ஒரத்தநாடு அருகே ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் நெற்பயிருக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காக போர்செட்டில் படுத்திருந்த விவசாயி ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சடலமாக திருமேனி

ஒரத்தநாடு அருகேயுள்ள சங்கரநாதன் குடிக்காடு மேலத் தெருவை சேர்ந்தவர் திருமேனி. விவசாயியான இவருக்கு வயது 63. இவர் தன்னுடைய வயலில் சில தினங்களுக்கு முன் நாற்று நடும் பணியைச் செய்துள்ளார். பின்னர், பயிருக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காக நேற்று இரவு, வயலில் உள்ள பம்ப் செட்டில் தங்கியிருக்கிறார். இந்தநிலையில் அதிகாலையில் மர்ம நபர்கள் சிலர் திருமேனியின் கை, கால், முகம் என உடலில் பல இடங்களில் வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர்.

காலை அந்த வழியாக வயலுக்குச் சென்றவர்கள் திருமேனி சடலமாகக் கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததுடன் உடனடியாகப் பாப்பாநாடு போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

பம்ப் செட்

திருமேனியின் உறவினர்கள், “இப்பதான் நடவு நட்டுருக்கோம். தண்ணீர் பாய்ச்சவில்லை என்றால் நடவு செய்த பயிர் கருகிவிடும் எனக் கூறிவிட்டு பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக இரவு போர்செட்டிலேயே தங்கிக் கொள்வதாகக் கூறிவிட்டு வந்தவரை இப்படிக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனரே? இரக்கம் என்பதே அவர்களுக்கு இல்லையா?’ எனக் கதறியது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். “கொலை செய்யப்பட்ட திருமேனி வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்கு வசதியாகத் தனக்கு சொந்தமான போர்வெல் அமைந்துள்ள கொட்டகையிலேயே படுத்து தூங்குவதை வழக்கமாகக் கொண்டு இருந்துள்ளார். இந்தநிலையில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாகத் தண்ணீர் இறைக்கும் மின் மோட்டாரை இயக்கும் ட்ரான்ஸ்ஃபார்மர் குறித்து திருமேனி குடும்பத்திற்கும் வேறு சிலருக்கும் பிரச்னை இருந்து வந்ததாகத் தெரிகிறது.

Also Read: `மதுபோதையில் மனைவி, மகனை வெட்டிய தந்தை; கொலை செய்த மகன்!’ -சென்னையில் நடந்த கொடூரம் #Lockdown

இதனால் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என விசாரணை செய்து வருகிறோம். கொலையாளிகள் திருமேனியின் முகத்தை சிதைத்துள்ளனர் அவரின் வலது கையைத் தனியாக வெட்டி வீசியுள்ளனர். இதனால் இந்தக் கொலையைக் கூலிப்படையினர் செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகிறோம்’’ என்றனர். இந்தக் கொலை சம்வத்தால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளளனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தக் கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.