‘கொரோனா’ ஊரடங்கினால், பொருளாதாரத்தில் நல்ல நிலையில் உள்ளவர்களே திண்டாடும் நிலையிருக்க, அடித்தட்டு மக்கள் உணவின்றி தவிக்கிறார்கள். ஏழை மக்களின் துயர் துடைக்கவும் ஆதரவற்றோருக்கு உணவளிக்கவும் தன்னார்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் களத்தில் இறங்கியுள்ளனர். அதன்படி, வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பிலும் ஏழைகளுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டுவருகின்றன.

இன்றைய நாளில் மட்டும் 200 ஏழைக் குடும்பங்களுக்கு ஒரு வாரத்துக்குத் தேவையான அரிசி, பருப்பு மற்றும் மூன்று நாட்களுக்குத் தேவையான தக்காளி, கத்திரிக்காய், உருளைக் கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளும், மளிகைப் பொருட்களும் வழங்கினர். ஏழை மக்களைச் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு வரிசையில் நிற்க வைத்து பொருட்களை வழங்கினர்.
மேலும், ஊரடங்கு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஆதரவற்றோர் உள்பட 200 பேரைத் தேடிச் சென்று முகக் கவசம் வழங்கி முட்டைப் பிரியாணி, தண்ணீர் பாட்டில் கொடுத்து பசியாற்றினர். சேண்பாக்கத்தில் தங்கியிருக்கும் 50 நரிக்குறவர்களுக்கு ஒரு வாரத்துக்குத் தேவையான மளிகைப் பொருட்களை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில், வேலூர் மாவட்டத் தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். இளைஞரணித் தலைவர் நவீன், செயலாளர் கருணாகரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அதேபோல், ஊரடங்கு காலம் முடியும் வரை தினந்தோறும் மாவட்டம் முழுவதும் உள்ள ஏழை மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவிருப்பதாகவும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.