கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு நூறு நாட்களை கடந்த நிலையில் கொரோனா தொற்று பரவுவதை விட, குணமாகி வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கேரள சுகாதாரத்துறை அறிக்கைபடி 7ம் தேதி புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதே சமயம் எட்டு பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அந்த எட்டு பேரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கடந்த மார்ச் மாதம் விமானத்தில் வெளிநாடு செல்ல முயன்றபோது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள். இந்த நிலையில் நேற்று 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதே சமயம் 24 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இது கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா டீச்சர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவில் நேற்று மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 3 பேர். கண்ணூர் மற்றும் மலப்புரம் மாவட்டத்தில் தலா 2 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மலப்புரம் மாவட்டத்தில் நேற்று நோய் கண்டுபிடிக்கப்பட்ட 2 பேரும் டெல்லி நிஜாமுதீன் தப்லீக் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள். மற்ற 5 பேருக்கும் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் நோய் பரவியுள்ளது. இதுவரை கேரளாவில் 364 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 238 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 124 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இன்று மட்டும் 27 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் 1,29,751 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,29,021 பேர் வீடுகளிலும், 730 பேர் பல்வேறு மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர். நேற்று மட்டும் 126 பேர் கொரோனா அறிகுறிகளுடன் புதிதாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.