தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது. முக்கியமாக, தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. கோவையில் நேற்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா பாசிட்டிவாகியுள்ளது. இதன் மூலம், கோவையில் கொரோனோ பாதித்தவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது.

ஸ்பெயினில் இருந்து திரும்பிய மாணவி, போத்தனூர் ரயில்வே மருத்துவர் உள்பட ஐந்து பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியிருந்தனர். தற்போது கொரேனோ உறுதியாகியிருப்பவர்களில் 21 பேர் பெண்கள் என்றும் 5 பேர் ஆண்கள் என்றும் தெரியவந்துள்ளது.
முக்கியமாக, நேற்றைய அறிவிப்பின்படி 19 பேர் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள், 5 பேர் அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் மட்டும் கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதவிர, 2 மற்றும் 3 வயதில் இரண்டு குழந்தைகளும் கொரோனா உறுதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏற்கெனவே, 10 மாதக் குழந்தை கொரோனா பாதிக்கப்பட்டு, கடந்த சில நாள்களுக்கு முன்புதான் குணமாகி வீடு திரும்பியிருந்தது. அதை நினைத்து மக்கள் சற்றே நிம்மதியடைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் இரண்டு குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, 14 வயது சிறுவன் மற்றும் 24 வயது இளைஞர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது, கொரோனா உறுதியாகியுள்ள 26 பேரும், டெல்லியில் இருந்து திரும்பி பாசிட்டிவாகியிருப்பவர்களின் உறவினர்களாவர். கோவையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா அறிகுறிகளுடன் மொத்தம் 183 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 95 பேருக்கு பாசிட்டிவாகியுள்ளது.

75 பேருக்கு ரிசல்ட் வர வேண்டியுள்ளது என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த கொரோனா உறுதியானவர்களும் கோவையில்தான் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.