கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசை சமீபத்தில் குற்றம் சாட்டி கடிதம் எழுதியிருந்தார், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். இதற்குப் பதிலளித்து அறிக்கை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, “அரசு எதுவும் செய்யவில்லை என்பதைப் போல் சித்திரித்து, பரிந்துரை செய்கிறேன் என்ற பெயரில், அரசின் மீது பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் இத்தருணத்தில் சுமத்தி எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளது வருத்தம் அளிக்கிறது. இது அவரது சந்தர்ப்பவாத அரசியலையே காண்பிக்கிறது” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், `கொரோனாவில் அரசியல் செய்யும் முதல்வர்… சில கேள்விகளும் சந்தேகங்களும்’ என்ற தலைப்பில் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கொரோனா பரவத் தொடங்கியபோது, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தி.மு.க வலியுறுத்தியது. கொரோனா குறித்து சட்டமன்றத்திலேயே எச்சரித்தது தி.மு.க. ஆனால், அப்போது `நோய் வருவது இயற்கை’ என்றவர் முதல்வர். அனைத்துக் கட்சி கூட்டம் தேவை என்று சொன்னது தி.மு.க. அது வேண்டாம் எனச் சொல்லிவிட்டு மதத்தலைவர்களை அழைத்து கூட்டம் நடத்தியவர் முதலமைச்சர். யார் செய்வது அரசியல்.
சந்தர்ப்பவாதம் பற்றி முதல்வர் பேசலாமா… மிகப்பெரிய சுகாதாரப் பேரிடர் பிரச்னையில் முதலில் சுகாதாரத்துறை அமைச்சர் ஒதுக்கப்பட்டார். சுகாதார செயலாளரை முன்னிலைப்படுத்திய நிலையில், அவரையும் புறந்தள்ளியது யார்? தலைமைச் செயலாளரையே தனது செய்தித் தொடர்பாளராக மாற்றி அரசியல் செய்வது முதல்வர்தான். தலைமைச் செயலாளரை செய்தித் தொடர்பாளராக்கி செய்யப்படும் கழுத்தறுப்பு அரசியல் ஏன்? நோய்த் தொற்று மூன்றாம் நிலைக்குச் செல்லும் அபாயம் என தலைமைச் செயலாளர் 9-ம் தேதி சொல்கிறார்.

இரண்டாம் நிலையில்தான் இருக்கிறது என்று 10-ம் தேதி முதல்வர் பேட்டி கொடுக்கிறார். யாரை ஏமாற்ற இந்தக் குழப்பம். கேரளாவுக்கு முன்பாகவே, பிபிஈஏ கிட்ஸ், முகக்கவசம் வாங்கிவிட்டோம் என்று சொல்லிவிட்டு, பிரதமரிடம் “இனிமேல்தான் வாங்க வேண்டியிருக்கிறது” என்று சொன்னது ஏன்?
9000 கோடி கேட்டதற்கு மத்திய அரசு 870 கோடி கொடுத்திருக்கிறது. அவர்களிடம் நம் உரிமையை வற்புறுத்த கையாலாகாமல், மக்களிடம் கெஞ்சிக்கொண்டிருப்பது ஏன். ரேபிட் டெஸ்ட் கிட் 8-ம் தேதி வரும், 9-ம் தேதி வரும், அதன்பின் லட்சக்கணக்கான மக்களுக்கு பரிசோதனை செய்யப்படும் என அறிவித்துவிட்டு இன்னும் சோதனை கருவிகளே வந்து சேராதது ஏன்.. என்ன அரசியல் நடக்கிறது… யார் தடுக்கிறார்கள்?. தமிழகத்தில் 13 வகையான தொழிற்சாலைகள் செயல்படும் என அறிவித்துவிட்டு, அரை மணி நேரத்தில் அறிவிப்பை ரத்துசெய்தது யாரால்?

பிற மாநிலங்கள் எல்லாம் ஊரடங்கு குறித்து முடிவெடுத்த பிறகும், தமிழகத்தில் மட்டும் தயக்கம் ஏன்… யாரைப் பார்த்து பயம்? அரசியல் செய்ய தி.மு.க-வுக்கு பல களங்கள் உள்ளன. பேரிடர் காலத்தில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கிறோம். அரசியல் பேசும் நேரம் இது இல்லை. ஆனால், திரைமறைவு காரியங்கள் புள்ளிவிவரங்கள் திரிப்பு என அரசு மக்களிடம் விளையாடுமானால் வேடிக்கை பார்க்க முடியாது. தட்டிக்கேட்கவேண்டிய சந்தர்ப்பத்தில்தான் கேட்கிறேன். அநாகரிமான அரசியலை கைவிட்டுவிட்டு முதலமைச்சர் பொறுப்புடனும், அரசாங்கம் மக்களுக்கவும் செயல்பட வேண்டும். அல்லது அரசை தி.மு.க செயல்பட வைக்கும்” என்று கூறினார்.
ஸ்டாலின் இப்படிக் கூறிய சில மணிநேரத்தில் முதல்வர் எடப்பாடி சார்பில், ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு செய்தியாளர்கள் மத்தியில் பதிலளித்தார், அமைச்சர் ஜெயக்குமார். “முதல்வரின் யதார்த்தமான கருத்துகளைக்கூட ஸ்டாலின் விமர்சிக்கிறார். நோய்த் தொற்று பரவ தி.மு.க தான் காரணமாக இருந்துள்ளது. பேரவைக்கு வந்தால் கொரோனா பரவும்; வெளியே சென்றால் கொரோனா பரவாது; இதுதான் ஸ்டாலினின் பாணி. மார்ச் 16-ம் தேதியில் இருந்தே கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. தலைமைச்செயலாளர் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க சிறப்பு குழுக்களை அமைத்து, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.

பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு கொரோனா தடுப்பு குறித்து முதல்வர் விளக்கம் தந்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் 7 முறை ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனா தடுப்புப் பணி சிறப்பாக நடக்கிறது. குதர்க்க எண்ணத்துடன் அரசின் நடவடிக்கைகளை ஸ்டாலின் விமர்சிக்கிறார். அரசின் நடவடிக்கைகளைப் பொதுமக்களே பாராட்டிவருகின்றனர். மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்தால்கூட அ.தி.மு.க அரசில் எந்தக் குறைகளையும் காண முடியாது. அ.தி.மு.க அரசை மக்கள் பாராட்டும் நிலையில், அதை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” என்று கூறியுள்ளார்.