தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதாகக் கூறப்படுகிறது. டெல்லி சென்று வந்த இவர், 50க்கும் அதிகமானோருக்கு சிகிச்சையளித்திருக்கிறார். இவற்றின் காரணமாக வைரஸ் தொற்று நேரிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இவருடன் பணியாற்றிய மற்றொரு மருத்துவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாகத் தெரிகிறது.

சென்னை மாம்பலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவர், விமான நிலையத்தில் பயணிகளை மருத்துவப் பரிசோதனை செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தார். இவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு, வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உதவி பேராசிரியராக இருக்கும் மருத்துவரும் நோய்த்தொற்று ஏற்பட்டு, கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனத் தெரியவந்துள்ளது.
பழைய வண்ணாரப்பேட்டை ரெய்னி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. அவர் சிகிச்சை அளித்த நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. கீழ்ப்பாக்கத்தில் உள்ள நியூ ஹோப் தனியார் மருத்துவமனையின் உரிமையாளர், அவரது மகள் என 2 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதைச் சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. இவர்களில் உரிமையாளரான மருத்துவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. அந்த மருத்துவமனை சீல் வைக்கப்பட்டு, பணியாளர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை கொளத்தூர் – பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும், அமைந்தகரையைச் சேர்ந்த மருத்துவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சிதம்பரம் அண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் பயிற்சியிலிருந்த பெண் மருத்துவரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளார். 2 தினங்களுக்கு முன் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, கோவையில் பெண் மருத்துவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் குணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.