ஊரடங்கு காலம் குறித்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
கொரோனா நோய்த் தொற்று உலகத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. இதுவரை உலகம் கண்டிராத அளவுக்குப் போக்குவரத்துகள் சுத்தமாக முடக்கப்பட்டுள்ளன. சாலைகள் தடுக்கப்பட்டுள்ளன. விமான வழி, தரை வழி, கடல் வழி என எந்த மார்க்கமாகவும் பயணங்களை மேற்கொள்ள முடியாத அளவுக்கு மக்கள் வீட்டிற்குள்ளேயே முடக்கப்பட்டுள்ளனர்.
இது ஒருபுறம் இருந்தாலும் மற்றொருபுறம் சில நன்மைகளை இந்தப் பூமி அடைந்து வருகிறது. காற்று மாசு மிக அதிகமான அளவில் குறைந்துள்ளது. மக்கள் தினம் வெளியேற்றி வந்த நச்சுப் பொருள்களின் அளவு குறைந்துள்ளது. வானகங்களே செல்லாததால் புகையில்லாத நகரங்கள் அதிகமாகியுள்ளன. சுருக்கமாகச் சொன்னால் இந்தப் புவி தன்னை மேலும் தூய்மையாக்கிக் கொள்வதற்கான அவகாசத்தைப் பெற்றுள்ளது எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த உலகம் மனிதனுக்கு மட்டுமே என்ற நிலை மாறி மற்ற சில உயிரினங்கள் வாழ வழியேற்பட்டுள்ளது என்பது அவர்களின் தரப்பு நியாயமாக உள்ளது.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இது தொடர்பாக ஒரு கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இன்றைக்கு உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதையொட்டி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வாழ்த்து செய்தியைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், “இப்போது ஊரடங்குப் போட்டு மூன்று வாரங்களுக்கும் மேலாகிறது. குணமடைய வேண்டும் எனில் சிகிச்சையின் வலியைக் கடந்துச் செல்ல வேண்டும். இதில் நல்ல செய்தி என்னவென்றால், எங்கள் சிகிச்சையினால் பூமி மேம்படுகிறது. இதற்கு மேலும் அவகாசம் தேவை. தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள். ஈஸ்டர் வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM