சவுதி அரேபியா மன்னர் குடும்பத்தில் 150 உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் வைரஸால் பாதிக்காமல் இருப்பதற்காக மன்னர் தனித் தீவில் தங்கியுள்ளார்.
மன்னராட்சிக்குப் புகழ்பெற்ற நாடு சவுதி அரேபியா. ஆசியாவில் ஐந்தாவது பெரிய நாடு. இங்கு 1938ஆம் ஆண்டு பெட்ரோல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதிலிருந்தே செல்வத்தில் கொழிக்கத் தொடங்கியது சவுதி. நாட்டின் முதல் மன்னர் அப்துல் அசீஸ். கிங் அப்துல்லாசிஸ் என அழைக்கப்பட்டார். பாலைவன தேசத்தைப் பணக்கார பூமியாக மாற்றினார் கிங் அப்துல்லாசிஸ். இவருக்கு மட்டும் 17 மனைவிகள் வழியாக 36 குழந்தைகள் உண்டு. இப்படிதான் சவுதி அரேபியாவின் மன்னர் குடும்பம் உருவாகத் தொடங்கியது.
தற்போது சவுதியின் மன்னராக இருப்பவர் 84 வயதான சல்மான். இவர் 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்துள்ளார். மன்னர் அப்துல்லாசிஸின் 25ஆவது குழந்தைதான் சல்மான். கிங் சல்மான் சவுதியின் பாரம்பரியமான உடை அணிந்தாலும், இளம் பருவத்தில் மேற்கத்திய உடைகளை விரும்பி அணிவாராம். கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ரியாத் மாகாண கவர்னராக இருந்திருக்கிறார்.
இவரது காலத்தில்தான் ரியாத் நகரை ஒட்டிய பாலைவனங்களில் பிரமாண்டமான வானளவு உயர்ந்த கட்டடங்கள் எழுப்பப்பட்டு மக்கள் வசிக்கும் அளவுக்குப் புறநகர்ப் பகுதியாக உருவாக்கப்பட்டது. தற்போது நாட்டில் சுமார் 15ஆயிரம் இளவரசர் – இளவரசிகள் இருக்கின்றனர். ஆனால் பெரும்பாலான அதிகாரமும் செல்வமும் அவர்களில் 2,000 பேர் கொண்ட குழுவினருக்கு உள்ளது. ராஜ குடும்பத்துக்கு இப்போது கிங் சல்மான்தான் தலைவர்.
இந்நிலையில், மன்னர் குடும்பத்தில் 150 உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் ரியாத் மாகாண ஆளுநராக இருக்கும் இளவரசர் வைரஸால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கிங் ஃபைஸல் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 84 வயதான மன்னர் கிங் சல்மான், கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்கும் வகையில் ஜெட்டா நகர் அருகேயுள்ள சிறிய தீவில் தங்கி இருப்பதாகவும், முடி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் அவரின் அமைச்சர்கள், நியோம் நகர் அருகே கடற்கரைப் பகுதியில் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. சுமார் மூன்று கோடியே 30 லட்சம் பேர் வசிக்கும் சவுதி அரேபியாவில், தற்போது கொரோனா வைரஸால் மூவாயிரத்து 287 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 44 பேர் இறந்துள்ளனர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM