21 நாள்கள் ஊரடங்கு என்கிற பிரதமரின் தடாலடியான அறிவிப்பு மக்களுக்கு எப்படி அதிர்ச்சியையும் அடுத்து என்ன செய்வது என்கிற குழப்பத்தையும் ஒருசேர ஏற்படுத்தியதோ, அதேபோல்தான், தமிழகத்து அரசியல் கட்சிகளையும் முதலிரண்டு நாள்கள் நிதானிக்கவிடாமல் செய்தது. ஆனால், நாள்கள் செல்லச் செல்ல அதிரடியாகக் களத்தில் இறங்கின தமிழகத்து அரசியல் கட்சிகள்.

மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் ஒருபுறமிருக்க, வீட்டிலிருந்தபடியே தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களிடமும் பேசி, அந்தப் பகுதியில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்துக் கேட்டறிந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியானது. மாநிலம் முழுவதும் மோடி கிச்சனை ஆரம்பித்தார்கள் பா.ஜ.க-வினர். பேரிடர் மேலாண்மைக்கென தனிப்பாசறையை உருவாக்கி, தம்பிகளைக் களத்தில் இறக்கியது நாம் தமிழர் கட்சி… இப்படி ஒவ்வொரு கட்சியும் தனித்துவமாகவும் ஆக்கபூர்வமாகவும் இந்த ஊரடங்குக் காலத்தில் தமிழக மக்களுகாகப் பல நலப் பணிகளைச் செய்துவருகிறார்கள்…

அம்மா உணவகம்

அ.தி.மு.க

கட்சி எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியைத் தாண்டி, ஏப்ரல் 14-ம் தேதி வரை கோவையில் உள்ள 15 அம்மா உணவகங்களில் இலவசமாக சாப்பிட்டுக் கொள்ளலாம் என்கிற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி. இதேபோல தமிழகத்தின் பல பகுதிகளில் செயல்படும் அம்மா உணவகங்களில், இலவசமாக உணவருந்த அந்தப் பகுதி அ.தி.மு.க நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர். ‘அம்மா உணவகத்தில் இலவச உணவு என்றால் அது அரசின் கணக்கில்தானே வரும்… இதில் அ.தி.மு.க என்ன செய்தது என்கிற கேள்வி எழுவது இயல்புதான். ஆனால், ஒவ்வொரு நாளும் உணவுக்கு ஆகும் தொகையை, அந்தப் பகுதி அ.தி.மு.க நிர்வாகிகளே செட்டில் செய்துவிடுகிறார்கள். மக்கள் யார் வேண்டுமானாலும் இலவசமாக சாப்பிட்டுக்கொள்ளலாம். இதன்மூலம் நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வருவதாகச் சொல்லி பெருமிதமடைகிறார்கள் எம்.ஜி.ஆரின் வழித்தோன்றல்கள்.

தி.மு.க

கொரோனா பற்றிய அபாயம் பரவிய உடனே, தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒரு கோடி ரூபாய் வழங்கியது தி.மு.க. அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கை கொரோனா தனிமை முகாமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அரசுக்கு அனுமதி அளித்தார் ஸ்டாலின். வாணியம்பாடி தி.மு.க நிர்வாகி ஞானவேலன், தன்னுடைய `தளபதி அறிவாலய’த்தை கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி கொடுத்தார். திண்டுக்கல்லில் பாதுகாப்புப் பொருள்கள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க தன் கட்சியினரை முடுக்கிவிட்டார், தி.மு.க துணை பொதுச் செயலாளர் ஐ. பெரியசாமி.

உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்வதற்காக, தி.மு.க, தலைமைக் கழகம் சார்பாகவும் இளைஞரணி சார்பாகவும் சமூக வலைதளங்களில் 6 அலைபேசி எண்களைப் பகிர்ந்திருக்கிறது தி.மு.க. இந்த எண்களில் உதவி கேட்டு அழைப்பவர்களிடம் எந்த மாவட்டம், எந்தப் பகுதி எனக் கேட்டு, அந்தப் பகுதியில் உள்ள மாவட்டச் செயலாளர்களின் மூலமாகவோ இளைஞரணி அமைப்பாளர்களின் மூலமாகவோ அந்த உதவியைச் செய்துவருகிறார்கள். தவிர, அந்தந்தப் பகுதி பொறுப்பாளர்களின் எண்களும் கட்சியின் சமூக வலைதளப் பக்கங்களில் பகிரப்பட்டுள்ளது. அப்படி, நேரடியாகவும் பல உதவிகளைச் செய்துவருகிறார்கள் தி.மு.க-வின் உடன்பிறப்புகள்.

களத்தில் மு.க.ஸ்டாலின்

பா.ஜ.க

தமிழ்நாடு முழுவதும் உணவு மற்றும் உணவுப் பொருள்கள் கொடுத்து அசத்திவருகிறார்கள், பாரதிய ஜனதா கட்சியினர். `மோடி கிச்சன்’ என்கிற பெயரில் உணவு சமைத்து, ஆதரவில்லாத மக்களுக்கு கொடுத்துவருகிறார்கள். மதுரையில் மட்டுமே 12 இடங்களில் இந்த கிச்சன் செயல்பட்டுவருகிறது. அதுமட்டுமல்ல, “மொத்தமாகத் துணி வாங்கி, வீட்டுப் பெண்களால் முகக்கவசங்கள் தயாரித்து தமிழகம் முழுவதும் விநியோகித்து வருகிறோம். நாளொன்றுக்கு 2 லட்சம் பேர் பயனடையும் வகையில் உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கிவருகிறோம். பா.ஜ.க தொண்டர்கள் அனைவரும் களத்தில் இருக்கிறார்கள். வீட்டுக்கே போகாமல் மக்களுக்கு சேவை செய்துவருகிறார்கள் ” என்கிறார் பா.ஜ.க-வின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன்.

நாம் தமிழர் கட்சி

பனைவிதை சேகரித்தல், நிலவேம்புக் கசாயம் வழங்குதல், ஏரி குளங்களைத் தூர்வாருதல் எனப் பல களப்பணிகளுக்குச் சொந்தக்காரர்களான நாம் தமிழர் கட்சியினர், கொரோனா மீட்புப் பணிகளைக் கருத்தில்கொண்டு, பேரிடர் மீட்புப் பாசறை என தனி அமைப்பையே உருவாக்கியிருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சியின் பலமே, அந்தக் கட்சியில் இருக்கும் இளவயதினர்தான். அவர்கள் அனைவரும் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவ வேண்டும் என கட்டளையிட்டார், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். “கிருமிநாசினி தெளிக்கும் பணி முதல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது வரை மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து 200 பேருக்கும் மேல் களப்பணி செய்துவருகிறார்கள்.

நாம் தமிழர் கட்சியினர்

தவிர, “ஒவ்வொரு தொகுதியிலும் உணவு சமைத்து பல நூறு பேருக்கு உதவிவருகிறோம். தொகுதிக்கு 40 பேர் வரை இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டுவருகிறோம். மொத்தம் 2000 பேருக்கும் மேல் களத்தில் இறங்கி பணி செய்துவருகிறோம். மருத்துவர் பாசறையின் மூலமாக தொடர்ச்சியாக விழிப்புணர்வு வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகிறார்கள். பேரிடர் மீட்புப் பாசறை, சுற்றுச்சூழல் பாசறை, மருத்துவப் பாசறை ஆகிய மூன்று பாசறையினரும் இணைந்து மீட்புப் பணிகளைச் செய்துவருகிறார்கள் ” என்கிறார், நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன்.

மக்கள் நீதி மய்யம்

முகக்கவசம், சானிடைசர், பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு மளிகைப் பொருள்கள், காய்கறிகள் வழங்குவது என தங்களால் ஆன உதவிகளைச் செய்துவருகிறார்கள், மக்கள் நீதி மய்யத்தினர். சுகாதாரச் செயலாளர் பீலா ராஜேஷைச் சந்தித்து, 15,000 முகக்கவசங்கள் கட்சித் தலைமை அலுவலகத்திலிருந்து கொடுத்திருக்கின்றனர். தவிர, காவல்துறைக்கென 15,000 முகக் கவசங்களையும் தனியாகக் கொடுத்திருக்கிறார்கள்.

கமல் வீடியோ காலில்

“புதுக்கோட்டையில் இருக்கும் மூர்த்தி என்கிற இயற்கை விவசாயி ஒருவர், தினசரி 100 பேருக்கு இலவசமாகக் காய்கறிகள் கொடுத்துவருகிறார். வேலூரில் சுரேஷ், நாமக்கலில் காமராஜ் ஆகியோர் தினசரி சமையல் செய்து உணவு கொடுத்து வருகிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக விழிப்புணர்வுப் பாடல் தயார்செய்து மக்களிடம் பரப்பிவருகிறோம். எங்கள் கட்சியின் தலைவர், தினமும் போனில் பேசி உதவி செய்து வருபவர்களுக்கு உற்சாகமூட்டிவருகிறார். நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் நேற்று விடியோ காலில் பேசினார். நாளை முதல் தினசரி ஒவ்வொரு மண்டலமாக மீட்டிங் போடவிருக்கிறார். தொடர்ச்சியாகக் களத்தில் நின்று உதவிகளைச் செய்துவருகிறார்கள் எங்கள் கட்சியினர்” என்கிறார், மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித்தொடர்பாளர் முரளி அப்பாஸ்.

தே.மு.தி.க

ஆண்டாள் அழகர் கல்லூரியில் அதிகாரிகள் ஆய்வு

“மாநிலம் முழுவதும் எங்களின் கட்சி நிர்வாகிகள் அவர்களால் இயன்ற அளவு மளிகைப் பொருள்களை மக்களுக்கு வழங்கிவருகிறார்கள். கட்சியின் தலைமை அலுவலகத்தையும் ஆண்டார் அழகர் கல்லூரியையும் மருத்துவமனையாகப் பயன்படுத்திக்கொள்ள கடிதம் கொடுத்தோம். கல்லூரியில், வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டுச் சென்றிருக்கின்றனர். தவிர, ரேஷன் கடைகளுக்குப் பொருள்கள் வாங்க வரும் மக்களுக்கு முகக்கவசங்களையும் விநியோகித்துவருகிறோம்” என்கிறார் தே.மு.தி.க-வின் அமைப்புச் செயலாளர் பார்த்தசாரதி.

பா.ம.க

தமிழகத்தில் முதன்முதலாக, தன் எம்.பி நிதியிலிருந்து 3 கோடி ஒதுக்கினார் பா.ம.க இளைஞரணித் தலைவரும் ராஜ்யசபா எம்.பியுமான அன்புமணி ராமதாஸ். அவரைத் தொடர்ந்து, பா.ம.க -வின் தலைவர் ஜி.கே.மணி, தன் ஒரு மாத எம்.எல்.ஏ பென்ஷனை கொரோனா தடுப்புப் பணிகளுக்காக அளித்திருக்கிறார். தவிர, மருத்துவர்களான ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவருமே தொடர்ச்சியாக சமூக விழிப்புணர்வு தரும் விஷயங்களைத் தங்களின் சமூக வலைதளைப் பக்கங்களில் பகிர்ந்துவருகிறார்கள். “பல இடங்களில் எங்கள் கட்சியின் சார்பாக கபசுரக் குடிநீர் வழங்கிவருகிறோம். எங்கள் கட்சியின் ஒன்றியக் கவுன்சிலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள். அந்தப் பகுதியில் கிருமி நாசினி அடித்து சுகாதாரமாகப் பராமரித்துவருகிறார்கள். பலர் தங்களின் சொந்தப் பணத்திலிருந்தும் சில உதவிகளைச் செய்துவருகிறார்கள். எங்களின் சமூக ஊடகப் பேரவையின் சார்பாகப் பல விழிப்புணர்வுப் பிரசாரங்களையும் தொடர்ச்சியாச் செய்துவருகிறோம்” என்கிறார், பா.ம.க வின் செய்தித்தொடர்பாளர் வினோபா.

அன்புமணி

காங்கிரஸ்

எங்களின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள். தவிர, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் தொகுதிக்குள், இடம்பெயர்ந்து, புலம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்களுக்குத் தங்குமிடம், உணவு ஆகியவற்றை உறுதி செய்துவருகிறார்கள். சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டிய சிக்கல் இருப்பதால், பெரும் திரளானவர்களை வைத்துக்கொண்டு எந்த உதவியையும் செய்யமுடியவில்லை. கூலித் தொழிலாளர்கள், வெளி மாநிலத் தொழிலாளர்கள் விஷயத்தில் அக்கறை காட்டுமாறு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளை, மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார். எங்கள் காங்கிரஸ் மைதானத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாநகராட்சிக்கு கடிதம் வழங்கியிருக்கிறோம்” என்கிறார் காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா.

சி.பி.ஐ

சி.பி.எம்

அடித்தட்டு மக்களுக்காக எப்போதும் களத்தில் நிற்கும் செஞ்சட்டைத் தோழர்கள், இப்போதும் அதில் இருந்து பின்வாங்கவில்லை. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் அந்தப் பகுதி மக்களுடன் வீட்டில் ஒருவராக உடனிருந்து அவர்களுக்கு என்ன உதவிகள் தேவையோ அதைச் செய்துவருகிறார்கள். உதாரணமாக, சில இடங்களில் கிருமி நாசினிகள் தெளிப்பது, நகரங்களுக்குப் போய் மருந்துகள் வாங்கிக் கொடுப்பது, மருத்துவமனைகளுக்கு அழைத்துச்செல்வது போன்ற மருத்துவ உதவிகளைச் செய்துவருகிறார்கள்.

மருந்து வாங்கிக் கொடுத்து உதவும் கம்யூனிஸ்ட் உறுப்பினர்

“டெல்டா மாவட்டங்களில், நெல் கொள்முதல் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்துவந்தனர். உடனடியாக அந்தப் பகுதி கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் பேசி, அதனைச் சரி செய்தார்கள். திருச்சியில் வாழை விவசாயிகள் வாழை அறுவடை செய்ய முடியாமல் தவித்துவந்தனர். அவர்களுக்கும் மாவட்ட ஆட்சியரிடம் பேசி கேரளாவுக்குக் கொண்டுசெல்வதற்கான பாஸ் வாங்கிக் கொடுத்தோம். வேளாண் துறை செயலாளருடன் தொடர்பில் இருந்து, விவாசாயிகளுக்கான உதவிகளைத் தொடர்ந்து செய்துவருகிறோம்.

Also Read: `நான் மட்டும்தான் ராஜா!’ எம்.ஜி.ஆர். பாணியில் எடப்பாடி பழனிசாமி

திருப்பூர், கோயம்புத்தூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் தங்கி வேலை செய்யும் வெளிமாநிலத் தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்குப் போக முடியாமல் தவித்துவந்தனர். உடனடியாக அவர்கள் வேலைசெய்யும் நிறுவனங்களிடமும் அரசாங்க அதிகாரிகளிடம் பேசி, அவர்களுக்கான தங்குமிடம், உணவு ஆகியவற்றை உறுதிசெய்தோம். அரசாங்கம் அறிவித்த நிவாரணப் பொருள்கள் சென்று சேராதவர்களுக்கு அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கான வேலைகளைச் செய்துவருகிறோம். எங்கள் கட்சியின் சார்பாக, 500 பேர் தன்னார்வலர்களாக அரசுக்கு உதவி செய்துவருகிறார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகமான உதவிகளைச் செய்துவருகிறோம்” என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.

மளிகைப் பொருள்கள் உதவி

விடுதலைச் சிறுத்தைகள்!

“எங்கள் கட்சியின் சார்பாக, சானிடைஸர், சோப்பு போன்ற பொருள்களை வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் மக்களுக்குக் கொடுத்துவருகிறோம். சோழிங்கநல்லூர் பகுதி முழுவதும் தொண்டரணி மாநிலச் செயலாளர் அனீபா, சப்பாடு கொடுத்துவருகிறார். தலைவரின் தொகுதியில் உணவின்றித் தவித்த நாடோடி இன மக்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் கொடுத்து உதவினோம். மதுரை மாவட்டத்தில், எங்கள் கட்சியின் அமைப்புச் செயலாளர் எல்லாளன் தலைமையில், அரிசி மற்றும் மக்களுக்குத் தேவைப்படும் விஷயங்களை அரசின் கட்டுப்பாட்டு அறைக்குப் பேசி வாங்கிக் கொடுத்துவருகிறார்” என்கிறார், வி.சி.க-வின் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு.

ஆக, தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஏதோவொரு வகையில் தங்களால் ஆன உதவிகளை மக்களுக்குச் செய்துவருகிறார்கள்…

பிறகு எப்போதும் உங்கள் விருப்பம்… இப்போது மட்டும் யோசிக்காமல் அவர்களுக்கு ஒரு சபாஷ் போடலாமே!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.