திருமணம் நின்றுபோன நாளில் கேரள இளைஞர் ஒருவர் வெளியூரில் சிக்கித் தவித்த மாணவியைப் பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்துள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூர் காஜிம்பிராம் நகரைச் சேர்ந்தவர் சுதேவ். இவருக்குக் கடந்த வியாழக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை திருமணம் நடக்க இருந்தது. ஆனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அவரது திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. திருமணம் நடக்கவில்லை என்றாலும் அந்த நாள் வழக்கமான நாளாக கடந்துவிடவில்லை இவருக்கு. அந்த நாளில் இவர் துன்பத்தில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு உதவ முடிவு செய்தார். ஆகவே சுதேவுக்கு அந்த நாள் என்றும் மறக்க முடியாத நாளாக மாறியுள்ளது.

திருச்சி அருகேயுள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.டெக் படித்து வருகிறார் மாணவி ஜென்மா. இவர் கடந்த மார்ச் 18 அன்று குரூப் ஸ்டெடிக்காக குன்னம்குளத்தில் உள்ள அவரது தோழியின் வீட்டிற்கு வந்துள்ளார். ஊரடங்குப் போடப்பட்டதால், அவரால் வீடு திரும்ப முடியவில்லை. இதற்கிடையில், அவரது தாயார் நோய்வாய்ப்பட்டு அவதிக்குள்ளாகி உள்ளார். ஆகவே ஜென்மாவை வீட்டிற்கு அவசரமாக அழைத்துவர வேண்டி இருந்தது.

இந்நிலையில், அவரது தந்தை ஹேமதாஸ், திருச்சூர் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் சோபா சுபின் உதவியைக் கோரியுள்ளார். சோபாவின் வேண்டுகோளின் படி, ஒரு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் சுதேவும் அவரது நண்பர்களும் திருமணம் நின்றுபோன அன்று ஜென்மாவை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக வேலைகளில் இறங்கியுள்ளனர். கடந்த வியாழக்கிழமை காலை 11 மணியளவில், குன்னம்குளத்தில் சிக்கித் தவித்த ஜென்மா ஹேமதாஸை, பாதுகாப்பாக மாலை 3 மணியளவில் வீட்டிற்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளனர். மணமகன் சுதேவின் இந்த உதவியை அந்த ஊர்மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM