கொரோனா லாக் டவுன் காரணமாக அனைவரும் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். நாடே வெறிச்சோடி கிடக்கிறது. இந்நிலையில் கர்நாடகாவில் நிறுத்தி வைக்கப்பட்ட தமிழக லாரிகளிலிருந்து டயர்கள், பேட்டரிகள், ஜாக்கிகள், டீசல் என ஒரு கோடி மதிப்புடைய உதிரிப் பாகங்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர் சில மர்ம கள். இதனால் தமிழக லாரி உரிமையாளர்கள் பெரும் பதற்றம் அடைந்துள்ளனர்.

இதுபற்றி தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் முருகன், ”தமிழகத்தைச் சேர்ந்த பல லாரிகள் ஆந்திரா மாநிலம் நெல்லூரியில் உள்ள அரசுக்குச் சொந்தமான தெர்மலில் ஓடுகிறது. இதில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு தெர்மலில் இருந்து 50 -க்கும் மேற்பட்ட பல்கர் லாரிகளில் நிலக்கரி சாம்பல் ஏற்றிக் கொண்டு கர்நாடக மாநிலம் சிக்கபல்லபூர் மாவட்டம் தொண்டபவியில் உள்ள ஏ.சி.சி சிமெண்ட் ஆலைக்குச் சென்றது.
மத்திய அரசு கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு நாடு முழுவதும் பிறப்பித்தது. அதையடுத்து தொண்டபவியில் உள்ள ஏ.சி.சி. சிமெண்ட் ஆலைக்குச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் அந்த ஆலைக்கு அருகில் உள்ள லாரி பார்க்கிங்கில் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த லாரிகளோடு ஆந்திராவில் இருந்து சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 50 லாரிகளையும் நிறுத்தி விட்டு லாரி ஓட்டுநர்கள் காத்திருந்தார்கள்.
லாரி ஓட்டுநர்களுக்கு ஒரு வாரமாகச் சாப்பாடு, தண்ணீர் கிடைக்கவில்லை. அவர்கள் பசி பட்டினியோடு நடந்தும், டூவிலர்களில் ஃலிப்ட் கேட்டும் அவரவர் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வந்து விட்டார்கள். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொண்டபவியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50 -க்கும் மேற்பட்ட தமிழக லாரிகளில் உள்ள டயர்கள், ஸ்டெப்னி டயர்கள், பேட்டரிகள், டீசல், ஜாக்கிகள் போன்ற விலை உயர்ந்த உதிரிப் பாகங்களை மர்ம நபர்கள் திருடி அடித்துச் சென்றுள்ளனர்.

ஒரு ஜோடி டயரின் விலை 50,000, ஒரு பேட்டரி 14,000, ஜாக்கி 7,000 மதிப்புடையது. இதில் 60 ஜோடி டயர்களை கழற்றிச் சென்றிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. பேட்டரி, ஜாக்கிகள், டீசல்கள் எவ்வளவு எடுத்துச் சென்றார்கள் என்று தெரியவில்லை. தமிழக லாரி உரிமையாளர்கள் கர்நாடகா சென்றிருக்கிறார்கள். அவர்கள் பார்த்த பிறகு முழுமையான மதிப்பு தெரியும். தற்போது கேள்விப்பட்ட வகையில் தோராயமாக ஒரு கோடி மதிப்புடைய உதிரிப் பாகங்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது. இது சம்மந்தப்பட்ட அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இருக்கிறோம்.
கொள்ளையடிக்கப்பட்ட உதிரிப் பாகங்களை உடனே மீட்டுக் கொடுக்க வேண்டும். அதேபோல பல கோடி மதிப்புடைய சரக்கு லாரிகள் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆங்காங்கே பாதுகாப்பற்ற முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை ஊரடங்கை நீட்டித்தால் அந்த லாரிகளை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்வதற்கு இரண்டு நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும்” என்றார்.