கும்பகோணம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பெரியவர் ஒருவர், கேன்சர் நோயால் துடித்த தன் மனைவிக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் சைக்கிளில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். `அவளோட வலிக்கு முன்னால தூரம் ஒண்ணும் பெருசுல்லை’ என அவர் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த மகாராஜபுரம் மணல்மேட்டு ஆற்றங்கரைத் தெருவை சேர்ந்தவர் அறிவழகன். கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய இரண்டாவது மனைவி மஞ்சுளா வயதான தம்பதிகளாக இவர்களுக்கு மன வளர்ச்சி குன்றிய நிலையில் 7ம் வகுப்பு படிக்கும் விஷ்ணு என்ற மகன் உள்ளார். அறிவழகன் தன் குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் வைத்துள்ளார்.
இந்தநிலையில் கேன்சர் நோயால் பாதிக்கபட்ட மனைவி மஞ்சுளாவை கடந்த ஆறு மாதமாக சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அறிவழகன் அழைத்து சென்று வருகிறார். மாதம் ஒரு முறை கீமோ தெரபி சிகிச்சை அளிப்பதற்காக ஜிப்மர் மருத்துவமனைக்குச் அழைத்து சென்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் 31ம் தேதி டாக்டர்கள் சிகிச்சைக்கு வர சொல்லியுள்ளனர்.

ஆனால், கொரோனா பரவுவதை தடுப்பதற்காக ஊரடங்கு பிறபிக்கபட்டதால் போக்குவரத்து நிறுத்தபட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அறிவழகன், தன் மனைவியை எப்படி அழைத்து செல்ல போகிறோம் என்ற கவலை சூழ்ந்துள்ளது. இதற்கிடையில் மஞ்சுளாவிற்கு கன்னத்தில் கேன்சர் பாதிப்பு இருப்பதால், வலி அதிகமாகியிருக்கிறது. ஒருபுறம் மனைவி வலியால் துடிக்க மறுபக்கம் மனவளர்ச்சி குன்றிய மகன் என இவர்களை எண்ணி உள்ளுக்குள்ளேயே கலங்கியிருக்கிறார். இந்த நிலையில் எப்படியாவது மனைவி மஞ்சுளாவை சிகிச்சைக்கு அழைத்து செல்ல வேண்டும் என முடிவெடுத்த அறிவழகன், அதற்காகத் தயாரானார்.
மகனை அருகில் இருந்தவர்களை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு கடந்த 29-ம் தேதி சாப்பாடு தயார்செய்து எடுத்துக்கொண்டு, அதிகாலை 5 மணிக்கு தன்னுடைய சைக்கிளில் மனைவியை உட்கார வைத்து ஓட்டிக் கொண்டு புதுச்சேரிக்கு கிளம்பி விட்டார். அக்கம் பக்கத்தினர், `ஏம்பா ஊரடங்கு முடிஞ்சதும் போய் காமிச்சா என்ன?’ என கேட்க, `அவ வலியால் துடிக்கிறதை பார்க்கிற சக்தி எனக்கில்லை’ என கூறிவிட்டு கட்டிய வேட்டியுடன், தோளில் துண்டை மட்டும் போர்த்திக்கொண்டு கிளம்பியுள்ளார்.

அணைக்கரை, வடலுார், கடலுார் வழியாக 130 கிலோமீட்டர் துாரம் கொண்ட புதுச்சேரி மருத்துமனைக்கு இரவு 11 மணியளவில் போய் சேர்ந்துள்ளனர். ஜிப்மர் மருத்துவமனையில், அவசரச் சிகிச்சை பிரிவு மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருந்த நிலையில், தன் மனைவியின் நிலையையும், ஊரில் இருந்து சைக்கிளில் வந்தபோது ஏற்பட்ட கஷ்டத்தையும் மருத்துவர்களிடம் எடுத்து சொல்லியிருக்கிறார். அதைக் கேட்ட மருத்துவர்கள் உடனே சிகிச்சையைத் தொடங்கியதுடன் அறிவழகனுக்கும் அவர் மனைவிக்கும் வேண்டிய உதவிகளை செய்து கொடுத்துள்ளனர். மேலும் இரண்டு நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்த டாக்டர்களிடம், `இந்த உதவியை என் உசுரு உள்ளவரை மறக்கமாட்டேன்’ எனக் கூறி அங்கிருந்து புறப்பட்டுள்ளார் அறிவழகன்.
இதனை அறிந்த சமூக ஆர்வலர்கள் பலரும், கும்பகோணத்தில் உள்ள அறிவழகன் வீட்டிற்கு சென்று அவரை பாராட்டியும், உதவியும் வருகின்றனர். இதுகுறித்து அறிவழகனிடம் பேசினோம். “எனக்கு என் குடும்பம்தான் உலகம். என்னுடைய முதல் மனைவி சுசிலா, பல ஆண்டுகளுக்கு முன்னர் நெஞ்சுவலியால் இறந்து விட்டார். மூத்த மகனான ரவி சென்னையில் வேலைபார்த்து வருகிறான். முதல் மனைவி இறந்த பிறகு மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டேன். இளைய மகன் மனவளர்ச்சி குன்றியவன். குறைந்த வருமானம் வந்தாலும் வாழ்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது.
Also Read: வலியால் துடித்த மனைவி; கும்பகோணம் டு புதுச்சேரி!-முதியவரின் சைக்கிள் பயணத்தால் மிரண்ட மருத்துவர்கள்
ஆனால், கடவுள் எனக்கு காசை கொடுக்கவில்லை கஷ்டத்தை மட்டும் தொடர்சியாக கொடுத்து வந்தார். ஆறு மாதத்திற்கு முன்னதாக மஞ்சுளாவிற்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டது கன்னத்தில் தாங்க முடியாத வலி வந்து துடித்துபோக எல்லோரும் ஜிப்மர் மருத்துவமனைக்கு போய் காட்ட சொன்னார்கள். அங்கு சென்று பரிசோதனை செய்ததில் கன்னத்தில் கேன்சர் கட்டி இருப்பதாக டாக்டர்கள் கூற எனக்கு உலகமே இருண்டதுபோல் ஆனது.
சரி, என மனதைத் தேற்றி கொண்டு இருக்கிறவரை அவளை கண் கலங்காமல் பார்த்து கொள்ள தொடங்கியதுடன் மாதம் ஒரு முறை சிகிச்சைக்காக அழைத்துச் சென்று வந்தேன். இந்த மாதத்திற்கான சிகிச்சைக்குச் செல்ல வேண்டிய நேரத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. `எப்படி போகப் போறோம். நம்மகிட்ட பணம் இல்லை. நம்ம சொன்னா யாரும் கேட்க மாட்டாங்க’ என எண்ணி சைக்கிளிலேயே செல்ல முடிவெடுத்தேன்.

மஞ்சுளா, `ஏங்க அவ்வளவு தூரம் சைக்கிளிலேயேவா போவது?’ என என்னை கஷ்டபடுத்தக் கூடாது என வலியைப் பொறுத்து கொண்டு சொல்ல, `வலியை விட தூரம் ஒண்ணும் பெருசு இல்லை’ என அவளிடம் கூறினேன். எனக்கு அவளும், அவளுக்கு நானும் உலகம் என்பதால் மறு பேச்சு பேசாமல் கிளம்பினாள். வழியில் இரண்டு இடங்களில் சைக்கிளை நிறுத்தி விட்டு சாப்பிட்டோம். கன்னத்தில் வலியிருந்தாலும் ஒரு இடத்தில்கூட அதை அவள் முகத்தில் காட்டவில்லை.
ஒரு இடத்தில் போலீஸார் மறைத்து எங்க போறீங்க என கேட்க நான் கூறியதை கேட்டு மெய்சிலிர்த்து போனதுடன் பாசத்துக்கு பக்கத்துல எதுவும் நிற்க முடியாது என தட்டி கொடுத்து டீயெல்லாம் வாங்கி கொடுத்து, `ஜாக்கிரதையா போய்ட்டு வாயா’ என தட்டி கொடுத்து அனுப்பினர்.
Also Read: ஊர் திரும்ப முடியாமல் சிக்கிய மகன்; ஸ்கூட்டரில் 1,400 கி.மீ! -நெகிழவைத்த தாயின் பாசப் பயணம்
பிரமிப்படைந்த டாக்டர்களும் சிகிச்சை அளித்ததுடன் ஒரு மாதத்திற்கு தேவையான மருந்து, மாத்திரைகளை கொடுத்து அனுப்பி வைத்தனர். அவர்களிடம், `என் மனைவியைக் காப்பாத்தி கொடுங்கய்யா. அவளுக்கு ஒன்னும் ஆகாதுல்ல’ என நா தழு தழுக்க கேட்டேன். `உன் மனைவி மேல, நீ வச்சுருக்கிற அன்பு அவங்களை காப்பாத்தும். தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மறக்காமல் வர வேண்டும்’ என்றனர். அவளை காப்பதுறதுதான் என் வேலை. எப்படி மறப்பேன்? நிச்சயம் அவளைக் காப்பாற்றுவேன்’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.