உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின்பு தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெற்றிருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் தடாலடியாக தெரிவித்துள்ளார்.
38 வயதான மகேந்திர சிங் தோனி உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. அதனால், அவர் அடுத்ததாக எந்தப் போட்டியில் விளையாடப் போகிறார் என்று அவரது ரசிகர்கள் ஏக்கத்தில் உள்ளனர். ஐபிஎல் போட்டிகளிலாவது அவர் விளையாடுவார் என்று பார்த்தால் அதுவும் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் தோனிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், வீரேந்திர சேவாக், கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே ஆகியோர், தோனி மீண்டும் அணிக்குத் திரும்ப வாய்ப்பில்லை என்றே கருத்துகளைத் தெரிவித்தனர்.
தோனிக்கு ஆதரவாக இந்தியாவிலிருந்து வாசிம் ஜாஃபர், சர்வேதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெற்ற பிராட் ஹாக் மற்றும் நாசர் ஹூசைன் ஆகியோர் கருத்துகளை பதிவிட்டு வந்தனர். அண்மையில் பேசிய நாசர் ஹூசைன் “தோனி இப்போது சென்றுவிட்டால் மீண்டும் கிடைக்கமாட்டார்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில் “தோனி அவரின் திறமையின் காரணமாக இந்தியாவுக்கு ஏராளமான பெருமையான தருணங்களை பெற்றுக்கொடுத்துள்ளார். அவர் கிரிக்கெட்டிலிருந்து தகுந்த மரியாதையுடன் ஓய்வு பெற வேண்டும். அவர் ஏன் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை இப்படி இழுக்கிறார் என புரியவில்லை. அவர் உலகக் கோப்பை முடிந்ததும ஓய்வை அறிவித்திருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் தொடர்ந்த அக்தர் “உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவை வெல்ல வைக்க தோனியால் முடியவில்லை. அப்போதே அவர் ஓய்வுப்பெற்று இருக்க வேண்டும் என நான் நினைத்தேன். ஆனால் அது ஏன் என்பதை அவர்தான் கூற வேண்டும். உலகக் கோப்பை முடிந்தப் பின்பு “ஃபேர்வெல்” போட்டியை அவர் ஆடிவிட்டு கிரிக்கெட்டுக்கு “குட்பை” சொல்லியிருக்க வேண்டும். அவரின் சாதனைகளுக்கு நற்சான்றாக அது அமைந்திருக்கும்” என கூறியுள்ளார்.
கொரோனா கொடுமை: பிரான்ஸில் அழுகி துர்நாற்றம் வீசும் சடலங்கள்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM