உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா தொற்றால் வல்லரசு நாடுகளே அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மருத்துவ உலகம் கொரோனாவைக் குணப்படுத்துவதற்கு மருந்தைக் கண்டுபிடிக்க வேண்டிய இக்கட்டான சூழலில் உள்ளது. ஒவ்வொருவரும் சமூக விலகலைக் கடைப்பிடித்து தங்களைத்தானே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இந்த நிலையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து, மாமல்லபுரத்திலுள்ள வீட்டிலேயே தங்கி இருக்கிறார் ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா.

கொரோனா வைரஸ்

சமூக விலகலை முறையாகக் கடைப்பிடித்து வரும் மல்லை சத்யாவிடம் ஊரடங்கு நாள்களின் அனுபவம் குறித்துப் பேசினோம், “காலையில் 5 மணிக்குக் கண் விழித்துவிடுவேன். கருப்பட்டி காபி குடித்துவிட்டு ஜன்னலைத் திறந்தால் போதும், காக்கைக்கூட்டம் என்னை நோக்கி வரும். தினமும் அந்தக் காக்கைகளுக்கு உணவும் தண்ணீரும் வைக்கும் வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறோம். அடுத்ததாகத் தெருநாய்களுக்கு உணவளித்துவிட்டு காலையிலேயே உடற்பயிற்சி செய்யத் தொடங்கிவிடுவேன். அரசியல் பிரவேசத்துக்குப் பிறகு, என்னுடைய பழைய உடல் வலிமையை இழந்திருக்கிறேன். தற்போது காலையில் இரண்டரை மணி நேரம் மாலையில் இரண்டரை மணிநேரம் என ஒருநாளைக்கு சுமார் 5 மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறேன்.

பத்திலிருந்து பதினைந்து சதவிகிதம் என்னுடைய உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுத்துள்ளதாக நான் உணர்கிறேன். பத்திரிகை செய்திகளைப் படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது, நண்பர்களிடம் போனில் பேசுவது என இதர வேலைகளைச் செய்கிறேன். டிவியில் கொரோனா செய்தி மட்டுமே காட்டப்படுகிறது. அதைப் பார்த்தால் மன அழுத்தம் ஏற்படும் என்பதால் நகைச்சுவை, திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். பொதுவாழ்க்கைக்கு வந்த பின்னர் மூன்று வேளையும் குடும்பத்தினரோடு சேர்ந்து சாப்பிடுவதென்பது எப்போதாவது ஒரு முறைதான் நடக்கும். ஆனால், கடந்த இரண்டு வாரங்களாகவே மனைவி, மகன், மகளுடன் சேர்ந்து சாப்பிடுகிறேன். எங்கள் வீட்டுப் பூனை நான்கு குட்டிகள் போட்டிருக்கின்றன. அவற்றைக் கொஞ்சி மகிழ்வோம்.

மல்லை சத்யா

Also Read: கொரோனாவுக்கு நிதி… எங்கே கைவைக்க வேண்டும் பிரதமர்?

முன்பு எங்கு சென்றாலும் காரில் புத்தகங்களைக் கொண்டு செல்வேன். இப்போது வீட்டிலிருந்து முன்பைவிட அதிக அளவு புத்தகங்களை வாசிக்கத் தொடங்கி இருக்கிறேன். மதியம் 1 மணிநேரம் சிறிய ஓய்வை எடுத்துக்கொள்வேன். மாலை 5 மணிக்குத் திரும்பவும் பயிற்சியைத் தொடங்குவேன். 24 மணி நேரத்தையும் பயனுள்ளதாக மாற்றிக்கொள்கிறேன். இதில் ஒரேயொரு வருத்தம் என்னவென்றால், வைகோவை வாரத்தில் ஒருநாளாவது எங்காவது ஓரிடத்தில் நேரில் சந்தித்துவிடுவேன். கட்சித் தொண்டர்களையும் திருமணம் போன்ற இடங்களில் சந்தித்துவிடுவேன். இப்போது யாரையும் நேரில் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. என்னோட அம்மா சாலவாக்கம் அருகே உள்ள கிராமத்தில் தங்கி இருக்கிறார்கள். ஊரடங்கிற்கு முந்தைய நாள்தான், அவரைப் பார்த்துவிட்டு வந்தேன். அவங்க என் கூட தங்கி இருக்கனும்ங்கிறதுதான் என்னோட ஆசை. ஆனா அவங்க கிராமத்துல தனிமையா இருப்பதையே விரும்புகிறார்கள்.

என்னுடைய தம்பி பிரான்ஸில் இருக்கிறான். ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகம் இருப்பதால் ஒருமாதமாக வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள் என்பதால் அவர்களுடன் தினமும் பேசுவேன். வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச்சங்கங்களைச் சேர்ந்தவர்கள், குங்ஃபூ தற்காப்பு கலைத் தொடர்பில் உள்ள நண்பர்கள் என அனைவருடன் செல்போன் வழியாகத் தொடர்பில் இருக்கிறேன். மற்றவர்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய செய்திகளை சமூகவலைதளங்களில் பதிவிடுகிறேன். எப்படியெல்லாம் என் இருப்பை தக்க வைத்துக்கொள்ள முடியுமோ அவற்றைச் செய்து வருகிறேன். பெரிய ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்கி இருந்தாலும் ஒருவனுக்கு வீடுதான் சொர்க்கம். நாம்தான் அந்த சொர்க்கத்தைக் கட்டமைத்துக்கொள்ள வேண்டும். மனைவி, மகன், மகள் ஆகியோரின் ஆசைகளைக் கேட்கிறேன். இந்த வகையில் குடும்பத்துடன் பொழுதைக் கழிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஆனாலும், இதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்…” என நிறுத்தியவர் மீண்டும் தொடர்ந்தார்,

மல்லை சத்யா

“பொதுவாழ்க்கையின் மூலம் நல்ல தலைவர்களையும் தொண்டர்களையும் பெற்றிருக்கிறோம். எங்களுடைய திறமையின் மூலம் நிலவணிகம் உள்ளிட்ட தொழில் மூலமாகச் சம்பாதித்துக்கொண்டிருக்கிறோம். தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்ட காரணத்தால் நிறைய கடன் ஏற்பட்டிருக்கிறது. இந்த இக்கட்டான நிலையில் வாழ்க்கையை மீண்டும் முன்னெடுக்கும்போது கடினமான சூழலே நிலவுகிறது. வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் கடனைக் கேட்டுத் தொந்தரவு செய்யக் கூடாது என அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள். ஆனாலும், வங்கிகளிடமிருந்து கடனைக் கேட்டு தினமும் இரண்டு அழைப்புகளாவது வந்துவிடுகின்றன. வாகனக் கடன், மார்வாடிக் கடன் என எல்லாமே மன அழுத்தத்தைக் கொடுத்தாலும், நாம் என்றைக்காவது ஒருநாள் அவற்றைத் திருப்பிச் செலுத்திவிடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சுற்றுலாத்துறை, நில வணிகம், தொழிற்சாலைகள் என அனைத்துத் துறையும் முடங்கியுள்ளது. உலக அளவில் அனைத்து நாடுகளும் இதிலிருந்து மீள வேண்டிய சூழல் உள்ளது. பெட்டிக்கடை முதல் பெரிய தொழில் நிறுவனங்கள் வரை பாதிப்பிலிருந்து மீள்வது அவ்வளவு சாதாரணமல்ல.

மல்லை சத்யா குங்ஃபூ பயிற்சி

Also Read: கொரோனாவைத் திறம்பட சமாளித்தும் தைவானை உலக நாடுகள் புறக்கணிக்கக் காரணம் என்ன?

மக்களுக்குச் சிகிச்சை அளிக்கும் அளவுக்குப் போதிய அளவில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லை என வல்லரசு நாடுகளே புலம்புகின்றன. வளர்ந்த நாடுகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களைக் காட்டிலும் நைட்ரஜன் குண்டுகளும் ஏவுகணைகளும் அதிக அளவில் இருக்கின்றன. வல்லரசு நாடாக இருப்பதைவிட நல்லரசு நாடாக இருக்க வேண்டும் என்பதுதான் கொரோனா மூலமாக உலகம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்” என்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.