சென்னை திருமங்கலத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், நேபாளத்தைச் சேர்ந்தவர் காவலாளியாகப் பணியாற்றிவருகிறார். அதே அடுக்குமாடி குடியிருப்பில் மனைவியுடன் அவர் தங்கியிருந்தார். சம்பவத்தன்று அவர் இரவுப்பணியில் இருந்துள்ளார். அவரின் மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்த நிலையில், அந்தப் பெண் திடீரென சத்தம் போட்டுக்கொண்டே கீழே ஓடிவந்தார். அங்கு பணியில் இருந்த கணவரிடம், தன்னை யாரோ ஒருவர் கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகக் கண்ணீர்மல்க கூறினார்.

அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த காவலாளி, உடனடியாக வீட்டுக்குச் சென்றார். பின்னர் அவர் தன்னுடைய மனைவிக்கு ஆறுதல் கூறிவிட்டு அவரை அழைத்துக் கொண்டு திருமங்கலம் காவல் நிலையத்துக்குச் சென்றார். உதவி கமிஷனர் சிவக்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரவி, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பெண் காவலர்களைக் கொண்டு விசாரித்தார். அப்போது அவர், நடந்த விவரங்களைக் கூறினார்.
இதையடுத்து, அந்தப் பெண்ணை பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், சம்பவம் நடந்த அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்றனர். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர், கால் சட்டை, மேல் சட்டை அணிந்தபடி அடுக்குமாடியின் காம்பவுன்ட் சுவரை ஏறிக் குதிக்கும் காட்சி பதிவாகியிருந்தது. அந்த வாலிபரின் புகைப்படத்தை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் போலீஸார் காண்பித்தனர்.
Also Read: மாதுளை ஜூஸில் மயக்க மருந்து; பாலியல் தொல்லை! -`நாங்களும் நல்லவுங்கத்தான்’ படத்தின் ஹீரோ கைது

அதைப் பார்த்த அந்தப் பெண் அவனை அடையாளம் காட்டினார். இதையடுத்து, அந்த வாலிபர் யாரென்று திருமங்கலம் போலீஸார் விசாரித்தனர். அப்போது இன்ஸ்பெக்டர் ரவிக்கு ஒரு முக்கிய தகவல் கிடைத்தது. அதில், அந்த வாலிபர் சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (22) எனத் தெரியவந்தது. இதையடுத்து ராமகிருஷ்ணனைப் பிடித்த போலீஸார், காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரித்தனர். அப்போது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, ராமகிருஷ்ணன் மீது பாலியல் பலாத்காரம் உட்பட 2 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப் பதிந்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்த கத்தியைப் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மீது கொள்ளை வழக்கு நிலுவையில் உள்ளது. இவர், அந்தப் பகுதியில் உள்ள பால் கடையில் வேலைசெய்துவருகிறார்.
இதனால், பால் பாக்கெட்டுகளை விநியோகிக்க அதிகாலை நேரத்தில் ராமகிருஷ்ணன் செல்வதுண்டு. அப்போது திருட்டு சம்பவங்களிலும் ஈடுபடுவதுண்டு. அதைப் போலத்தான் திருமங்கலத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திருட முடிவு செய்து உள்ளே நுழைந்துள்ளார். அப்போதுதான் அந்தப் பெண்ணை கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ராமகிருஷ்ணனுக்கு இன்னும் திருமணமாகவில்லை” என்றார்.
சென்னையில், திருடச் சென்ற இடத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.