சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக கொரோனாவால் அதிகம் பாதித்த மாவட்டமாக ஈரோடு இருக்கிறது. இன்று வரை ஈரோட்டில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் என பலரும் ட்ராக் செய்யப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை களத்தில் சுழன்றடித்து வேலை பார்த்து வருகின்றன. ஆனாலும், மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீராக உயர்ந்தபடியே இருக்கிறது. இந்த அச்சத்தில் இருந்து ஈரோடுவாசிகள் மீள்வதற்குள்ளாகவே, ஈரோட்டில் கொரோனாவால் முதல் பலி ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த 70 வயது முதியவர் அவர். மூச்சுத்திணறல் காரணமாக ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்திருக்கிறார். ஒருவேளை கொரோனா தொற்றாகக் கூட இருக்கலாம், என மருத்துவர்கள் தனிவார்டில் வைத்து தீவிர சிகிச்சையளித்து வந்திருக்கின்றனர். இந்நிலையில் தீடீரென சிகிச்சைப் பலனின்றி அந்த முதியவர் உயிரிழந்திருக்கிறார்.

ஆய்வில் அந்த முதியவருக்கு கொரோனா தொற்று இருந்ததும், அதனால் தான் அவர் உயிரிழந்ததும் தெரியவந்திருக்கிறது. ஈரோட்டில் 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், கொரோனாவுக்கு முதல் ஆள் பலியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனையடுத்து மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.