நடிகர் விக்ரம் நடிப்பை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது.
சினிமா வாழ்க்கையில் நிறையப் போராட்டங்களுக்குப் பிறகு முன்னேறி வந்தவர் விக்ரம். அவரது அர்ப்பணிப்பு மிக்க நடிப்பால் அவர் தன்னை ஒரு முன்னணி நடிகராகத் தமிழ் சினிமாவில் தக்க வைத்துக் கொண்டார். தமிழ் நடிகர்களிலேயே விக்ரம் அனைத்து வகையான கதாபாத்திரங்களுக்கும் பொருந்தக்கூடியவர். மேலும் தனது நடிப்புத் திறமைகளால் தேசிய விருது, பிலிம்பேர் விருது எனப் பல விருதுகளை வென்றவர்.

விக்ரம் தற்போது இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வரும் ‘கோப்ரா’ படத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் இந்தப் படத்திற்காக 20க்கும் மேற்பட்ட தோற்றங்களில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்போது, விக்ரம் குறித்து ஒரு தகவல் கசிந்து வருகிறது. நடிகர் விக்ரம் இனிமேல் தனது மகன் துருவ் விக்ரமின் திரை வாழ்க்கை எதிர்காலம் குறித்து கவனம் செலுத்த உள்ளதாகவும் ஆகவே அவர் நடிப்பிலிருந்து விலகத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. இது குறித்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.
விக்ரம் தற்போது ‘கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன்’, ‘மகாவீர் கர்ணன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் அவர் நடித்து முடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ வெளியாவது தாமதமாகி வருகிறது. இதில் ‘கோப்ரா’ படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது. கொரோனா வைரஸ் அச்சத்தால் ஒட்டுமொத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. எனவே இந்தப் படத்தின் வேலைகள் கொஞ்சம் பாக்கி உள்ளன.

கடந்த காலங்களில் தனது படங்கள் மூலம் பேக் டு பேக் பிளாக்பஸ்டர் வெற்றிகளை வழங்கிய விக்ரம் கடந்த சில ஆண்டுகளாக ஒரு வெற்றிப் படத்தைக் கொடுப்பதற்காகப் போராடி வருகிறார். எனவே, அடுத்த சில ஆண்டுகளில் திரைத்துறையிலிருந்து இவர் ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இனிமேல் இவரது மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ள படங்களில் மட்டும் கவனம் செலுத்தலாம் என அவர் முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால் விக்ரமின் இந்த முடிவு குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்தத் தகவல் ஒருவேளை உண்மையாக அமைந்தால் அது அவரது ரசிகர்களுக்குக் கட்டாயம் அதிர்ச்சியூட்டும் செய்தியாகவே இருக்கும்.