கொரோனோ பாதிப்பில், கோவை மாவட்டம் தமிழக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கோவையில் மட்டும் 86 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கோவையில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால், அரசு மருத்துவமனையுடன் சில தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க அனுமதியளிக்கப்பட்டது.

ஆனாலும், சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தான் அதிகளவிலான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை திடீரென்று இ.எஸ்.ஐ மருத்துவமனையின் கண்ணாடி உடைந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அதுவும், கொரோனா வார்டின் கண்ணாடி உடைந்ததால் சில நிமிடங்களுக்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. போத்தனூரைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் கொரோனா உறுதியாக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, அந்த நபரின் மனைவி நேற்று அவருக்கு பிரியாணி சமைத்து எடுத்து வந்துள்ளார்.

ஆனால், மருத்துவமனை நிர்வாகம் அதை அனுமதிக்கவில்லை. அந்த இளைஞர் மற்றும் மனைவி தரப்பில் நீண்ட நேரம் சொல்லிப் பார்த்தும், மருத்துவமனை நிர்வாகம் அதை அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.
இதனால், கொரோனா பாதிக்கப்பட்டிருந்த அந்த இளைஞர் ஆத்திரமடைந்துள்ளார். இதையடுத்து, கொரோனா வார்டில் தீயணைப்பு கருவி வைக்கப்பட்டிருந்த கருவியை உடைத்துள்ளார். இளைஞரின் செயலால் அதிர்ச்சியடைந்த இ.எஸ்.ஐ மருத்துவமனை நிர்வாகம் இதுதொடர்பாக சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

அந்தப் புகாரின் அடிப்படையில் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொது சொத்துகளை சேதப்படுத்துதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிங்காநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.