கோவையில் பாதுகாப்புக்காக நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட சானிடைசரை குடிபோதைக்காக தண்ணீரில் கலந்து குடித்த நபர் உயிரிழந்தார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அடிக்கடி சானிடைசர் போட்டு கைகளை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்து வருகின்றனர். உபயோகிக்கும் சானிடைசரில் குறிப்பிட்ட அளவு ஆல்கஹால் காம்பவுண்ட் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவால் அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மதுக்கு அடிமையானவர்கள் எப்போது டாஸ்மாக் திறக்கும் என எதிர்பார்த்து காத்துக்கிடப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட சானிடைசரை குடிபோதைக்காக குடித்து ஒருவர் உயிரை விட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் பெர்னார்ட் (35). திருப்பூரில் சிலிண்டர் விநியோகம் செய்து வரும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட சானிடைசரை இவர் தண்ணீரில் கலந்து குடித்துள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து அவர் ஒரு நாள் முழுவதும் கண் விழிக்காமல் இருந்ததை அடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, சூலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடி உள்ளதால், கடந்த இரு நாட்களாக உணவு எதுவும் உட்கொள்ளாமல் தண்ணீரில் சானிடைசர் கலந்து குடித்து வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பெர்னார்ட்க்கு மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM