கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்கள், வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வீடுகளின் முன் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற ஸ்டிக்கர்களை சுகாதாரத்துறையினர் ஒட்டியுள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குடியிருந்த வீடு, அவர்கள் குடியிருக்கும் பகுதிகள் சீல் வைக்கப்பட்டு போலீஸாராலும் சுகாதாரத்துறையினராலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சீல் வைக்கப்பட்ட பகுதிகளிலிருந்து யாரும் வெளியில் வர அனுமதியில்லை. அதைப்போல அந்தப்பகுதிக்குள் யாரும் உள்ளே செல்லக் கூடாது.

Also Read: “தினமும் 30 போன்கால்ஸ்; 6 பேர் கைது; லாக் டவுனால் அதிகரித்த குடும்ப வன்முறைகள்”- ஏடிஜிபி ரவி தகவல்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வரை 911 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் முதலிடத்தில் சென்னை உள்ளது. அதனால் சென்னையில் 16,000 ஊழியர்கள் மூலம் வீடு வீடாகக் கணக்கெடுப்புப் பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை நடந்த கணக்கெடுப்பில் 2,000 பேருக்கு காய்ச்சல், சளி, இருமல் இருப்பதாக மாநகராட்சியிடம் ரிப்போர்ட் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்களை தீவிரமாக சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் ராயபுரத்தில் அதிகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர்.
சென்னையில் சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று சைதாப்பேட்டை. அங்கு குடியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அம்மா (54) , மகன் (25) மற்றும் பாட்டி (84) ஆகிய 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது. அவர்கள் மூன்று பேரும் மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டில் மூன்று பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு மூன்று பேரும் வீடு திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் டீன் வசந்தாமணியிடம் பேசினோம். “கடந்த மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் பெண்கள், ஒருவர் 25 வயது இளைஞர். மருத்துவக்குழுவினர் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளித்தனர். 24 மணி நேரமும் கண்காணித்தனர். அதன்விளைவு 3 பேரும் குணமடைந்தனர். இவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 84 வயது மூதாட்டிக்கும், அவரின் குடும்பத்தினருக்கு மருத்துவக்குழுவினர் கைகளைத் தட்டி வாழ்த்துகள் கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தோம். அப்போது மூதாட்டி, மருத்துவக்குழுவினருக்கு கண்ணீர்மல்க நன்றி கூறினார். பின்னர் அவர்கள் மூன்று பேரும் சந்தோஷமாக வீட்டுக்குச் சென்றனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்கள் நலமாக உள்ளனர்” என்றார்

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், “மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்த சைதாப்பேட்டையைச் சேர்ந்த 25 வயதுடைய டாக்டர், வெளிநாட்டில் மருத்துவம் மேல்படிப்பு படித்துவருகிறார். அவர் வெளிநாட்டிலிருந்து சென்னை வந்தார். அதனால் அவரை தனிமைப்படுத்தி சுகாதாரத்துறையினர் கண்காணித்தனர். இந்தச் சமயத்தில் டாக்டரின் அம்மாவுக்கு கொரோனா தொற்று முதலில் உறுதி செய்யப்பட்டது. அடுத்து அவர் மூலம் 84 வயது மூதாட்டிக்கும் கொரோனா உறுதியானது. அதன்பிறகு 25 வயது டாக்டருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 84 வயது மூதாட்டியின் உடல் நலம் ஆரம்பத்தில் சீரியஸாக இருந்தாலும் தீவிர சிகிச்சையால் அவர் முதலில் குணமடைந்தார். அடுத்தடுத்து அம்மாவும் மகனும் குணமடைந்தனர். தற்போது 3 பேரும் வீடுதிரும்பியுள்ளனர்” என்றனர்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 74 வயது மூதாட்டி சில தினங்களுக்கு முன் குணமடைந்து வீடு திரும்பினார். அவருக்கு மருத்துவமனை டீன் ஜெயந்தி மற்றும் மருத்துவக்குழுவினர் கைகளைத் தட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 74 மற்றும் 84 வயது மூதாட்டிகள் குணமடைந்து வீடு திரும்பியது நம்பிக்கையை ஏற்படுத்துவதாக மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர்.