூப ரெத்னாவுக்கு எந்த ரூபத்துல யோகம் அடிச்சிருந்தாலும், இதெல்லாம் ஜமீன் குடும்பத்துக்கு நட்டக் கணக்குல போயிச் சேருமில்லையா? கன்னிவாடி ஜமீன் அழிஞ்சே போச்சு.

இந்த கன்னிவாடி கதையை நம்ம வருச நாட்டு ஜமீனுக்கு எடுத்துச் சொன்னாங்க. நம்ம ஜமீன்தாருக்குக் கல்யாணம் செய்துக்கப் பிடிக்கலைனாலும் அரண்மனைக்கு வந்த மாம்பாறை ஜமீன்தார மதிச்சு விருந்து குடுக்கணுமில்லையா? விருந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது அந்தத் தாக்கீது வந்துச்சு.

அதாவது… வேலுத்தாயம்மா தங்களுக்குத்தான் பாத்தியப்பட்ட மொறப்பொண்ணுனு சொல்லி, கடவூர் ஜமீன்தாரு வழிமறிச்சு நிக்கிறாராம். அப்பேர்பட்ட வடிவுக்கரசி வேலுத்தாயம்மாவ வருச நாட்டு கண்டமனூர் ஜமீனுக்கு விட்டுக்கொடுத்தா, தன்னோட கௌரத கொறஞ்சுபோகும்னு நெனைக்கிறாராம். அத மீறி, கட்டிக்குடுக்க முயற்சி செஞ்சா… அவள சிறையெடுத்துக் கொண்டு போயிர்றதா மிரட்டியிருந்தாரு.

மாம்பாறை ஜமீன்தாருக்கு விருந்து ருசிக்கல. கவலை தொத்திக்கிச்சு. உடனே ‘கண்டமனூர் ஜமீன்தாருதான் வீரத்துல வித்தகர்னு சொல்றாங்களே… நீங்க எம் மக வேலுத்தாயம்மாளை மீட்டுக்கொண்டு வரமுடியுமா?’னு மாம்பாறை ஜமீன்தாரு நம்ம ஜமீன்தாரை உசுப்பேத்தி ரோசப்படுத்தினாரு.

வருச நாட்டு ஜமீன் கதை – 5

ஜமீன்தாரும் மாப்ள நாயக்கரு கூட்டமும் இத சவாலா எடுத்துக் கிட்டாங்க. எல்லாரும் ஒண்ணுகுள்ள ஒண்ணு… யாருக்கும் ரத்தக் காயம் இருக்கக்கூடாதுனு சொல்லி, ஒரு சூத்திரம் போட்டாங்க.

சொன்னபடிக்கு, மறுநாள் ஜமீன்தாரும் மாப்ள நாயக்கர் கூட்டமும் மாம்பாறை போய்ச் சேர்ந்தாங்க. கொட்டிவாசல்ல ஆரம்பிச்சு எல்லா எடத்துலயும் கடவூர் பரிவாரம் சுத்தி நிக்குது. பலமான காவல் இருந்துச்சு.

மாப்ள நாயக்கர் ஒருத்தர் பொம்பள வேஷம் போட்டுக்கிட்டாரு. பெரிய மாம்பழக் கூடைய சொமந்துக்கிட்டு கொட்டிவாசல் பக்கமா நொழஞ்சு அங்கன இருந்த சேவுகக்காரங்களுக்குப் போக்குக்காட்டி வேலுத்தாயம்மா இருந்த அறைக்குள்ள நொழஞ்சாரு. தான் இன்னாருன்னு அடையாளம் சொன்னதும் வேலுத்தாயம்மா சந்தோஷப்பட்டுப் போனா. கூடையிலருந்த மாம்பழத்தைக் கீழ கொட்டிட்டு, அதுல வேலுத் தாயம்மாள உக்கார வெச்சு லகுவா வெளியே தூக்கி வந்துட்டாரு. கூடையிலிருந்து மெதுவா வெளியே எட்டிப் பார்த்த வேலுத்தாயம்மாவ மொத மொதலா ஜமீன்தாரு பார்த்தாரு. அவரு நெஞ்சுக்குள்ள படபடன்னு அதிரடியா ஒரு சுகம் பரவுச்சு. மனச கட்டுப்படுத்திக் கிட்டாரு.

வேலுத்தாயம்மாவை கூட்டிக்கிட்டு கண்டமனூருக்குள்ள நொழையும் போது அரண்மனை வாசல்ல இருந்த பட்டுப்போன கொன்ற மரம் ஜமீன்தாரப் பார்த்துச் சிரிக்கற மாதிரி இருந்துச்சு. இப்பத்தான் ஜமீன்தாருக்கு இக்கட்டான நெலம. ஆத்துல ஒரு காலு, சேத்துல ஒரு காலு வச்சுக்கிட்டுத் தவிக்கிற யானை மாதிரி தவிச்சாரு. ஆயிரந்தான் இருந்தாலும், வேலுத்தாயம்மாவத் தொட்டுத் தூக்கி வந்தாச்சு. அவளத்தான் கல்யாணம் செய்யணும்னு சொல்லி, கூட இருந்த மாப்ள நாயக்கருக சமாதானஞ் செஞ்சாங்க.

வருச நாட்டு ஜமீன் கதை – 5

Also Read: வருச நாட்டு ஜமீன் கதை – 4

முறைப்படியான வாரிசு இல்லாட்டி, இவ்வளவு பெரிய ஜமீன் சின்னாபின்னமாயிரும்னு கவலையோட சொன்னாங்க. நம்ம ஜமீன்தாருக்கு வாரிசு முக்கியமா, அவரோட ஆயுசு முக்கியமானு முடிவு எடுக்கவேண்டிய தருணம் ரொம்ப கிட்டக்க வந்துருச்சு.

அதே சமயத்துலதான் ஜமீன் சுவாமி தன்ன மறந்துருவாரோனு ஏக்கத்துல, ஜனகம் எலி பாஷாணம் குடிச்சிட்டுதா சேதி வந்து சேந்துச்சு!

– தொடரும்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.