தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 9 ஆகிவிட்டது. இந்த வைரஸ் பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாகச் சென்னை போன்ற அதிக பாதிப்புள்ள நகரங்களில் அரசுடன் இணைந்து மாநகராட்சி அதிகாரிகளும் தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து சென்னை திரும்பியவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் அந்தப் பகுதி முழுவதும் மூடப்பட்டு பொதுமக்கள் நடமாடத் தடை விதிக்கப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை அடையாளம் காண வீட்டு வாயிலில் ஸ்டிக்கர் ஒட்டுவது, அப்படித் தனிமைப் படுத்தப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து தருவது போன்ற பல்வேறு விஷயங்களையும் சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளிலிருந்து மாஸ்க், கிளவுஸ் போன்ற குப்பைகளை வெளியேற்ற புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: `குப்பை லாரியில் கூட்டம் கூட்டமாக தூய்மைப் பணியாளர்கள்!’ -கண்டனத்துக்கு ஆளான ஊட்டி நகராட்சி #corona
இது தொடர்பாக சென்னை கமிஷனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைக்காக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தாங்கள் உபயோகிக்கும் மாஸ்க், கையுறைகள் இன்ன பிற மருத்துவ குப்பைகள் போன்றவற்றை மிகவும் பாதுகாப்பாக வைத்து, தினசரிக் குப்பைகளைப் பெற்றுக்கொள்ள வரும் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதற்காக சென்னை மாநகராட்சி சார்பாகத் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு மஞ்சள் நிற பைகள் வழங்கப்படும். அதில் மருத்துவ கழிவுகளைச் சேகரித்து வழங்க வேண்டும். மேலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் பயன்படுத்தும் மாஸ்க் போன்ற பொருள்களைச் சாதாரண ப்ளீச் தண்ணீர் அல்லது சோடியம் ஹைபோ க்ளோரைடு தண்ணீர் போன்றவற்றில் தூய்மை செய்து பிரத்தியேக மஞ்சள் பைகளில் சேமிக்க வேண்டும். இப்படிப் பெறப்படும் குப்பைகள் உயிர் மருத்துவ கழிவுகள் பதப்படுத்தும் மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுப் பாதுகாப்பாக்க எரியூட்டப்படும்.
அதேபோல் தனிமைப்படுத்தப்படாத சாதாரண மக்களும் தாங்கள் பயன்படுத்தும் மாஸ்க், கிளவுஸ் போன்றவற்றை ப்ளீச் தண்ணீரில் நனைத்து அதைத் தனியாக ஒரு பையில் வைத்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் வைரஸ் பரவலைக் குறைக்க முடியும். அனைத்து மக்களும் மேலே கூறப்பட்டுள்ள வகையில் மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது பற்றி நம்மிடம் பேசிய மருத்துவர் ரமேஷ், “தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளிலிருந்து மாஸ்க், கிளவுஸ் போன்றவற்றைத் தனியாக அகற்றுவது சிறந்த நடவடிக்கை. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமல்லாது அனைத்து மக்களும் இந்த முறையைக் கடைப்பிடித்தால் இன்னும் சிறந்ததுதான். மேலும் குப்பைகளைப் பெறும் தூய்மைப் பணியாளர்களுக்குத் தலை முதல் கால் வரையிலான பாதுகாப்பு கவசங்கள், மாஸ்க், கையுறை, கண்ணாடி போன்றவற்றை வழங்க வேண்டும். அனைத்து குப்பைகளையும் கையாளுவது அவர்கள்தான். எனவே, அவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
அதுமட்டுமல்லாது இந்தக் கடுமையான காலகட்டத்திலும் பல இடங்களில் தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.2,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. இதை இன்னும் உயர்த்தி வழங்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட வேண்டுகோள். குப்பைகளைக் கொண்டு செல்லும் தூய்மைப் பணியாளர்கள் அதை மிகக் கவனமாகக் கையாள வேண்டும். உயிர் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவது பாதுகாப்பானது இல்லை எனக் கூறப்பட்டாலும் தற்போது அது மட்டுமே ஒரே வழி. குப்பைகளைச் சேகரித்து கால்வாய் அல்லது வேறு இடங்களில் குவியலாக்கினால் வைரஸ் பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே, மாஸ்க் போன்றவற்றை முறையாக எரியூட்ட வேண்டும்” எனக் கூறினார்.