பீகார் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் உள்ள 60 கொரோனா நோயாளிகளில் அதாவது மூன்றில் ஒரு பங்கு, அம்மாநில சிவான் மாவட்டத்தில் உள்ள ஒரே குடும்பத்தில் பதிவாகியுள்ளது. இந்த மாவட்டம் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவிலிருந்து சுமார் 130 கி.மீ தூரத்தில் உள்ளது. இதுவே கொரோனா நோய்க்கான மையப் பகுதியாக விளங்குகிறது. கடந்த மாதம் ஒமனிலிருந்து திரும்பிய ஒருவரிடம் இந்தத் தொற்று நோய் சங்கிலி போல் பரவத் தொடங்கியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி சிவானில் உள்ள பஞ்ச்வார் கிராமத்திற்கு அந்த நபர் ஓமனிலிருந்து திரும்பியுள்ளார். அவருக்கு ஏப்ரல் 4 ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஆனால் அவர் இந்த இடைப்பட்ட காலத்தில் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன் பிறகு இவரது குடும்பத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 22 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலோருக்கு நோய்க்கான அறிகுறிகள் அதிகம் காட்டவில்லை. ஆனால் அவரது கிராமத்தில் உள்ள மற்ற இருவருக்கு கொரோனா இருப்பதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அந்த மாவட்டத்தில் இதுவரை 31 கொரோனா நோயாளிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மாநிலத்தில் உள்ள மொத்த நோயாளிகளில் பாதிக்கும் மேல் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேற்கொண்டு இவரது மொத்த குடும்ப உறுப்பினர் 23 பேர்களில் நான்கு பேர் இப்போது கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இவர்கள் இரண்டு வாரங்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அதுபோக இவரது குடும்பத்தில் உள்ள மேலும் 10 பேரின் சோதனை முடிவுகளுக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர். இதனால் இம்மாவட்டத்தில் நாற்பத்து மூன்று கிராமங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மாநிலத்தின் முதன்மை சுகாதார செயலாளர் சஞ்சய் குமார் “நோயாளிகளைக் கண்டறிய முடிந்ததற்காக நாங்கள் மகிழ்கிறோம். மார்ச் 15 க்குப் பிறகு வெளிநாட்டிலிருந்து திரும்பிய அனைவரும் பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டுள்ளனர்”என்று என்டிடிவிக்கு தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் “இந்த வைரஸ் ஒரு கண்ணுக்குத் தெரியாத எதிரி என்று நான் எல்லா மக்களிடமும் கூற விரும்புகிறேன். இந்த நேரத்தில் வீட்டுக்குள் தங்கி முன்னெச்சரிக்கையாக இருப்பது மிகவும் முக்கியம்” என்று கூறியுள்ளார்.
#BiharFightsCorona district wise cases in bihar as of 10 am on 10/4/2020.17 addition in number of positive cases in last 24 hours. pic.twitter.com/nTMqlFLzQF
— sanjay kumar (@sanjayjavin) April 10, 2020
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM