கொரோனா காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். உணவுப்பொருள்கள், பால் போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வீட்டைவிட்டு வெளியே வருகிறார்கள். இந்த அசாதாரண சூழலை எதிர்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம்.

ஆதவற்றோர்களுக்கு உணவளிக்கும் நபர்

ஆதரவற்றவர்கள், தெருவில் வசிப்பவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள் ஆகியோர் இந்தச் சூழலில் நிர்கதியாய் நிற்கிறார்கள். ஆளற்ற வீதிகளிலும், வாகனங்கள் விரையாத நெடுஞ்சாலை ஓரங்களிலும் கொரோனா பற்றிய எந்த உள்ளுணர்வும் இல்லாமல் பசியை எதிர்கொள்ள முடியாமல் களைத்திருக்கிறார்கள். திக்கற்று கிடக்கும் அம்மக்களின் பசிப்பிணியைப் போக்கக் களமிறங்கியிருக்கிறது ஒரு குழு.

சென்னை மறைமலைநகர்ப் பகுதியில் 15 பேர் இணைந்து, பெரிய பெரிய பாத்திரங்களில் உணவு தயார் செய்து, பொட்டலம் கட்டி, வாட்டர் கேன்கள் சகிதம் வாகனங்களில் ஏற்றிக்கொண்டு விரைகின்றனர். ஆதரவற்றுக்கிடக்கும் பல மக்களின் பசியைப் போக்கிவருகிறார்கள். தொடக்கத்தில் ஆதரவற்றவர்களுக்கு மட்டும் உணவு வழங்கியவர்கள், தற்போது உணவு கிடைக்காத பலருக்கும் உதவி வருகிறார்கள்.

அக்குழுவைச் சேர்ந்த பிரபாகரனிடம் பேசினோம். ” சென்னை மறைமலைநகர்லதான் இருக்கேன். 144 உத்தரவு வந்தபின் சாப்பாடு கிடைக்காம சிரமப்படுறவங்களுக்கு உதவி செய்யலாம்னு அண்ணனோடு பேசிகிட்டு இருந்தேன். கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் பக்கத்துல ஆதரவற்றோர் சிலர் சாப்பாடு இல்லாம சிரமப்படுறதா நண்பர்கள் சொன்னாங்க. நண்பர்களும் உதவி செய்யத் தயாரா இருந்தாங்க. அன்னிக்கு எங்க கையில இருந்த பணத்தை வெச்சு 80 பேருக்குச் சாப்பாடு கொடுத்தோம். அடுத்த நாள் காலைலயும் சாப்பாடு செஞ்சு கொடுக்கலாம்னு முடிவு பண்ணினோம்.

ஆதவற்றோர்களுக்கு உணவளிக்கும் நபர்

செங்கல்பட்டில் கஜா புயல் வந்தப்போ உதவிசெய்த நண்பர்களும் இப்போது உதவ முன்வந்தாங்க. 4வது நாள் 450 பேருக்கு சாப்பாடு கொடுத்தோம். முதல்நாள் நாங்க 6 பேர் இருந்தோம். ஒரு கார்ல டிராவல் பண்ணி சாப்பாடு குடுத்தோம். இப்போ நாங்க 15 பேர் 3 கார்ல போய் சாப்பாடு கொடுக்கிறோம். நமக்காக வேலை செய்ற தூய்மைப் பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள் எல்லாருக்கும் தண்ணீர் பாட்டில்கள் கொடுக்குறோம்.

லோக்கல் இன்ஸ்பெக்டர்கிட்ட முறையா அனுமதி வாங்கின பிறகுதான், வெளிய போய் இந்த உதவிகள் செய்ய ஆரம்பிச்சோம். மாஸ்க், கையுறைனு போன்ற எல்லாப் பாதுகாப்பு கவசங்களோடுதான் நாங்க டிராவல் பண்றோம். நிறைய நண்பர்கள் உதவி செய்றாங்க. நேர்ல வர்ற சூழல் இல்லாததால என் நண்பர்கள் நிறைய பேர் பண உதவி செய்றாங்க. நிறைய பேர் கால் பண்ணி உணவு கிடைக்காம கஷ்டப்படுறவங்க இருக்கிற இடத்தைச் சொல்றாங்க. காலைல 4  மணிக்கு எழுந்து சமைக்க ஆரம்பிச்சுடுவோம். சமைச்சதும் பேக் பண்ணிட்டு, வாட்டர் பாட்டில்களோட கிளம்பிடுவோம்.  உதவி பண்றத்துக்குப் பெரிசா எந்தத் திட்டமிடலும் தேவைப்படலை. உதவி பண்ணணும் தோணின உடனே எல்லாரும் களமிறங்கி உதவி பண்றோம்” என்கிறார் பிரபாகரன்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.