கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் பரவல் தடுப்புப் பணிகளை உலக நாடுகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசு மற்றும் தனியார் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் உதவி வருகின்றனர்.

கொரோனா வைரஸ்

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவைச் சாதகமாகப் பயன்படுத்தி, `தான் ரகசிய போலீஸ்’ எனக் கூறி கொள்ளையில் ஈடுபட்ட டுபாக்கூர் போலீஸை சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் கூட்டுறவுப் பட்டியைச் சேர்ந்தவர் அருண் பிரசாத். மோசடிப் பேர்வழியான இவர் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு தர்மடி வாங்கியவர்.

இவர் மீது கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சோம்பேறியாக ஊருக்குள் சுற்றிவந்த இவர், தனது பைக்கில் போலீஸ் என எழுதிக்கொண்டு சாலூர், மேலப்பூங்குடி, கீழப்பூங்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தான் போலீஸ் என்று கூறி 144 ஊரடங்கு உத்தரவின்போது சாலையில் செல்லும் நபர்களை மடக்கிப் பிடித்து, “நான் ரகசிய போலீஸ் உங்களைப் போல் சட்டத்தை மதிக்காதவர்கள் மீது வழக்கு பதிவு செய்வேன்” எனக் கூறி பணம் மற்றும் பொருள்களைப் பறிமுதல் செய்துள்ளார்.

அருண் பிரசாத்தின் வாகனம்

மேலும், சிலரின் பைக்குகளை கூட பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் வந்து வாங்கிக்கோ என்று கூறி ஏமாற்றியுள்ளார். இந்த நிலையில், காவல்துறையினர் பெருமாள்பட்டி என்ற இடத்தில் தணிக்கை செய்துகொண்டிருந்தபோது போலீஸைக் கண்ட உடன் அருண் பிரசாத் பைக்கில் விரைவாகச் சென்றுள்ளான். இதைக்கண்ட சிவகங்கை தாலுகா போலீஸ் மற்றும் மதகுபட்டி போலீஸ் அருண் பிரசாத்தை பைக்கில் விரட்டிச் சென்றுள்ளனர்.

திருமலை அருகே சென்றபோது அங்கிருந்த பாலத்தில் அருண் பிரசாத் மோதி அருகே இருந்த பள்ளத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் அருண் பிரசாத்தின் கை எலும்பு முறிந்தது. அருண் பிரசாத்தை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பிய போலீஸார் தொடர் விசாரணை செய்துவருகின்றனர். அப்போது அவர், காவலர் எனக்கூறி வழிப்பறியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.

அருண் பிரசாத்

இதைத்தொடர்ந்து வழிப்பறிக் கொள்ளையன் கைது செய்த சிவகங்கை தாலுகா காவல் நிலைய போலீஸார் அவரிடமிருந்து பணம், செல்போன் உள்ளிட்ட பொருள்களைப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊரடங்கைப் பயன்படுத்தி காவலர் எனக்கூறி கொள்ளையன் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம், சிவகங்கைப் பகுதியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.