தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நேற்று ஒரே நாளில், தமிழகத்தில் 58 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 969 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக, தலைநகர் சென்னையில் 182 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 101 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முக்கியமாக, கடந்த 24 மணி நேரத்தில் கோவையில் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 48 மணி நேரத்தில் 41 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த கேரளாவைச் சேர்ந்த முதியவர் உயிரிழந்தார்.
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த 70 வயது முதியவர், வயிற்று வலி காரணமாகக் கடந்த 3-ம் தேதி கோவை வந்துள்ளார். காந்திபுரத்தில் உள்ள சென்னை மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இதனிடையே, அண்டை மாநிலத்திலிருந்து வந்ததால் அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. அதில், முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனால், அந்த மருத்துவமனையிலேயே முதியவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி கேரள முதியவர் உயிரிழந்துவிட்டார். இந்தத் தகவல் உடனடியாக கேரள சுகாதாரத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, ”உயிரிழந்த முதியவருக்கு சர்க்கரை நோய், இதயக் கோளாறு, சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்னைகள் இருந்துள்ளன. முதியவர் சிகிச்சை பெற்றுவந்த சென்னை மருத்துவமனை, தற்காலிகமாக சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றிவந்த மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சளி, ரத்த மாதிரிகள் எடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், உயிரிழந்த முதியவர் அதற்கு முன்பு மற்றொரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்துள்ளார். அந்த மருத்துவமனை ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்புப் பணிகள் முழு வீச்சில் நடந்துவருகின்றன. அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.